யானையின் பெண்மை
மன்னர் வீதி உலா வரும்போது பெண் யானை மீது உலா வருதல் மரபு.
மன்னர் வீதி உலா வரும்போது பெண் யானை மீது உலா வருதல் மரபு. பாண்டியன் ஒரு பெண் யானை மீது உலா வருகிறான். பார்க்கின்ற மகளிர் எல்லாம் அவன் மீது மையல் கொள்கின்றனர். இன்னும் அவன் அழகைக் கண்குளிரக் காண வேண்டுமென்று அருகே செல்கின்றனர். ஆனால், அதற்குள் அந்தப் பெண் யானை விரைந்து நடந்து சென்றுவிடுகிறது.
"ஏன், இந்தப் பெண் யானை கொஞ்சம் மெதுவாக நடக்கக் கூடாதா?' என்று அம்மன்னன் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி நினைக்கிறாள். அந்த யானையின் மீது அவளுக்குக் கோபம் வருகிறது. அதனால் அந்தப் பெண் யானையிடம் கேட்கிறாள்:
""இளமையான பெண் யானையே! நீ எனக்குத் தோழி போன்றவள்; நான் உன்னிடத்தில்தானே நடை பயின்றேன்; அப்பொழுதெல்லாம் நீ மெதுவாக நடந்தாயே... இப்பொழுது புலால் தோய்ந்த வேலை உடைய எங்கள் மதுரை மன்னன் உன்மேல் ஏறி உலா வரும்போது, உனக்கு மெதுவாக நடக்கத் தெரியவில்லையா? இவ்வளவு வேகமாக நடக்கிறாயே? என் நிலை உனக்குப் புரியவில்லையா? ஒரு பெண்ணான நீ என்னுடைய காதல் மனம் அறிந்திருக்க வில்லையா? நீ இப்படி வேகமாக நடப்பது உன் பெண்மைத் தன்மை மீதே ஐயம் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தி விட்டதே? இது சரியா?''
பாண்டியனைக் காண முடியாத ஏக்கத்தில் இருக்கும் அவள், அப்பெண் யானையின் மீதே ஐயப்படும் முத்தொள்ளாயிரப் பாடல் இது:
"எலாஅ மடப்பிடியே! எங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் - உலாஅங்கால்
பைய நடக்கவும் தோற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவது டைத்து' (பகுதி.8, பா.4)
இதே கருத்தில் சிந்தாமணியில், "கடுநடை கற்றாய் .... ... பிடியலை பாவி' என்று கூறப்பட்டுள்ளது.