முகப்பு
தமிழ்மணி

"த'கர வருக்கத்தில் ஒரு தமிழ்ப் பாடல்!

சந்தத்தமிழ் பாடுவதில் வல்லவரான அருணகிரிநாதர் யாத்த கந்தர் அந்தாதியில், "த'கர வருக்கத்தில் அமைந்த பாடலொன்று முருகப் பெருமானை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. அவரின் சொல் விளையாட்டை இப்பாடலில் பாருங்கள்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

சந்தத்தமிழ் பாடுவதில் வல்லவரான அருணகிரிநாதர் யாத்த கந்தர் அந்தாதியில், "த'கர வருக்கத்தில் அமைந்த பாடலொன்று முருகப் பெருமானை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. அவரின் சொல் விளையாட்டை இப்பாடலில் பாருங்கள்!

""திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுதித்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே''

இப்பாடலின் சொற்பொருளைக் கூர்ந்து நோக்குவோம்.
திதி - திருநடனத்தால் காக்கின்ற; தாதை - பரமசிவனும்; தாத - பிரமனும்; துத்தி - படப் பொறியினையுடைய; தத்தி - பாம்பினுடைய; தா - இடத்தையும்; தித - நிலைபெற்று; தத்து - ததும்புகின்ற; அத்தி - கடலையும் பாயலாகக் கொண்டு; ததி - தயிரானது; தித்தித்த -தித்திக்கின்றதென்று; தே - உண்ட கண்ணனும்; துதித்து - துதி செய்து வணங்கும்; இதத்து - பேரின்ப சொரூபியான; ஆதி -முதல்வனே; தத்தத்து - தந்தத்தை உடைய; அத்தி - ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட; தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு; தாத - தாசனே; திதே - தீமையே; துதை - பொருந்திய; தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்; அதத்து - மரணத்தோடும்; உதி - ஜனனத்தோடும்; தத்து - பல தக் துக்க ளோடும்; அத்து - இசைவுற்றதுமான; அத்தி - எலும்புகளை மூடிய; தித்தி - பையாகிய இவ்வுடல்; தீ - அக்கினியால்; தீ - தகிக்கப்படுகின்ற; திதி - அந்நாளிலே; துதி - உன்னைத் துதிக்கும்; தீ - புத்தி;
தொத்தது - உனக்கே அடிமையாக வேண்டும்.
இப்பாடலின் கருத்து வருமாறு: "திதத்தத் தத்தித்த' என்னும் தாளத்தால் நடிக்கும் பரமசிவனும், பிரமனும், தயிரையுண்டு பாற்கடலையும், ஆதி சேடனையும், பாயலாகக்கொண்ட திருமாலும் வணங்குகின்ற முதல்வனே! தெய்வயானை தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய், எலும்பு முதலான தாதுக்கள் நிறைந்த பொல்லாத இவ்வுடற்பை தீயில் வேகுங்கால், உன்னைத் துதிக்கும் என் புத்தியை உனது திருவடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.
அருணகிரிநாதரின் இப்பாட்டை நினைந்து வியப்பதா! அன்றி உரையாசிரியர் வ.சு. செங்கல்வராயப் பிள்ளையின் உரையை நினைந்து வியப்பதா! தமிழின் மேன்மையே மேன்மை!

முழு கட்டுரையைப் படிக்க →