முகப்பு
தமிழ்மணி

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்!

"பொருளீட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். கார்காலத்தில்தான் திரும்பி வருவான்.

Updated On : 30 நவம்பர், 2020 at 8:10 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM


"பொருளீட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். கார்காலத்தில்தான் திரும்பி வருவான். அதுவரை தலைவி இப்பிரிவினைப் பொறுத்துக் கொண்டிருப்பாளோ?' எனத் தோழி கலக்கம் கொள்கிறாள். ஆனால், தலைவி அவளிடம் கூறும்  மறுமொழி அவளுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

""தோழியே... நான் கூறுவதைக் கேள்! இரவுகள் தோறும் நான் இனிய கனவுகள் காண்கிறேன். பகலிலும் நல்ல புள் நிமித்தங்கள் உண்டாகின்றன. என் உள்ளமும் அவர் வரவை எதிர்பார்த்துத் துயரம் கொள்ளாமல் அமைதியாகவே உள்ளது. உலர்ந்து, தூய மலர்கள் புனைந்து, மயிர்ச்சாந்து மணக்கும் கூந்தலையுடைய புதுமணப்பெண், பல வகை உணவுகளையுடைய திருமண வீட்டில் பல புடைகளையுடைய அடுப்பில், பாலை உலையாகப் பெய்து, மற்ற இளமகளிருடன் கூடி, பெருவயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை முறித்து அவர்கள் பசிய அவலாகக் குற்றுவார்கள்.

அவர்கள் அவ்வாறு இடிக்கும் கரிய வைரமாகிய உலக்கையின் இடிக்கு அஞ்சி, சூல்கொண்ட வெண்குருகு, இனிய குலையையுடைய வாழையின் உயரமான மடலில் தங்கியிராமல், நெடிய மாமரத்தைத் தேடிப் பறந்து செல்லும் இயல்புடையது கரிகால் வளவனின் ஊர். "இடையாறு' என்ற ஊரில் போர் வெற்றியை உடைய கரிகால் சோழன் அங்கு செல்வோரை ஆதரிப்பதோடு, நலிந்தோரையும் பாதுகாக்கும் புகழ் மிக்க ஊர் அது. அத்தகைய ஊருக்கு செல்வத்தை ஈட்டிவர நம் தலைவர் சென்றுள்ளார்.

Advertisement

அவர் கடந்து சென்ற வழியானது, மலையிடத்துள்ள வேங்கை மரத்தின், பல புள்ளிகளையுடைய புலியின் நிறம் போன்று விளங்கும் மலர்களிடையே, பெரிய கிளைகளையுடைய நாரத்தை மரத்தின் அழகிய புதிய மலர்கள் உதிருமாறு முசுக்கலை பாய்ந்து தாவும் இயல்புடையது. அது தேன்மணம் கமழும் நீண்ட உச்சிகளால் விளங்கும் வேங்கட மலையைச் சார்ந்த ஊர்கள் பொருந்திய காட்டு வழியாகும்.

கலப்பைகள் செயல் ஒழிந்து, உழுதொழில் உலகில் நிறைவுற்றது; மழைபெய்தல் ஒழிந்த வானின்கண்ணே சிறிய முயலின் களங்கம் விளங்குமாறு சந்திரன் நிறைந்து அறுமீன்கள்எனப்படும் கார்த்திகையைச் சேரும் இருள் பரவிய நள்ளிரவில், தெருக்கள் தோறும் விளக்குகளை வரிசையாக நிரல்பட ஏற்றி, மாலைகளை எங்கணும் தொங்கவிட்டு, பழைமையான வெற்றிமிகுந்த நம்முடைய முதிய ஊரின்கண் பலரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடும் விழாவை நம்முடன் கொண்டாட அவரும் வருவாராக!'' என்று முகமலர்ச்சியோடும், எதிர்பார்ப்புகளோடும் தலைவி கூறுகிறாள். 29 வரிகளை உடைய இப்பாடலில் சில வரிகள் மட்டும்...

"அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சு நனிபுகன்று உறையும்; எஞ்சாது  
உலகு தாழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்;
மறுகுவிளக்கு உறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
...    ....    ....    ....
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே.     (141)

கார்த்திகைத் திங்களில், கார்த்திகை நாளில் வீதிகளில் நிரை நிரையாக விளக்குகளை ஏற்றி, விழாக் கொண்டாடுவது பண்டைத் தமிழர் வழக்கு எனும் செய்தி இதன் மூலம் தெரிய வருகின்றது.

தமிழ்நாட்டில் மழைபொழியும் காலம் கார்த்திகை மாதம். இம்மாதத்தில் கார், கார்த்திகை எனப்படும் காந்தள் மலரும் மிகுதியாக மலரும். இம்மாதத்தில் கார்த்திகை (அறுமீன்) எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும். "கார்த்திகை விளக்கீடு' என்பது கார்த்திகை மாதத்து முழுநிலா (பெüர்ணமி) நாளில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த திருநாளில், தமிழர் தமது இல்லங்களிலும், தெருக்களிலும், ஊரிலும், ஊரிலுள்ள கோயில்களிலும் தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றியும், எங்கணும் மலர் மாலைகளால் அலங்கரித்தும் விழாக்கொண்டாடும் காலமாகும்.

இவ்விழா பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணக்கிடைக்கின்றன. இவை திருக்கார்த்திகைப் பண்டிகையின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.