தமிழ்மணி

கொடிய மிருகம் எது?

கொடிய மிருகம் எது?'. இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம்(ஸல்) "நாக்கு' எனப் பதில் அளிக்கிறார்.

புலவர் தா. குருசாமி தேசிகர்

கொடிய மிருகம் எது?'. இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம்(ஸல்) "நாக்கு' எனப் பதில் அளிக்கிறார். திருக்குறள், அடக்கமுடைமை அதிகாரத்தில் வரும் 127, 129 ஆகிய இவ்விரண்டு குறள்களும் திருவள்ளுவர் தந்த நன்கொடைகள். இவற்றை உள்வாங்கி, வளையாபதிச் செய்யுள் "நா' பற்றி நவில்வதும் சித்திக்கத்தக்கது.

"ஆக்கப் படுக்கும் மருந்து அளைவாய்ப் பெய்விக்கும்

போக்கிப் படுக்கும் புலைநரகம் துய்ப்பிக்கும்

காக்கப் படுவனவும் இந்திரியம் ஐந்தினும்

நாக்கல்ல தில்லை நனிவெல்லுமாறே'

என்ற பாடல் "நாக்கு' - ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலும் செய்யும் என்று சிந்திக்கப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக்

"கொண்டு வா' என்றதற்குப் பதில் "கொன்று வா' என "நா' தவறிச் சொல்லி, உயிர்விட்டதைச் சிலப்பதிகாரம் சித்திரிக்கும்.

சிற்றம்பலநாடிகளின் சீடர் ஒருவர், அறுபத்துமூவர் சீடரோடு, ஓர் இல்லத்தில் குருவோடு மகேஸ்வர பூஜையில் (உணவு அருந்தல்) நெய்க்குப் பதிலாக தவறுதலாக, வேப்பெண்ணையை சோற்றில் பெய்தபோது, அவற்றை மற்றை சீடர்கள், நாச்சுவை பேணாது, தவச்சுவை பேணி அருந்தும்போது, ஒரு சீடர் மட்டும் "வேப்' என்று சொல்ல எத்தனித்தபோது, குருவானவர் முழு வார்த்தையும் சொல்லவிடாமல் அவரைப் பார்த்து "தவச்சுவை அறியாது நீ நாச்சுவை பேணியதால், மகேஸ்வர பூஜையில் இருந்து வெளியேறச் சொன்ன வரலாறு சித்தர்களுக்குள் நடந்த சம்பவமாகும். இதில் "நாச்சுவை கண்டவன் தவச்சுவை அறியான்' என்னும் உண்மை, விளக்கம் பெறும்.

இதைத்தான் திருவள்ளுவர் "நாச்சுவை' ஒன்றே உணர்வாரைத் திட்டித் தீர்க்கிறார்; அவர் வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? என்பார் நாச்சுவை விரும்பிகளை.

கல்வியினும் சிறப்புள்ள கேள்வியைப் பெறாதார், உணவுண்டு உயிரோடிருப்பதால் நன்மையும், இறத்தலால் இழப்பதும் இல்லை என்பதனால், கல்வி, கேள்வி உடைய "நாவே' நல்வாழ்விற்குப் பயன்தரும் என்பது பெறப்படும்."கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என்றார் காழிவேந்தர். அவரே, "நல்லவாறே உன் நாமம் சொல்ல வல்லவாறே வந்து நல்காய்' என்று வழிமொழிந்தார். நாவை நல்வழிக்குத் திருத்தி ஆள்வார் நம் சம்பந்தப் பெருமானார்.

திருஞானசம்பந்தர், ஆமாத்தூர் என்ற தலத்துக்குப் போய் பெருமானை வழிபட்டார். அத்தலத்து அன்பர்கள் பலரும் விவசாயம் செய்பவர்கள். அவர்கள் அனைவரும் நாச்சுவை மட்டும் அறிபவர்கள். அவர்கள் ஆளுடைய பிள்ளையை வரவேற்று, ஆசி வழங்க வேண்டினர். சம்பந்தர் அவர்களைப் பார்த்து, ""உங்கள் நாவை இன்னும் நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தவில்லை'' என்றார்.

அப்படி என்றால் "என்ன செய்வது?' என்று விவசாயிகள் வினவ, "சிவாய நம' என்று சொல்லுங்கள் - அதுவே நல்ல காரியம் என்றார்.

