இந்த வாரம் கலாரசிகன் - (28-11-2021)
ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதைவிட அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்படி இயங்குகிறார் என்பதில்தான் அவரது பெருமை இருக்கிறது என்கிற பாடத்தை நமக்குக் கற்றுத் தருபவர் கவிஞர் சிற்பி.
ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதைவிட அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்படி இயங்குகிறார் என்பதில்தான் அவரது பெருமை இருக்கிறது என்கிற பாடத்தை நமக்குக் கற்றுத் தருபவர் கவிஞர் சிற்பி. தமிழகத்தின் ஒரு கோடியில் இருக்கும் பொள்ளாச்சியில் இருந்துகொண்டு அவர் ஆற்றுகிற தமிழ்ப்பணி வியப்புக்குரியது.
டாக்டர் எல்.பி.தங்கவேலு இல்லத் திருமண வரவேற்புக்குக் கோயம்புத்தூர் சென்றிருந்தபோது, "கவிக்கோ மன்றம்' நிறுவனர் எம்.ஏ.முஸ்தபாவும் நானும் பொள்ளாச்சிக்குப் போய் கவிஞர் சிற்பியை சந்திக்க முடிவெடுத்தோம். அவருக்கு "ஆஞ்சியோ' சிகிச்சை நடந்தபோதே நேரில் சென்று நலம் விசாரிக்க
வேண்டும் என்று நான் விழைந்தேன். அவரது அகவை 85-க்கும் நேரில் போய் வாழ்த்த முடியவில்லை. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக நிறைவேறாமல் இருந்த அந்த விருப்பம் இப்போது நிறைவேறியது.
கவிஞர் சிற்பி சுறுசுறுப்பாக இயங்குவதன் ரகசியம், பொள்ளாச்சியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது புரிந்தது. அவரைச் சுற்றிலும் இளைஞர்கள். அத்தனை பேரும் இலக்கிய தாகம் கொண்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள். ஏதோ பண்டைக்கால குருகுலம் போலத் திகழ்கிறது கவிஞர் சிற்பியின் வீடு.
Advertisement
கவிஞர் சிற்பியும், முஸ்தபாவும் நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ள நிறையவே இருந்தது. நான்,
ஆளுமைமிக்க அந்தக் கவிஞரை அண்ணாந்து பார்த்து வியக்கும் அவரது ரசிகன். நான் கவிஞரிடமிருந்து பல இலக்கியப் பதிவுகள் குறித்தும், அவரது பார்வை குறித்தும் தெரிந்து கொண்டேன்.
"படிக்கிறார், படிக்கிறார், நிறைய படிக்கிறார். படித்துக்கொண்டே இருக்கிறார்' என்று சொல்ல வேண்டும் என்றால், அந்தப் பட்டியலில் கவிஞர் சிற்பிக்கு முதலிடம் தரலாம். சமீபத்தில் வெளிவந்திருக்கும் புதினங்கள் உள்பட அவர் படித்திருப்பவை என்னை மலைப்பில் ஆழ்த்தின. சாகித்ய அகாதெமி மட்டுமல்லாமல், நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்புப் புலம் வேறு சேர்ந்து கொண்டுள்ளதால், அவர் ஓய்வொழிவில்லாமல் படித்துக் கொண்டிருப்பதில் வியப்பில்லைதான்.
நானும்தான் படிக்கிறேன். புத்தகங்கள் வைத்திருக்கிறேன். எத்தனையோ பேர், ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வைத்திருப்பதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால், தன்னிடம் இருக்கும் புத்தகங்களைக் கவிஞர் சிற்பி தேர்ந்தெடுத்து, வகை பிரித்து அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தி இருக்கிறதே, அதன் அழகைச் சொல்லி மாளாது. கொஞ்சம்கூடத் தூசியில்லாமல் அவரால் எப்படி புத்தகங்களைப் பாதுகாக்க முடிகிறது? நூலகர்கள் அவரிடம் பாடம் கற்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான சிற்பி அறக்கட்டளை விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தபோது எனக்கும் மகிழ்ச்சி. தகுதியானவருக்குத் தகுதியான விருது வழங்கப்படும்போது மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்யும்...
