உயிர்க்கொல்லி, ஈருகொல்லி, பயங்கொள்ளி, பூச்சிக்கொல்லி, ஆட்கொல்லி எனப் பேச்சுவழக்கிலும், "சேர்ந்தாரைக் கொல்லி'(குறள்:306) என்று இலக்கிய வழக்கிலுமுள்ள சில தொடர்களைப் போன்று கல்வெட்டுகளிலும், வைணவ உரைகளிலும் இடம்பெறும், "ஈரங்கொல்லி' என்ற சொல்லுக்கு வண்ணான், வண்ணாத்தார்கள், துணி வெளுப்பவர் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
"ஈரங்கொல்லி' என்ற சொல்லுக்கு, வண்ணான், துணி வெளுப்பவர் என்றே அகராதிகள் அனைத்தும் பொருளுரைத்துள்ளன. உயர்திணைப் பெயர்களானாலோ அல்லது தொழில் அடிப்படையிலான உயர்திணைப் பெயர்களானாலோ குயவன், கொல்லன் என "னகர'வீற்றுப் பெயர்களாகவும், குயவர், கொல்லர் என "ரகர'வீற்றுப் பெயர்களாகவும் குறிப்பதும் வழங்குவதுவுமே தமிழ்மரபு. அஃறிணையைக் குறிப்பதுபோன்று இப்பெயர் அமைந்துள்ளமையால், இக்கால அகராதிகள் "சலவைக்காரம்' என்றும் பொருளுரைத்துள்ளன.
ஈரம்போகுமாறு, (ஈரம்கொன்று) காயவைத்துக் கொடுத்ததன் காரணமாக ஈரங்கொல்லி என்ற இப்பெயர் தோன்றியிருக்கலாம் என்பது சரியல்ல. "ஈரங்கொல்லி' என்ற சொல்லுக்கு நேரடிப் பொருள் கொள்வதாலேயே இவ்வாறெல்லாம் பொருண்மைகள் கூறப்பெற்றுள்ளன. அவ்வாறு நேரடிப்பொருள் கொள்ளுதல் தவறு. ஏனெனில், "ஈரங்கொல்லி' என்ற இச்சொல் ஒரு மரூஉச் சொல். துணி வெளுப்பவரான வண்ணாத்தாரை கல்வெட்டுகள், வைணவ உரைகள் ஈரங்கொல்லி எனக் குறிப்பிட்டிருப்பினும், அவற்றைவிடக் காலத்தால் முந்தைய நிகண்டுகள், ஈரங்கோலியர், ஈரங்கொல்லியர் என உயர்திணை ஈற்றுப்பெயர்களாகவே குறித்துள்ளன.
நிகண்டுகளில் காலத்தால் முந்தையதுவும், முதலாவதுவுமான திவாகர நிகண்டில் "ஈரங்கோலியர்' என்றே இப்பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆனால், திவாகர நிகண்டுக்குப் பின் தோன்றிய பிங்கல நிகண்டு, ஈரங்கொல்லியர் எனக் குறித்துள்ளது.
திவாகரரால் ஈரங்கோலியர் எனக் குறிக்கப்பெற்ற இச்சொல் ஈரங்கொல்லியர் என மருவி வழங்கப்பெற்றமையைப் பிங்கல நிகண்டு புலப்படுத்துகிறது. இவ்வாறு ஈரங்கொல்லியர் என மருவிய அச்சொல்லே, காலப்போக்கில் ஈரங்கொல்லி என்றும் மருவி வழங்கப் பெற்றமையைக் கல்வெட்டுகளும், வைணவ உரைகளும் உணர்த்துகின்றன. ஆக, காலத்தால் முந்தைய திவாகர நிகண்டு குறிப்பிட்டுள்ள "ஈரங்கோலியர்' என்ற சொல்லே "ஈரங்கொல்லியர்' என்றும், பின்னர் "ஈரங்கொல்லி' என்றும் மருவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஈரங்கோலியர் என்ற பெயருக்கான காரணம் சுவையானது. "கோலிகன்' என்றால் "ஆடை' எனப் பொருள். இச்சொல்லை, நன்னூல் சொல்லதிகாரத்தில் ஆகுபெயர்களில் கருத்தாவாகு பெயர்க்கான விளக்கவுரையில் காணலாம்.
"இவ்வாடை கோலிகன்' என் புழிக் கோலிகன் என்னும் வினைமுதலை உணர்த்தும் பெயர், அவனால் நெய்யப்பட்ட ஆடைக்கு ஆயினமையாற் கருத்தாவாகு பெயர்'. அதாவது, கோலிகன் என்பது நெசவாளனை மட்டுமின்றி அவனால் நெய்யப்பட்ட ஆடையையும் குறிக்கும். எனவே, கோலிகன் என்ற சொல்லுக்கு ஆடை என்று பொருளுண்டு. கோலிகன் என்ற இச்சொல்லுக்கான வேர்ச்சொல்லைச் சங்க இலக்கியத்திலும் காணமுடிகிறது.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேரவேந்தன் தன் முடியால் சிறப்புப்பெயர் பெற்றவன். அவன் அணிந்திருந்த நார்முடி செய்யப்பட்டிருந்த பாங்கினைக் காப்பியாற்றுக் காப்பியனார், பதிற்றுப்பத்தில் அழகாக உவமித்துப் பாடியுள்ளார். அதாவது, வெள்ளைநிற நூல் இழைகளால் அல்லாமல் நுண்ணிய மயிர் இழைகளால் புனையப்பட்டது போன்ற, மரத்தில் தொங்கும் சிலந்தி பின்னிய அசையும் போர்வையை ஒத்த மெல்லிய பொன்னாலான படலத்தில் நீலநிற மணிக்கற்கள் பதிக்கப்பட்டும், முத்துக்கள் பொன் இழைகளில் கோத்துச் சுற்றப்பட்டுமாகப் பட்டொளி வீசும் நார்முடிச்சேரல்' எனப் பாடியுள்ளார்.
அப்பாடலில், "சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின்' என்ற அவ்வடியே (பதி.39:13) கவனம் பெறவேண்டிய அடியாகும்.
மரத்தில் தொங்கும் சிலம்பியின் கூட்டை, அசையும் போர்வை எனக் கூறும் புலவர், போர்வை போன்ற அவ்வலையைப் பின்னிய சிலந்தியின் செயலைக் "கோலிய' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆடையைக் கோலியவன் (நெய்தவன்) கோலியன் எனப்பெற்றான். அவனால் நெய்யப்பெற்ற ஆடையும் கோலியன் எனப்பெற்றது. கோலிகன், கோலியன் இரண்டும் ஒரு சொல்லின் மாறுபட்ட வடிவங்களே என்பதை அகராதிகள், (கோலிகன்-கோலியன்) குறித்துள்ளன. கோலிகன் என்றால் ஆடை என்ற பொருளிலும் அவர்கள் காலத்தில் வழங்கப்பட்டதால் நன்னூல் உரையாசிரியர்கள், கருத்தாவாகு பெயர்க்கான
எடுத்துக்காட்டாகக் கோலிகனைக் குறித்துள்ளனர்.
துணி வெளுப்பவர், பிறரால் உடுத்தப்பெற்ற அழுக்கான ஆடைகளை நீரினால் ஈரப்படுத்தி, துவைத்து, புத்தாடைகளாக ஆக்கித் தருவதால் "ஈரங்கோலியர்' என அழைக்கப்பெற்றுள்ளனர். இப்பெயரே மருவி ஈரங்கொல்லி என வழங்கப்பெற்றுள்ளது. வண்ணாத்தாரைக் "காழியர்' என்றும் குறிப்பிடுவர். ஆடைகளைத் தூய்மைப் படுத்தியமையால், அவ்வினத்தாரைக் காழியர் என்றும் அழைத்துள்ளனர். காழகம் என்ற சொல்லுக்கும் ஆடை என்றே பொருள். (புற.41:9; கலி.7:9,73:17; 92:37; திரு.184; மதுரை.598). கோலிகர் என்ற சொல் கோலியர் என்று வழங்கப்பெறுவதுபோல, காழகர் என்ற சொல், காழிகர் என்றாகி, பின்னர் காழியர் எனத் திரிந்துள்ளது.
கல்வெட்டுகளிலும், வைணவ உரைகளிலும் பேச்சு வழக்கான ஈரங்கொல்லி என்ற பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பினும், அவ் இனப்பெயர் உயர்திணைப் பெயர்களுக்குரிய இலக்கணப்படி இல்லாமையால், அகராதிகளிலும், பிறவற்றிலும் அவ்வாறு குறிப்பிடுவதைத் தவிர்த்து, திவாகர நிகண்டார் குறித்துள்ளதுபோல, "ஈரங்கோலியர்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.