கவி பாடலாம் வாங்க - 9: எழுசீர் விருத்தம்
ஆசிரிய விருத்தங்களின் பொது இலக்கணம் எல்லா அடிகளும் அளவொத்து வருவது. அளவு என்பது சீர்களின் எண்ணிக்கை மாத்திரம் அன்று. இன்ன இன்ன சீர் இந்த இடங்களில் வர வேண்டும் என்ற வரையறை உண்டு.
ஆசிரிய விருத்தங்களின் பொது இலக்கணம் எல்லா அடிகளும் அளவொத்து வருவது. அளவு என்பது சீர்களின் எண்ணிக்கை மாத்திரம் அன்று. இன்ன இன்ன சீர் இந்த இடங்களில் வர வேண்டும் என்ற வரையறை உண்டு. காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர் என்ற மூன்று சீர்களே பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களில் வருகின்றன. இவை ஓரடியில் வந்தது போலவே நான்கு அடிகளிலும் வர வேண்டும். சில இடங்களில் மா, விளம், காய் என்பன போல ஈற்றசை ஒன்றியிருப்பதன்றிச் சீர் முழுவதுமே ஒரே மாதிரி வரும். தேமாச் சீர்தான் வர வேண்டும் என்பது போன்ற வரையறை இது.
""இதந்தரு மனையி னீங்கி'' என்ற என்ற அறுசீர் விருத்தத்தில் ஒவ்வோர் அடியிலும் மூன்று, ஆறாம் சீர்கள் தேமாவாகவே இருப்பதைக் காணலாம். அதை மாற்றினால் ஓசை வேறுபடுவதைப் பாட்டைச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதுவரையில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் இலக்கணத்தைப் பார்த்தோம். அதற்கு மேல் எழுசீர் முதலியன உண்டு.
"ஆறுசீர் விருத்தம் அறிந்தவர் பின்னர்
அழகிய ஏழுசீர் விருத்தம்
கூறுமெம் முறையில் வருமென அறிந்து
குலவுறு மமைதியின் படியே
வீறுறப் பாடி இன்புறல் கூடும்
விளம்பிய செய்யுளிங் கிதன்பால்
வேறிலா திரண்டே அசையுறு சீர்கள்
மேவுதல் கண்டுணர்ந் திடுக'
இது எழுசீர் ஆசிரிய விருத்தம். ஐந்து சீர்களுக்கு மேல் எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடிக்குக் கழிநெடிலடி என்பது பெயர் என்று முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆதலால் இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இந்த விருத்தத்தில் எல்லாச் சீர்களும் ஈரசைச் சீர்களாகவே வந்திருப்பதைக் காணலாம். ஓரடியைப் பன்முறை ஓதி ஓதி ஓசையை உணர்ந்து கவி எழுத வேண்டும். பிறகு சீர் பிரித்து வாய்பாடு அமைத்துப் பார்த்தால், என்ன என்ன சீர் எந்த எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை உணரலாம். இந்தப் பாட்டில் மோனை ஐந்தாவது சீரில் அமைவது அழகு. முதல் நாலு சீர் ஒரு பகுதி, பின் மூன்று சீர் ஒரு பகுதியாகப் பிரித்து அந்த மோனை காட்டுகிறது.
கூவிளம் புளிமா கருவிளம் தேமா
கருவிளம் கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா கருவிளம் புளிமா
கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் தேமா கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா கருவிளம் தேமா
கூவிளம் கூவிளம் புளிமா.
இந்த வாய்பாடு ஊட்டிப் பார்த்தால் ஒவ்வோர் அடியிலும் நான்கு விளமும், மூன்று மாவும் வந்திருப்பது தெரிகிறது. முதல் நான்கு சீர்களில் விளச்சீரும் மாச்சீரும் மாறி மாறி வர, பின் மூன்று சீர்களில் இரண்டு விளமும் ஒரு மாவுமாக வந்திருக்கின்றன. இவற்றில் பொதுவாக விளச்சீர்களும் மாச்சீர்களும் வந்தன. குறிப்பிட்டுத் தேமாதான் வரவேண்டும் என்பது போன்ற வரையறையில்லை. அதாவது, கூவிளம் வந்த இடத்தில் கருவிளம் வரலாம்; தேமா வந்த இடத்தில் புளிமா வரலாம்.
பின்வரும் பாடல்களில் நிரப்ப வேண்டியவற்றை நிரப்பிப் பயிலுக.
வேதமும் வேத அங்கமும் உணர்ந்த
வித்தக ....... அடைந்து
போதமுற் றொளிரும் ...... ......
புகழுறப் ...... பெரியர்
ஆதரத் தோடு ...... ......
அறிந்தவர் ...... ......
...... தெளிவார் அவர்நனி முயல்வார்
திகழுறு நூல்பல கற்பார்.
(தொடர்ந்து பாடுவோம்...)