தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்: அன்றில்

முது முனைவர் இரா. இளங்குமரன்

மாலை; மயங்கி வரும்பொழுது; காவிரித் தென்கரை; கருவூர்ச் சாலை; அடுத்தே ஒரு கால்வாய்; தவச்சாலை! கருவூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வரும் பேருந்து - விரைவானால் விரைவு - கண்மண் தெரியா விரைவு - இருபாலும் புளியமரங்கள்.
இரண்டு பறவைகள் பறக்கின்றன; ஒன்று தாழப் பறந்தது. ஒன்று சற்றே மேல் பறந்தது. வந்த வண்டி விரைவில், தாழப் பறந்த பறவை தப்ப முடியாமல் அடிபட்டு அலறி வீழ்ந்து துடித்துச் செத்தது!
வண்டியோட்டிக்குக் கண்டு கொள்ள முடியுமா? முந்தும் வண்டிக்கு முந்திச் சென்று வழி நிறுத்தத்தில் காத்திருப்பவர்களை ஏற்றிப் பையை நிரப்ப வேண்டும்!
சாலையை அடுத்துள்ள புளியமரத்து அடியையொட்டி விழுந்த பறவையின் துடிப்பும் கத்தலும் ஒடுங்கின! மேலே பறந்ததால் தப்பிய பறவை தப்பினோம் பிழைத்தோம் எனப் போய்விடவில்லை!
செத்த பறவையைச் சுற்றிச் சுற்றிக் கத்தோ கத்து! ஒருவர் இருவரா ஒன்பதின்மர் பதின்மரா இருந்த பறவை அலறல், அசையவிடாமல் ஊரையே கூட்டுவது போல் ஆயிற்று; பொழுது போகப் போகப் போகாமலும் பலர் நின்றனர்.
போனவர் வந்தவர் இடங்கள் வேறு; தெரு வேறு; இருளும் வேலையும் அவர்களை நகரச் செய்தன. நகர முடியா நிலை எங்கள் நிலை! தவச்சாலை வாயிலுக்குப் பத்தே பத்தடித் தொலைவு!
உள்ளே போனாலும் கேட்கும்; படுத்தாலும் கேட்கும்! அவல ஒலி! எவ்வளவு நேரம்! விடியல் ஐந்து மணி! கதறல் கத்தல் இல்லை! ஏன்? அடிப்பட்டுச் செத்துக் கிடந்த பறவையை அடுத்தே செத்துக் கிடந்தது தப்பிப் பிழைத்த பறவை! வண்டி அடிக்கவில்லை! ""யானோ அரசன் யானே கள்வன்'' என்னும் பாண்டியன் அறநெஞ்சமோ, ""கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'' என்னும் காதல் நெஞ்சமோ பறவைக்கு உண்டா? "உண்டு' என்பதை மெய்ப்பித்தனவே பறவைகள்!
நீர் நிலை! தாமரை இலை விரிய மேலே மலர் விரிய அதனைச் சுற்றி வரும் இரண்டு பறவைகள்! ""பூ இடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றில்'' என்றானே சங்கப் பாவலன்! அவன் உணர்வைக் காட்டிப் பாட்டைப் பாடினானா? இல்லை! அவற்றின் உணர்வையே தீட்டினான் என்பதைக் காட்டிய பறவைகள் இவை!
ஆம்! ""நீ இன்றி நான் இல்லை; நான் இன்றி நீயில்லை'' என்பதைப் பெயராகச் சூட்டினானே "அன்றில்' என்று! எத்தகைய உணர்வன் அவன்! எத்தகைய கூர்நோக்கன்! அன்றில் வாழ்க! "அன்றில்' என்றவனும் வாழ்க!

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT