சொல் தேடல் -13
தமிழ் இலக்கணத்தில் புதிய சொற்களை உருவாக்குதற்குரிய விதிகள் உள்ளன. செல்வு (செல்வம்) என்பதனோடு அன் விகுதி சேர்த்தால் செல்வன் என்னும் ஆண்பாற் சொல்லும் இகர விகுதி சேர்த்தால் செல்வி என்னும் பெண்பாற் சொல்லும் கிடைக்கும்
தமிழ் இலக்கணத்தில் புதிய சொற்களை உருவாக்குதற்குரிய விதிகள் உள்ளன. செல்வு (செல்வம்) என்பதனோடு அன் விகுதி சேர்த்தால் செல்வன் என்னும் ஆண்பாற் சொல்லும் இகர விகுதி சேர்த்தால் செல்வி என்னும் பெண்பாற் சொல்லும் கிடைக்கும். இதனையொட்டி இளைஞன் என்பதற்குப் பெண்பாலாக இளைஞி என்னும் சொல்லைப் படைத்துத் தம் நூலில் ஆண்டுள்ளார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். இகர விகுதி ஒரு செயலைச் செய்கிறவனைக் குறிக்கவும் பயன்படும். அதனை வினைமுதல் விகுதி என்பர். திருவள்ளுவர் சினம் சேர்ந்தாரைக் கொல்வது என்பதனைத் தெரிவிக்க, "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்று ஒரு சொல்லைப் படைத்துள்ளார். மண்ணை வெட்டுவது மண்வெட்டி; தேங்காயைத் துருவுவது தேங்காய்த் துருவி; மூடுவது மூடி; தலையில் இருக்கும் ஈரைக் கொல்வது ஈர்கொல்லி. இந்த விதியினை மனத்திற்கொண்டு இந்தவாரச் சொல்லின் தமிழாக்கத்தைக் காணலாம்.
ஐம்பதாண்டுகளில் அடுக்களையில்தான் எத்தனை பெரிய மாற்றங்கள்! முன்பு சமைப்பது அரிய பணி. பாவம் பெண்கள் செல்வர் வீடாயினும் ஏழையின் குடிசையாயினும் விரட்டியும் விறகும் கொண்டு அடுப்பை மூட்டி ஊதி ஊதி எரிய வைத்துச் சமைக்க வேண்டும். ஈர விறகாக இருந்துவிட்டால் போதும் போதும் என்று ஆகிவிடும். புகையில் கண்கள் சிவந்துவிடும். இன்று பலரும் எரி வளியால் சமைக்கின்றனர்.
சிற்றூர்களில் வாழும் வறியவர்கள் மிகச் சிலரே சுள்ளியால் அடுப்பெரித்துச் சோறாக்குகிறார்கள். மண் பானையில் நீர் ஊற்றி உலைவைத்து அரிசியைப் போட்டுக் கொதி வந்தவுடன் வடித்துச் சோறாக்கும் நிலையும் இன்று மறைந்துவிட்டது. சோற்றுக் கஞ்சியும் வடிதட்டும் காண்பதற்கு அரிய பொருள்களாகிவிட்டன. இன்று கை கரியாகாமல் கண்சிவக்காமல் எளிதில் சமைத்துவிடலாம்.
Advertisement
Pressure cooker இல் நீரை ஊற்றி, அரிசியை இட்டு மூடி, அடுப்பை மூட்டிவிட்டால் அரைமணிக்குள் சோறு தயாராகிவிடும். இப்படிச் சமையலுக்குப் பயன்படும் பாத்திரத்தைப் படிக்காத பெண்கள்கூடக் குக்கர் என்னும் ஆங்கிலச் சொல்லாலேயே குறிக்கிறார்கள். காரணம், அப்பொருள் வந்தபொழுதே அதற்குரிய தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தத் தவறியதும், அவ் ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் போல் வழங்குவதற்கு எளிதாக அமைந்திருப்பதும் ஆகும். அதனைத் தமிழில் எப்படிக் குறிப்பது?
பெங்களூருவிலிருந்து சு. சாயிகிரிதர், "1679இல் டெனிஸ் பாபின் (Denis Papin)என்பவர் முதன்முதலில் Pressure Digester என்ற கருவியைப் பயன்படுத்திச் சமைக்கும் நேரத்தைக் குறைவாக்க முயன்றார். ஆயினும் 19ஆம் நூற்றாண்டு வரை இக்கருவி அதிகப் பயன்பாட்டிற்கு வரவில்லை. 1919இல் யோசே அலெக்ஸ் மார்தினேஸ் என்னும் ஸ்பானிஷ்காரர் ஒரு நீரழுத்தச் சமையற் கருவியை உருவாக்கி அதற்குத் தனியுரிமையும் பெற்றார்' என்று வரலாற்றைத் தெரிவித்துவிட்டுத் தாம் உருவாக்கிய சொற்களைத் தந்துள்ளார். அவருடைய தகவலுக்கு நன்றி. நண்பர்கள் தந்துள்ள சொற்களைச் சலித்து எடுத்ததில் கீழ்க்கண்ட சொற்கள் கருதுவதற்குரியனவாய் அமைந்துள்ளன:
* சு. சாயி. கிரிதர் - அழுத்த ஆக்கி, நீராவி அழுத்த உணவாக்கி
* தி. அன்பழகன் - அல்வடி குண்டா, அழுத்தொலிக் குண்டா
*க. அன்பழகன் - நீராவிச் சமைப்பான், காற்றுப் புகாக் கருவி
* என்.ஆர். ஸத்யமூர்த்தி - விரைவாக்கி, அழுத்தவாக்கி
*சோ. முத்துமாணிக்கம் - காற்றழுத்தச் சமைப்பான்
*க. பலராமன் - அழுத்த அடுகலன், செறிவடுகலன்
*இரா. மோகனசுந்தரம் - அழுத்தச் சமைப்பான்
* ச. செந்திலாண்டவன் - உயர் அழுத்தக்கலன்
* சந்திரா மனோகரன் - உயர் அழுத்தச் சமையற்கலன்.
*ப. இரா.இராசஅம்சன் - நீராவி வேகு கலன், அழுத்தச் சமைகலன்
தமிழாக்கத்திற்கு ஆங்கிலச் சொல்லைத் தரும்போதே அதற்குரிய தமிழாக்கத்தை உருவாக்கி வைத்துக்கொள்வதும் நண்பர்கள் தெரிவிக்கும் மொழியாக்கம் அதனினும் சிறப்பாக அமைந்திருக்குமானால் அதனை ஏற்றுக் கட்டுரையில் மாற்றம் செய்வதும் என் வழக்கம். கோ. மன்றவாணன் எழுதியிருந்த தமிழாக்கத்தைப் பார்த்தபோது ஒரே இன்ப அதிர்ச்சி! அவர் உருவாக்கியிருந்த சொற்களிடையே யான் உருவாக்கிய சொல்லும் இருந்தது. அவர் தந்துள்ள சொற்கள் ஆவி சமைகலன், அழுத்த அவிகலன், அவிகலன், அவி குண்டா என்பன.
யான் எழுதிவைத்திருந்த தமிழாக்கம் வருமாறு: வேவது அவித்தல் ஆகும். ஊர்ப்புறங்களில் நெல்லை வேக வைத்தலை நெல் அவித்தல் என்பர். உணவுப் பொருளாகிய இட்லியின் பழைய வடிவம் இட்டவி. இட்லி பானை தமிழர் கண்டுபிடித்த குக்கர். சூட்டினால் தன் உள்ளே ஊற்றிய நீரை ஆவியாக்கி அதன் அழுத்தத்தால் உள்ளே இடப்பட்ட உணவுப்பொருளை அவிக்கும் பிரஷர் குக்கரை அவிகலன் என்றோ. மேலே குறிப்பிட்டுள்ள இலக்கணத்தையொட்டி அவியி (அவி + இ) என்றோ சுட்டலாம். சொல்வதற்கு முயற்சி குறைவாக உள்ள இப்புதிய சொல்லும் பழகப் பழக எளிதாகிவிடும்.
Pressure cooker- அவிகலன் (அ) அவியி
அடுத்த வாரத்திற்குரிய சொல்
Omni bus (ஆம்னி பஸ்)