""டோ... டோ...''
ஒரு சமயம் திருநெல்வேலியிலுள்ள மாதா கோயிலுக்கு இங்கிலாந்திலிருந்து ஓர் ஆங்கிலப் பாதிரியார் வந்திருந்தார்.
ஒரு சமயம் திருநெல்வேலியிலுள்ள மாதா கோயிலுக்கு இங்கிலாந்திலிருந்து ஓர் ஆங்கிலப் பாதிரியார் வந்திருந்தார். அவர் ஏற்கெனவே கொஞ்சம் தமிழ் படித்தவர். அவரிடம் திருக்குறளின் பெருமையைப் பற்றியெல்லாம் யாரோ சொல்லியிருந்தார்கள். "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையைப் பற்றியும், அவர் எழுதிய "திருவள்ளுவர் நூல் நயம்' என்ற நூலைப் பற்றியும் கூட அவரிடம் கூறியிருந்தார்கள்.
ஒருநாள் ரா.பி.சேதுப்பிள்ளையைப் பாதிரியார் அழைக்கவே, அவரும் சென்று அவருடன் உரையாடலானார். உரையாடலின் இடையே திருக்குறளைப் பற்றிப் பாதிரியார் பேசத் தொடங்கினார்.
""என்ன மிஸ்டர் பிள்ளை. உங்கள் திருக்குறளில் எல்லாம் இருக்கிறதாமே; அதில் இல்லாத விஷயமே இல்லையாமே?'' என்று குறும்பாகக் கேட்டார்.
""அப்படித்தான் நினைக்கிறேன். இது என் கருத்து மட்டும் அல்ல... திருவள்ளுவரோடு சமகாலத்தவராக வாழ்ந்த சங்கப் புலவர்களும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய பாராட்டுரைகளை எல்லாம் "திருவள்ளுவ மாலை' என்னும் நூலில் விரிவாகக் காணலாம்'' என்றார் சொல்லின் செல்வர்.
பாதிரியார் சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார். சரியாக அந்த நேரம் பார்த்து வெள்ளாடு ஒன்று அங்கேயுள்ள செடிகளை மேய வந்தது. அதைக் கண்ட பாதிரியாரின் வேலையாள், ""தோ... தோ...'' என்று சொல்லி அதை அதட்டித் துரத்தினான். அந்த ""தோ... தோ...'' என்ற ஒலி பாதிரியாரின் காதில் ""டோ... டோ...'' என்று கேட்கவே, சொல்லாடலை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு ஏதுவாக இப்போது பாதிரியாருக்கு ஒரு பிடி அகப்பட்டுவிட்டது.
உடனே அவர், ""சரி, மிஸ்டர் பிள்ளை, இந்த ஆள் கூறிய ""டோ... டோ...'' என்ற வார்த்தை உங்கள் திருவள்ளுவரின் குறளில் இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அதே சமயம் பளிச்சென்று ஒரு விஷயம் ரா.பி.சேதுப்பிள்ளையின் மூளையில் உதித்தது. உடனே, ""ஓ... டோ.... டோ... என்ற வார்த்தை இருக்கிறதே!'' என்றார் புன்முறுவலுடன்.
""அப்படியா? சொல்லுங்கள் பார்க்கலாம்'' என்றார் பாதிரியார். உடனே சொல்லின் செல்வர்,
"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் என்னும்
பிறர்குரியா டோ டோயாதார்' (15:9)
என்னும் குறட்பாவைச் சொல்லிக் காட்டினார். (இக்குறள் சில பதிப்பில், "பிறர்க்குரியாள்
தோள் தோயாதார்' என்று பிரித்து பொருள் தரப்பட்டிருக்கும்)
சொல்லின் செல்வர் கூறியதை நம்பாமல் பாதிரியார் தமது கோயில் நூலகத்திலிருந்து ஒரு பழைய திருக்குறள் சுவடியைத் தருவித்துப் பார்த்தார். அவர் சொன்ன குறள் அப்படியே அதில் இருக்கக் கண்டார். உடனே பெருந்தன்மையுடன் பாதிரியார் சொல்லின் செல்வரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, அக்குறட்பாவின் பொருளையும் கேட்டுத் தெரிந்துகொண்டாராம்.