கவி பாடலாம் வாங்க - 24: விருத்த வகை - 2
வஞ்சி விருத்தமும் வஞ்சித் துறையும்:
வஞ்சி விருத்தமும்
வஞ்சித் துறையும்:
வஞ்சி விருத்தம் மூன்று சீரடிகள் நான்கினால் வரும்.
"சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமெனின்
நீல வுண்கண் இவள்வாழும்'
இது வஞ்சி விருத்தம்.
"பாதம் பரவிப் பணியின்
ஏதம் எதுவும் இல்லாப்
போதம் அருளிப் புகுவான்
கோதில் கருணைக் குமரன்'
இதுவும் வஞ்சி விருத்தம். இதனோடு தொடர்ந்து வேறு ஒன்றையும் தெரிந்து கொண்டால் நினைவில் நன்றாகப் பதியும். இரண்டு சீரடிகள் நான்கு வந்தால் அதற்கு வஞ்சித்துறை என்று பெயர்.
"கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே'
இது நம்மாழ்வார் பாடல்; வஞ்சித்துறை. இப்போது அளவொத்து வரும் அடிகளைக் கொண்ட பாடல்கள் இன்னவை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம்.
இரு சீரால் வரும் அடி நான்கை உடையது
வஞ்சித் துறை.
மூன்று சீரால் வரும் அடி நான்கை உடையது
வஞ்சி விருத்தம்.
நான்கு சீரால் வரும் அடி நான்கை உடையது
கலி விருத்தம்.
ஐந்து சீரால் வந்து ஒரு சொல்லே ஈற்றில் வருவது
வெளிவிருத்தம்.
ஐந்து சீரால் வரும் அடி நான்கை உடையது
கலித்துறை.
ஆறுசீர் எத்தனை சீராலும் வரும் அடி நான்கை உடையது ஆசிரிய விருத்தம்.
சீர்க் கணக்கை வரிசையாக எண்ணிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை இவை. விருத்த வகையை மட்டும் கவனித்தால் பின் வருவனவற்றை நினைவிற் கொள்ள வேண்டும்.
1. வெளி விருத்தம்: 5 சீர், ஒரே சொல் ஈற்றுச் சீர்; மூன்று அல்லது நான்கடி.
2. ஆசிரிய விருத்தம்: 6 சீர் முதல் எத்தனை சீரும் வரலாம்; நான்கடி.
3. கலிவிருத்தம்: 4 சீர்; 4 அடி.
4. வஞ்சி விருத்தம்: 3 சீர்; 4 அடி.
(தொடர்ந்து பாடுவோம்...)