தமிழ்மணி

கம்ப காவியத்தில் கடிதப் போக்குவரத்து

DIN


தூதாகச் செல்பவர்களின் இலக்கணத்தைப் பலவாறாக உரைப்பார் திருவள்ளுவர். தமிழ் இலக்கியங்களோ தூதுவர்களை - மாணாக்கரைப் போல முதல், இடை, கடையெனப் பிரிப்பது போல் தலை, இடை, கடை எனப் பிரித்து வழங்கும். அத்தூதுவர்கள் ஓலை கொடுத்து நிற்பார் எனவும், கூறியது கூறுவான் எனவும், தான் வகுத்துக் கூறுவான் எனவும் மூவகையாய்க் கூறுவர்.
அங்ஙனம் ஒப்பிலாத உண்மையுடைய தூதுவர் கைகேய நாட்டில் இருந்த பரதனைக் காணச் செல்கின்றனர்(அ.கா.2102). படிகாரீர் எம் வரவு சொல்லுதிர் மன்னவர்க்கே' என வாசற்படியில் காவல் காத்து நின்றவர்களிடம் சொல்ல, அவர்கள் பரதனிடம், தூதர் வந்தனர் உந்தை சொல்லொடு' என்றதும் பெருமகிழ்ச்சியோடு பரதன் தந்தையின் நலத்தையே முதலில் நாடுகிறான். தீது இலன் கொல் திரு முடியோன்' என்பது அவன் வாக்கு.
மன்னன் நலம் எனில் மக்களும் நலம் என்ற பொருளில் அமைந்தது அவன் கேள்வி. அடுத்து, முறையாக நலம் விசாரிக்கின்ற போக்குதான் தமிழர் மரபை எடுத் துக் காட்டுகிறது. தந்தை நலன் அறிந்த பின் தன் அண்ணன், தம்பிகளின் நலனை, இலை கொள்பூண் இளங்கோன் எம்பிரானொடும் உலைவு இல் செல்வத்தனோ?' எனக் கேட்கிறான். பின்னரே மரபின் முறைப்படி, மற்றும் சுற்றத்துளார்க்கும் வரன்முறை உற்ற தன்மை வினாவி' மகிழ்கின்றான். அதன் பின்னரே அத்தூதுவர்கள்,
இற்றது ஆகும் எழுது அருமேனியாய்
கொற்றவன்தன் திருமுகம் கொள்க'
என்கிறார்கள். நலம் விசாரித்தலில்கூட, மூத்தவர், உடன்பிறந்தோர், உற்றார், உறவினர் எனக் கேட்ட பின்னரே கடிதத்தைப் பெற்ற பண்பினர் என்பதற்குக் கம்ப காவியம் காட்டும் திருமுகமே மிகச்சிறந்த சான்று.
-இரா.வெ. அரங்கநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT