7. ஓசைகளின் வகை (2)
ஆசிரியத்துக்குரிய அகவலோசையும் இப்படியே மூன்று வகைப்படும். அவை: ஏந்திசை அகவலோசை, தூங்கிசை அகவலோசை, ஒழுகிசை அகவலோசை என்பன.
கவி பாடலாம் வாங்க - 39
ஆசிரியத்துக்குரிய அகவலோசையும் இப்படியே மூன்று வகைப்படும். அவை: ஏந்திசை அகவலோசை, தூங்கிசை அகவலோசை, ஒழுகிசை அகவலோசை என்பன.
(1) நேரொன் றாசிரியத்தளை மட்டும் வந்தால் ஏந்திசை அகவலோசை வரும்.
"வேலன் செவ்வேள் மெத்தென் பாதம்
சீலர் போற்றி செய்வர் என்ப
தோத வேண்டுங் கொல்லோ
யாதும் யாண்டும் ஈவான் அன்றோ?
இதில் எல்லாச் சீர்களும் தேமாவாகவே வந்தன; மாமுன் நேர் வந்த நேரொன்றாசிரியத் தளையே வந்தது.
(2) நிரையொன் றாசிரியத்தளை மட்டும் வந்தால் அது தூங்கிசை அகவலோசை.
"அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநளி பரிசறுப் பவரே'
இதில் விளமுன் நிரை வரும் நிரையொன் றாசிரியத் தளையே வந்தது.
(3) நேரொன்றாசிரியத் தளை, நிரையொன் றாசிரியத் தளை, இயற்சீர் வெண்டளை விரவி வருவது ஒழுகிசை அகவலோசை.
"முருகன் பாதம் முன்னி ஏத்தி
உருகிய அடியவர் உளங்கனிந் தருள்செயின்
நலம்வந் தமைந்து நயக்க
வலம்பெற் றுயர்வமிம் மகிதல மதனினே'
இதில் அவ்வாறு வந்தமை காண்க. கலிப்பாவுக்குரிய துள்ளலோசை ஏந்திசைத் துள்ளலோசை, அகவல் துள்ளலோசை, பிரிந்திசைத் துள்ளலோசை என்று மூன்று வகைப்படும்.
(1) கலித்தளை மட்டும் வந்தால் ஏந்திசைத் துள்ளலோசை.
முருகமர்தா மரைமலர்மேல்
முடியிமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல்
வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா
வெதிரியகா தியையரியா
நிருமலரா யறிவினராய்
நிலவுவர்சோ தியினிடையே
இதில் காய்முன் நிரை வந்து யாவும் கலித்தளையாக அமைந்ததைக் கவனிக்க.
(2) வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தால் அது அகவல்துள்ளலோசையாகும்.
வேதங்கள் அறைகின்ற
உலகெங்கும் விரிந்தனநின்
பாதங்கள் இவையென்னிற்
படிவங்கள் எப்படியோ
ஒதங்கொள் கடலன்றி
ஒன்றினோ டொன்றொவ்வாப்
பூதங்க டொறுநிறைந்தால்
அவையுன்னைப் பொறுக்குமோ
இந்தப் பாட்டில் காய்முன்நிரை வந்த கலித்தளையும், காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளையும், விளமுன் நேர்வந்த இயற்சீர் வெண்டளையும் வந்துள்ளன.
(3) பல தளையும் விரவி வருவது பிரிந்திசைத் துள்ளலோசை.
குடநிலைத் தண்புறவிற்
கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைய பெருந்தொழுவில்
தகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத்
தாங்குவனத் தொன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக்
கடிமுல்லை முறுவலிப்ப
இதில் "குடநிலைத்-தண்புறவிற்' என்பதில் விள முன் நேர் வந்தது. இது இயற்சீர் வெண்டளை. தண்புறவிற்-கோவலர்-இதில் காய் முன் நேர் வந்தது. இது வெண்சீர் வெண்டளை. கோவல-ரெடுத்தார்ப்ப-விள முன் நிரை வந்தது. இது நிரையொன் றாசிரியத் தளை. "தடநிலைய பெருந்தொழுவில்' - இதில் காய் முன் நிரை வரக் கலித்தளை அமைந்தது. இப்படிப் பல தளைகளும் கலந்து வந்தது காண்க. வஞ்சிப்பாவுக்குரிய தூங்கலோசையும் ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என்று மூன்று வகைப்படும்.
(1) ஒன்றிய வஞ்சித் தளையால் வருவது ஏந்திசைத் தூங்கலோசை.
வினைத்திண்பகை விழச்செற்றவன்
வனப்பங்கய மலர்த்தாளிணை
நினைத்தன்பொடு தொழுதேத்துநர்
நாளும்
மயலார் நாற்கதி மருவார்
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே
இதில் கனிமுன் நிரை வந்து ஒன்றிய வஞ்சித்தளை அமைந்தமையின் ஏந்திசைத் தூங்கலோசை வந்தது. பின்னால் உள்ள இரண்டு அடிகளும் ஆசிரியச் சுரிதகம்.
(2) ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது அகவல் தூங்கலோசை.
வானோர்தொழ வண்டாமரைத்
தேனார்மலர் மேல்வந்தருள்
ஆனாவருள் கூரறிவனைக்
கானார்
மலர்கொண் டேத்தி வணங்குநர்
பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே
இதில் கனி முன் நேர் வந்து, ஒன்றாத வஞ்சித் தளை அமைந்தமையால் அகவல் தூங்கலோசை ஆயிற்று.
(3) மேலே சொன்ன இரண்டு தளைகளும் பிறவும் விரவி வந்தால் அதைப் பிரிந்திசைத் தூங்கலோசை என்பர்.
மந்தாநிலம் மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
எனவாங்
கினிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே
(தொடர்ந்து பாடுவோம்...)