"இல்லை என்றால் என்ன?' என்று எதிர்வினாத் தொடுத்தனர். "சிவநாமம்' சொல்லாத "நா' அனைத்தும் வாய்ச்சுவை மட்டும் அறிந்து வெறுமனே கிடப்பதால் "நா' இருந்தும் அனைவரும் ஊமைகள்தான் என்றார். அதைக் கேட்ட அனைவரும் "இப்பொழுதுதான் நல்வாழ்வு பெற்றோம்' என்று சம்பந்தரை வணங்கி ஆசிபெற்றனர். அவ் ஆமாத்தூர் பாடல் இது:

"ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே'

சிவநாமம் உச்சரிக்காத "நா' இருந்தும் ஊமையே என்ற எச்சரிக்கை - சுவை உணவு உண்பார் உணரவேண்டியதாம்.

"நாவைக் கொடிய மிருகம்' என்று உருவகம் செய்தாலும், நாய், சிறுத்தை, சிங்கம் முதலிய மிருகங்களை, யானை உட்பட பழக்கப்படுத்தினால் நல்வழிக்குக் கொண்டு வருவதை அனுபவத்தில் அறியலாம். அதைப்போல "நாவை' நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறாமல், "நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' என்ற சுந்தரர் திருவாக்கைக் கொண்டு நாவைப் பயில்விக்க வேண்டும்.

அப்பரடிகள் "வாயே வாழ்த்து கண்டாய்' என்று நாவிற்கு ஆணை தருவார். நமக்குச் "சேமிப்புப் பொருள்' சிவபெருமானே என உணர்ந்து, "சிவாய நம' எனச் சொல்லி, மனத்தால் சிவத்தைத் தியானித்து எப்போதும் ஓதிக்கொண்டிருந்தால் சிவத்தின் அருளைப் பெறலாம் என்று அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தத்தில் வழிமொழிவார். ""திருவாய்ப் பொலிய சிவாய நம என்று நீரணந்தேன்'' என்பதும், அதன் பயனாகக் சிவகதியைப் பெறலாம் என்பதும் அப்பரடிகள் அனுபவம்.

செந்தமிழ்க் குமரகுருபரர் காசிக் கலம்பகத்தில் தமிழ்ப் படித்த - தமிழராய்ப் பிறந்த அனைவருக்கும் "செவியறிவுறூஉ' கூறுகிறார். "நால்வரின் திருவாக்குகளை நாத்தழும்பு ஏற ஓதுங்கள் அதன் பயனாகச் சிவலோகச்

செந்நெறி கிட்டும்; உயிர்க்கும் நலம் உண்டாகும்' என்ற கருத்தில்,

"தேத்தமிழ் தெளிக்கும் செந்நாப் புலவீர்!

முடிவினும் முடியா நலங்க கொடுக்கும்

செந்நெறி வினவுதிராயின் இன்னிசைப்

பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை

நாத்தழும் பிருக்க ஏத்துமின் நீரே'

என்ற அருள்வாக்கு வரிகள், நாவாகிய கொடிய மிருகத்தை, நமக்கு நன்றியுள்ள மிருகமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று உணர்ந்து நாவைக் காப்போமாக.

நிறைவாக சுந்தரர் பரவையுண்மண்டளித் தலத்துப் பெருமானை விளித்து விண்ணப்பம் செய்வதில்,

"நாவாயால் உனையே நல்லன சொல்லுவோர்க்கு

ஆவா என் பரவையுண் மண்டளி அம்மானே'

என்ற வரிகளில், "நாவையுடைய வாயால் உன்னையே நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வோனாகிய எனக்கு ஐயோ! பாவமே என்று இரங்கி அச்சம் தீர்த்து அருள்க' என்று கருத்து மிளிர்கிறது. சுந்தரர் "நாவாய்' என விதந்தோதியது, "அவையிரண்டும் பிறிதொன்றைச் சொல்ல முயலாமையை விளக்குதற் பொருட்டு' என்றும், "நல்லன' என்று அருளியது "பலருக்குச் செய்த திருவருட் செயல்கள்' என்றும், "சொல்லுதல்' என்பது, "சொல்லிப் புகழ்தல்' என்றும் பொருட்புகல் தருமை ஆதீன உரையால் தெரியவரும்.

"நாமாறாது உன்னையே நல்லன சொல்லுவார் போமாறு என்?'

"வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து ஆர்க்கின்றேன்'

என்பன போன்ற சுந்தரர் திருவாக்கில், வாயையும் நாக்கையும் நல்வழிக்குத் திருத்தி ஆட்கொள்ளும் வல்லமையை நினைவுகூர்ந்து வணங்கி வாழ்த்துவோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT