நெஞ்சம் படும் பாடு!
"உள்ளதை உள்ளவாறு அறிவிக்க முயல்வது அறிவியல்; உள்ளதை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை.
"உள்ளதை உள்ளவாறு அறிவிக்க முயல்வது அறிவியல்; உள்ளதை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை. அறிவும் ஆராய்ச்சியும் கொண்டு வளர்வது அறிவியல் எனில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு வளர்வது கலை. ஊன்றி நின்று நடப்பது போன்றது அறிவியல்; தாவிப் பறப்பது போன்றது கலை' என்பார் அறிஞர் மு.வரதராசனார். நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளையே கற்பனை வடிவம் கொடுத்துக் கலை இலக்கியமாக்கியுள்ளனர் சங்கப் புலவர்கள்.
தமிழ் இலக்கியங்களில் வரும் காதலர்கள் இன்ப-துன்பக் காலத்தும், காம உணர்வு பெருகிய நிலையிலும் தம் நெஞ்சோடும்; பறவை, விலங்கு, கடல், நிலவு முதலான ஏனைய பொருள்களோடும் பேசுவதும், அவை செய்யாத செயல்களைச் செய்வதாகக் கற்பித்துக் கூறுவதும், அவை உறும் துன்பத்தைத் தம் துன்பம்போல் சேர்த்துப் பேசுவதும் இயல்பு (உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல்) என்கிறது தொல்காப்பியம்.
தலைவன் ஒருவன் தன் தலைவியைச் சந்திக்க அடிக்கடி இரவில் வருகிறான். இருண்டு கிடக்கும் காட்டு வழியில், சிறிய மலைப் பகுதியில், சுனையில் மலர்ந்த குவளை மலர்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அந்தச் சிறிய வழி யானை முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பு போன்றது; அங்கே மழை பெய்து நீர் பரந்து செல்லும். அந்தக் குறுகிய வழியில் படுகுழிகள் நிறைந்திருக்கும். அவ்வழியில் இருளில் வருகின்றான் தலைவன்.
தலைவனைக் கண்டு மகிழும் இன்பத்தைவிட, அவன் வரும் வழியில் உள்ள தீங்குகளை நினைத்து நினைத்துக் கவலையுறுகிறாள் தலைவி. இதை உணர்ந்து, அதைத் தலைவனுக்கு உணர்த்த விரும்புகிறாள் அவள். தலைவன் வீட்டின் வேலிப் புறமாக வந்து நின்றபோது, தன் நெஞ்சைத் துணைகொண்டு தோழிக்குக் கூறுவாள்போல் பின்வருமாறு கூறுகிறாள்:
"தோழி! மன்றம் ஒலி அடங்கி, மனையும் அமைதியுற்றது. கொன்றாற் போன்ற கொடுமையோடு நள்ளிரவும் வந்தது; வந்தால் காதல் மிகுந்து கடலைவிடப் பரவிக் கரைகடந்து செல்லும். என்ன காரணமோ, அறியேன் தோழி. யான் மயங்கி இந்நிலையில் இருக்க, என் நல்ல நெஞ்சம் என்னையும் கேட்காமல், உன்னையும் கேட்காமல் கைகடந்து சென்றது. குறுகிய வழியில், படுகுழிகள் நிறைந்த இடங்களில், அவருடைய அடி தளருமானால், அந்த அடியைத் தாங்கிக் கொள்வதற்காக என் நெஞ்சு இப்போது அங்கே சென்றிருக்கிறது' என்கிறாள் தலைவி. இந்தக் கபிலர் பாடல் தலைவியின் நெஞ்சம் படும்பாட்டை மிக நுட்பமாக எடுத்தியம்புகிறது. எவ்வளவு உணர்ச்சி நிறைந்த கற்பனை இது!
"... ... நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
கான நாடன் வரூஉம் யானைக்
களிற்றுப் புறத்துஅன்ன கல்மிசைச் சிறுநெறி
மாரி வானம் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி இயவின்
இருளிடை மிதிப்புழி நோக்கிஅவர்
தளரடி தாங்கிய சென்றது இன்றே (அகநா.128)
கண்கள் பேசும், தின்னுமா?: கண்கள் பார்க்கும், பேசுமா? நெஞ்சம் நினைக்கும், பறக்குமா? காதல் வயப்பட்டோருக்கு எல்லாம் நிகழும். இதுதான் கவியின் கற்பனைத் திறம். தலைவனைப் பிரிந்த தலைவி, தன் நெஞ்சை முன்னிலைப்படுத்தி மற்றவரிடம் சொல்ல முடியாததைத் தமக்குத் தாமே சொல்லி ஆற்றிக் கொள்கிறாள். "நினைத்த மாத்திரத்தில் நெஞ்சே, அவரிடம் நீ சென்று விடுகிறாய். நீ செல்லும்போது என் கண்கள் இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டு போய்விடேன்... அவை இரண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்று என்னைத் தின்று துன்பம் தருகின்றன' என்கிறாள் வள்ளுவர் காட்டும் தலைவி.
"கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று!'
இடையில் கையூன்றி நிற்கும் நெஞ்சம்: உலா வரும் பாண்டிய மன்னனைப் பார்த்து உள்ளம் பறிகொடுத்தாள் பெண் ஒருத்தி. அவள் நெஞ்சம் மன்னவன் பின் சென்றது. அவள் வெறும் உடலோடு இல்லம் ஏகினாள். அவளது நினைவுகள் அவனைப் பற்றியும், அவனைப் பின் தொடர்ந்த தனது நெஞ்சத்தைச் சுற்றியுமே வட்டமிட்டன. "எனது நெஞ்சம் இந்நேரம் அரசன் பின்னே சென்றிருக்குமோ? அரண்மனை வாயிலைச் சென்று அடைந்திருக்குமோ? அவனது அனுமதி கிடைக்கும் வரை வாயிலில் காத்துக் கொண்டிருக்குமோ? நெடுநேரம் காத்திருந்து கால்வலி அடைந்திருக்குமோ? வலியால் நிற்க முடியாது இடுப்பில் கையூன்றி நின்று கொண்டிருக்குமோ?' என நினைவுக் கடலில் நீந்துகிறாள் அக்கன்னி.
சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெருந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி முன்றில்
முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு
உழந்துபின் சென்றஎன் நெஞ்சு (முத்தொ.110)
மனிதர்களைப் போலவே, "நெஞ்சமும் இடையில் கையூன்றி நிற்குமோ?' என்பது எவ்வளவு அழகான - இயல்பான சித்தரிப்பு! இலக்கியக் காதலர் படும் பாடு எவ்வளவு உண்மையோ, அதேபோல அவர்கள் நெஞ்சம் படும் பாடும் அத்தகையதே!