முகப்பு
தமிழ்மணி

பகடு புறந் தருநர் பாரம் ஓம்புக!

உழவர் குடியைப் பாதுகாப்பது அரசனின் கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் காட்டுகிறது. ஏருழவர் குடியைப் பாதுகாத்து, மக்களின் நலன் பேணினால், பகைவர்கள் கூட உன்னைப் பணிந்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:40 PM
பகிர்:

உழவர் குடியைப் பாதுகாப்பது அரசனின் கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் காட்டுகிறது. ஏருழவர் குடியைப் பாதுகாத்து, மக்களின் நலன் பேணினால், பகைவர்கள் கூட உன்னைப் பணிந்து போற்றுவார்கள் என்று சோழ மன்னன் கிள்ளிவளவனிடம், புலவர் வெள்ளைக் குடிநாகனார் கூறுகிறார்.

""கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே!'' (புறநா.35)

"கீர்த்தி உடைய அரசனே! மன்னனின் வெண்கொற்றக் குடை, வெயிலை மறைப்பதற்காகப் பிடிப்பது அன்று. வேதனைப்படும் குடிமக்களின் துன்பம் நீக்கி, இன்பம் என்ற நிழலைத் தருவதன் அடையாளமாகப் பிடிக்கப்படுவதாகும். உன்னுடைய படைவீரர்கள் உனக்கு ஈட்டித்தரும் வெற்றியானது, உழவர்கள் உழுது, பயிர் செய்து, விளைவித்த உணவின் பயனால் வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பருவமழை பொய்த்தாலும், நிலவளம் குறைந்து விளைச்சல் குறைந்தாலும், இயற்கைக்கு மாறான செயல்களைச் செய்தாலும் மக்கள், அரசனின் ஆட்சிமுறையையே குறை கூறுவர்.

அரசனே! நீ குற்றம் கூறும் அயலாரை நம்பாதே. நிலத்தையும் ஏரையும் பாதுகாக்கும் உழவர்களுக்குக் குறை உண்டாகாமல் காப்பாற்ற வேண்டும். விவசாயத்தைப் பெருக்கி, விளைச்சலைப் பெருக்குவதன் மூலம் அனைத்து குடிமக்களையும் காப்பாற்ற முடியும். இப்படி மக்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டுமானால் உழவர் குடியைப் பாதுகாக்க வேண்டும். இதனால் உன் பகைவரும் உன்னைப் பணிந்து போற்றுவர்' என்கிறார் புலவர். வெள்ளைக்குடி நாகனாரின் கருத்து எக்காலத்துக்கும் பொருந்தும்.

முழு கட்டுரையைப் படிக்க →