கவி பாடலாம் வாங்க - 50
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா:
தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடையிடையே தனிச் சொல்லும் இறுதியில் சுரிதகமும் பெற்று வருவது சிஃறாழிசைக் கலிப்பா.
"பரூஉத்தடக்கை மதயானைப்
பணையெருத்தின் மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க்
குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் தேரினொடு
பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான்
கூடலார் கோமானே; ஆங்கொருசார் (1)
உச்சியார்க் கிறைவனா
யுலகெலாம் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூண்
புரந்தரனாப் பாவித்தார்
வச்சிரங் காணாத
காரணத்தால் மயங்கினரே; ஆங்கொருசார் (2)
அக்கால மணிநிரைகாத்
தருவரையாற் பகைதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த
மாயவனாப் பாவித்தார்
சக்கரம் காணாத
காரணத்தால் சமழ்த்தனரே;
ஆங்கொருசார் (3)
மால்கொண்ட பகைதணிப்பான்
மாதடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங்
கொடியவனாப் பாவித்தார்
வேல்கண்ட தின்மையால்
விம்மிதராய் நின்றனரே; அஃதான்று
கொடித்தேர் அண்ணல் கொற்கைக் கோமான்
நின்றபுகழ் ஒருவன் செம்பூண் சேஎய்
என்றுநனி அறிந்தனர் பலரே தானும்
ஐவருள் ஒருவன்என் றறிய லாகா
மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே'
இது சிஃறாழிசைக் கலிப்பா. இதில் தாழிசைகளுக்கு முன்னே தனிச் சொற்கள் வந்தன; அவை வராவிடின் இது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா ஆகிவிடும்.
பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா:
தரவு ஒன்றும் மூன்றுக்கு மேற்பட்ட தாழிசைகளும் தனிச்சொல்லும் சுரிதகமும் வந்தால் அது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும்.
(தரவு)
"தண்மதியேர் முகத்தாளைத்
தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியு முடைநிறையு
முடன்தளர முன்னாட்கண்
கண்மதியொப் பிவையின்றிக்
காரிகையை நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின்
பேரருளும் பிறிதாமோ?'
(தாழிசை)
"இளநலம் இவள்வாட
இரும்பொருட்குப் பிரிவாயேல்
தளநல முகைவெண்பற்
றாழ்குழல் தளர்வாளோ? (1)
நகைநலம் இவள்வாடத்
தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநலம் இவள்வாடி
வருந்திஇல் இருப்பாளோ? (2)
அணிநலன் இவள்வாட
அரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநலன் மகிழ்மேனி
மாசொடு மடிவாளோ? (3)
நாம்பிரியோம் இனியென்று
நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியோம் எனவுரைத்த
உயர்மொழியும் பழுதாமோ? (4)
குன்றளித்த திரள்தோளாய்
கொய்புனத்திற் கூடியநாள்
அன்றளித்த அருள்மொழியால்
அருளுவது மருளாமோ? (5)
சில்பகலும் ஊடியக்கால்
சிலம்பொலிசீ றடிபரவிப்
பல்பகலும் தலையளித்த
பணிமொழியும் பழுதாமோ? (6)
(தனிச்சொல்)
அதனால்
(சுரிதகம்)
"அரும்பெற லிவளினும் தரும்பொரு ளதனினும்
பெறும்பெற லரியன வெறுக்கையும் அற்றே
விழுமிய தறிமதி வாழி
தழுவிய காதலிற் றரும்பொருள் சிறிதே'
இந்தப் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவில் ஒரு தரவும், ஆறு தாழிசைகளும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் வந்தன. தரவினும் குறைந்த அடிகளை உடையது தாழிசை என்பது நினைவில் இருத்தற்குரியது.
(தொடர்ந்து பாடுவோம்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.