தமிழ்மணி

பணி செய்து மணங்கொண்டார்!

முனைவர் பு. இந்திராகாந்தி

சமூகத்தில் குடும்ப வாழ்க்கை மிக முக்கியமான ஒன்றாகும். இக்குடும்ப உறவுகள் திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இத்திருமண முறைகள் சமூகத்தில் எப்படித் தோன்றியது என்பதைத் தொல்காப்பியம் (தொல்-1089) குறிப்பிடுகிறது. இவ்வாறு தோற்றம் பெற்ற திருமணம் இன்று பல ஆடம்பரங்களுக்குள் சிக்கிக் கிடக்கிறது. இருப்பவர்கள் பலகோடி செலவு செய்யும் நிலையும், இல்லாதவர் மணமகனுக்கு வரதட்சணை கொடுக்க முடியாத நிலையும் நிலவுகிறது. காதல் திருமணத்திற்கும் இது விதிவிலக்கல்ல.
பழந்தமிழர் சமூகத்தில் ஏறு தழுவி மணத்தல், இளவட்டக்கல் தூக்கல் போன்ற திருமணங்கள் வழக்கில் இருந்துள்ளன. மணம் பேசும்பொழுது பொன் கொடுத்து, பெண் பெற்றுள்ளனர். இவை "முலை விலை', "மலைபாற் கூலி' என்கிற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி மனம் கவர்ந்த பெண்ணை மணம் செய்துகொள்ள மணப் பெண்ணின் தந்தையிடம் பணி செய்தேனும் அவளைப் பெற்றுள்ளனர் என்பதை சங்கப் பாடல்களிலிருந்து அறிய முடிகிறது.

""அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்,
பெறல்அருங் குரையள் ஆயின், அறம்தெரிந்து,
நாம்உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு
இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம், இருப்பின்,
தருகுவன் கொல்லோ தானே-விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன்இமிர் அகன்கரைப் பகுக்கும்
கானல்அம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?''
(அகம்-280}4}14)

நலம் தரக்கூடிய சீரியப் பொருள்களோடு அணிகலன்களைத் கொடுத்தாலும் பெறுதற்கு அரியவள். அதனால் நாம் தங்கியுள்ள இந்நாட்டை விட்டு, பரதவனாம் அவள் தந்தையுடன் கூடி, பெரிய கடற்கரையினை அடுத்துள்ள உப்பளத்திலுள்ள உப்பினை விற்றுத் திரிந்து, வருந்தியும் பெருங்கடல் ஆழத்தில் புணையுடன் சென்றும், அவன் வயமாகியும் அவனுக்குப் பணிந்தும் அவளைச் சார்ந்தும் இருப்போமானால், அறத்தை எண்ணிப்பார்த்து, ஒருவேளை தானே முன்வந்து நாம் விரும்பும் தலைவியை நமக்கு மணம் செய்து தருவானோ? என்று தன் நெஞ்சோடு தலைவன் புலம்புவதன் மூலம் அன்றைய சமூகத்தில் பெண் வீட்டில் பணிசெய்து மணக்கும் நிலை இருந்துள்ளதை அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT