முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -10

திருநாவுக்கரசர் கையில் உழவாரம்; திலகவதியார் கையில் திருவலகு. இவை புறத் திருத்தொண்டின் அடையாளங்கள். திருநாவுக்கரசர் உழவாரப்படையால்

Updated On : 31 மே, 2015 at 1:15 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:08 AM

திருநாவுக்கரசர் கையில் உழவாரம்; திலகவதியார் கையில் திருவலகு. இவை புறத் திருத்தொண்டின் அடையாளங்கள். திருநாவுக்கரசர் உழவாரப்படையால் கோயிலைச் சுற்றிலும் கிடந்த கல்லையும் புல்லையும் அகற்றித் திருவீதிப்பணி செய்தார் என்றும், திலகவதியார் திருவதிகைக் கோயிலைப் புலர்காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி, மெழுகித் தூய்மை செய்ததோடு பூக்களைப் பறித்துவந்து பூமாலை கட்டித் தந்து, இறைத்தொண்டு புரிந்தார் என்றும் புகல்கிறார் தெய்வச் சேக்கிழார். பெருக்குவதை "அலகிடுதல்' என்பது இலக்கிய வழக்கு.

""நெஞ்சே, நன்னிலைபெற நினைத்தால் இங்கே வா. நான் சொல்கிறபடி செய். அன்றாடம் வைகறைப் பொழுதில் எழுந்து கோயிலுக்குச் செல்; அலகிட்டு மெழுகு; பூமாலை புனைந்து பெருமானுக்குச் சூட்டு; அவனைப் புகழ்ந்து பாடு; தலைதாழ்த்திக் கும்பிடு; கூத்தாடு. சங்கரா, ஆதிமூர்த்தியே, ஆரூரா என்று அரற்று'' என்கிறார் ஆளுடைய அரசு. 

முன்னாளில் தெருக்கள் எல்லாம் மண் தெருக்கள்;  வீடுகள் பெரும்பாலும் கூரை வேய்ந்த மண் குடிசைகள்; அங்கங்கே ஒருசில கல்வீடுகள்; சேற்றைக் குழைத்துக் கட்டிய மண்சுவர்கள்; மண்தரை. எனினும், தெருவோ வீடோ எதுவாயினும் வாருகோலால் அன்றாடம் பெருக்கிச் சாணத்தால் மெழுகித் தூய்மையாகப் பராமரித்து வந்தனர். புனிற்றுப் பசுவின் சாணம் நச்சு உயிரிகளைக் கொல்லும் திறன்மிக்கது என்று அறிந்திருந்தனர். வாருகோலுக்கு அலகு, விளக்கமாறு, துடைப்பம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

Advertisement

துடைப்பத்தில் தென்னந்துடைப்பம், பூந்துடைப்பம் என்று வகைகள் உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் துடைப்பம் இன்றும் இருக்கிறது. ஆனால், செல்வர்கள் வீடுகளில் இதனைக் காண்பது அரிது. வளமனைகளில் எங்கும் வண்ண ஓடுகள் பதிக்கப்பட்டுப் பளபளக்கும் தரைகள். தரைகளையும் மூடிக்கொண்டு கிடக்கும் வண்ண விரிப்புகள்; இத்தகைய வீடுகளைத்  துடைப்பம் கொண்டு பெருக்கவும் சாணமிட்டு மெழுகவும் இயலுமா? அதனால், அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசி, தும்புகளை அகற்றுவதற்கு Vacuum Cleaner  என்னும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியல் தந்த வசதிகளில் இதுவும் ஒன்று. இது மின்சாரத்தால் இயங்குவது; உள்ளே வெற்றிடம் கொண்டது; தூசிகளை உறிஞ்சிக்கொள்வது அல்லது விசையோடு ஊதி வெளியேற்றுவது. இது குப்பைகளை அகற்றிய விளக்கமாற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.

இச்சொல்லுக்குச் சிலர் தூய்மைப்படுத்தும் கருவி, வெற்றிட அசுத்தம் போக்கும் கருவி, வெள்ளிடத் தூசு உள்வாங்கி போன்று தொடர்களாகத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். இவை வழங்குவதற்கு வாய்ப்பாக இல்லை.

அழுக்கிழுப்பான் (என். எஸ்.இரணியநாதன்), வெற்றிடத் துடைப்பான் (ஜனநேசன்), உறிஞ்சு தூசகற்றி (ச.செந்திலாண்டவன்), காலிலித் துலக்கி (க. பலராமன்), உறிஞ்சூதித் துடைப்பான் (தெ. இராசாமணி), மாசு உறிஞ்சி (ப. இரா.இராசஅம்சன்), தூசுறிஞ்சி (சந்திரா மனோகரன், டி.வி.கிருஷ்ணமூர்த்தி) ஆகிய சொற்களை உருவாக்கித் தந்துள்ளனர்.

வெ.ஆனந்த கிருஷ்ணன் தரை, தரைவிரிப்பு, அறைகளின் மூலைமுடுக்குகள், மின்விசிறி, மகிழுந்து உள்

பகுதிகளில் உள்ள அழுக்கு, ஒட்டடை, புழுதி ஆகியவற்றைத் துப்புரவு செய்யும் மின்பொருள் கருவி என்று விளக்கம் தந்து, வெற்றிடத் துப்புரவாக்கி, தூசி உறிஞ்சி ஆகிய சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலோர் கருத்தையொட்டித் தூசுறிஞ்சி என்று குறிக்கலாம். அஃது உறிஞ்சுவதோடு ஊதியும் வெளியேற்றுகிறது. உறிஞ்சு ஊதித் துடைப்பான். என்றால் அது மூன்று சொல் தொடராகிவிடுகிறது.

பெரும்பாலும் தூசியை உறிஞ்சுவதால் தூசுறிஞ்சி எனலாம் அல்லது மின்சாரத்தால் ஒளிரும் பல்பு, சுற்றும் விசிறி, எரியும் அடுப்பு, ஓடும் வண்டி ஆகியவற்றை முறையே மின்விளக்கு, மின்விசிறி, மின்அடுப்பு, மின்வண்டி என்று வழங்குவது போல மின்சாரத்தால் இயங்கும் இதனை, மின்துடைப்பம் என்று எளிதாகக் கூறலாம். வெ.ஆனந்த கிருஷ்ணன், மின்பொருள் கருவி என்று தம் விளக்கத்தை முடித்திருப்பது இதற்குத் துணையாக அமைந்துள்ளது.

Vacuum Cleaner - தூசுறிஞ்சி (அ) மின்துடைப்பம்.

அடுத்த வாரத்திற்குரிய சொல்  வானூர்தியில் ஒன்றான Drone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.