கண்வழி மனமும் செல்ல...
கம்பரின் செய்யுள்களில் ராமகாதையின் நிகழ்ச்சிகளை கதை மாந்தரின் பண்பு நலன்களை விளக்கும் செய்யுட்களை அனைவரும் விரும்பி மனனம் செய்து சொல்லி மகிழ்வர்.
கம்பரின் செய்யுள்களில் ராமகாதையின் நிகழ்ச்சிகளை கதை மாந்தரின் பண்பு நலன்களை விளக்கும் செய்யுட்களை அனைவரும் விரும்பி மனனம் செய்து சொல்லி மகிழ்வர். அதற்கு இணையாக வர்ணனையாக அமையும் பாக்களும் ஒருவித தனி அழகோடு மிளிர்வன. கம்பரின் கற்பனைத் திறனைப் பறைசாற்றுவன.
பாலகாண்டத்தில் மிதிலை காட்சிப் படலத்திலே விசுவாமித்திரரோடு ராமனும் இலக்குவனும் மிதிலையில் நடக்கும் காட்சி. அப்பொழுது அவர்கள் ஒரு நடன அரங்கைக் கடந்து செல்கின்றனர்.இதற்கென கம்பர் அமைத்திருக்கும் செய்யுள் நம் கண் முன் ஒரு நடன அரங்கை, நாட்டிய நிகழ்வை விரித்துக் காட்டுகிறது.
"நெய்திரள் நரம்பின் தந்த
மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை
தண்ணுமை தழுவித் தூங்க
கை வழி நயனம் செல்ல
கண்வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும்
ஆடக அரங்கு கண்டார்'
நரம்புக் கருவியான யாழின் இசை போல இனிமையான பாட்டும், மகர வீணையின் இசையும், மத்தளத்தின் ஓசையும் இணைந்து இயைபுடன் நன்கு இசைக்க, கை வழி நயனம் செல்லவும், கண் வழி மனம் செல்லவும் நுண் இடை மகளிர் ஆடும் நாட்டியக் கூடங்களைக் கண்டனர். இதில் கம்பரின் கற்பனை மட்டுமல்ல அவரது நுட்பமான கலை அறிவும் வெளிப்படுகின்றது. நாட்டியம் கற்போருக்கு பால பாடமாக ஒரு சுலோகம் கற்பிக்கப்படுவது வழக்கம். அந்த சுலோகம்,
"யதோ ஹஸ்த ஸ்ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ஸ்ததோ மனஹ
யதோ மனஸ் ஸ்ததோ பாவ
யதோ பாவோ ஸ்ததோ ரஸ'
நாட்டியக்கலையின் அடிப்படை எனக் கருதும் இந்தக் கருத்தை அப்படியே தனது பாவில் கையாள்கிறார் கம்பர். "ஐய நுண் இடையார்' - இடை உளதோ இலதோ என ஐயம் உண்டாகும்படியான நுண் இடை கொண்ட பெண்கள் நடனம் ஆடுகிறார்களாம். தொடர்ந்து தீவிரப் பயிற்சி மேற்கொள்வோருக்கே இந்த நுண்ணிடை சாத்தியம் என்பதால் ஆடுவோர் நல்ல பயிற்சியும் அனுபவமும் மிக்க கலைஞர்கள் எனப் புரிய வைக்கிறார்.
மேலும், வாய்ப் பாட்டும் இசைக் கருவிகளின் இசையும் ஒன்றாக நடனத்திற்கு அழகு சேர்க்கின்றனவாம். அத்தகைய நடனம் கை வழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல, நடனத்தில் இலக்கணத்தைத் தெளிவாகப் பின்பற்றுகிறார்களாம். இப்படி ஒரு நேர்த்தியான நடன நிகழ்ச்சியை நம் மனத்தில் அரங்கேற்றிவிடுகிறது கம்பரின் ஒற்றைக் கவிதை.