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவருடனும், அவரைச் சுற்றியுள்ள இளைஞர் பட்டாளத்துடனும் உரையாடி மகிழ்ந்து, பிரியாவிடை பெற்றுக் கோவை திரும்பினோம் - சிற்பி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்திப்போம் என்கிற உறுதிமொழியுடன்!
நிஜத்தைச் சொல்வதாக இருந்தால், எழுத்தாளர் கோவி.மணிசேகரனை நான் மறந்துதான் போயிருந்தேன். சுமார் பத்தாண்டுகளாக அவர் குறித்தும், அவர் படைப்புகள் குறித்தும் நினைவு கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படாததுதான் காரணம். அதற்கு முன்னால், அந்த அற்புதமான எழுத்தாளரின் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, "அடடா, ஏன் அவரை சில ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்து விட்டோம்' என்கிற குற்ற உணர்வு ஏற்படுகிறது.
ஒரு மிகச் சாதாரணமான பின்னணியில் பிறந்து, வளர்ந்து மிகச் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் அவரால் இடம்பெற முடிந்தது என்பதுதான் கோவி. மணிசேகரனின் தனிச் சிறப்பு. அச்சுத் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் கற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழும் சாஸ்திரிய சங்கீதமும்
கற்றவர்.
தனது 16-ஆவது வயதிலிருந்து எழுதத் தொடங்கியவர். ஏறத்தாழ 80 ஆண்டு இலக்கியப் பயணத்தில் 95 சரித்திர நாவல்கள், 47 சமூக நாவல்கள், 5 நாடக நூல்கள், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று எழுதிக் குவித்த படைப்பிலக்கியவாதி அவர்.
கோவி.மணிசேகரனுக்கு 1992-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்த படைப்பு அவரது "குற்றாலக் குறிஞ்சி' என்றாலும், எனக்குப் பிடித்த படைப்பு அவரது "யாகசாலை' நூல். அவரது நடையழகும், கருத்தாழமும் நெஞ்சையள்ளும்.
கோவி.மணிசேகரனுக்கு தான் ஓர் எழுத்தாளர் என்கிற "வித்யா' கர்வம் (ஞானச்
செருக்கு) எப்போதுமே உண்டு. "யாகசாலை' அணிந்துரையில் அவர் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
""நானே, நானே என்ற சொல்லுக்குக் "கர்வம்' என்ற பொருளில்லை; "கர்மம்' என்ற அர்த்தம். பகவத் கீதையில் பகவான் பல இடங்களில் "நான்' என்ற மமகாரத்துடன் பேசுகிறான். பிரபஞ்சத்தைப் படைத்தவன் பகவான். பிரபஞ்சத்தை அறிவுப்பூர்வமாக ஆக்குகிறவன் பிறவி எழுத்தாளன். இருவருக்குமே "நான்' என்ற சொல் மமகாரமற்றது. அப்படிச் சொல்ல அதிகாரமுண்டு. இது ஆணவமாகாது; இது ஒரு திருஷ்டாந்தம்'' என்கிறார் கோவி.
பத்து நாள்களுக்கு முன்னால் அவர் தனது 95-ஆவது வயதில் காலமான செய்தி வந்தபோது, எனது நினைவு பின்னோக்கிப் பயணித்தது. இயக்குநர் கே.பாலசந்தரிடம் நீண்ட நாள்கள் உதவி இயக்குநராக அவர் பணியாற்றி இருக்கிறார். "யாகசாலை' நாவலை அவர் திரைப்படமாக்கியபோது, படப்பிடிப்பில்தான் அவருடனான எனது முதல் அறிமுகம். அது 1980-ஆம் ஆண்டு. அதற்குப் பிறகு பல முறை சந்தித்திருக்கிறேன்.
"தினமணி' ஆசிரியராக அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது எனது துரதிருஷ்டம். நேரில் போய் நலம் விசாரித்திருந்தால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார்.
அவர் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது - "தமிழும் சம்ஸ்
கிருதமும் ஒருதாய் வயிற்றின் இரட்டைக் குழந்தைகள்!'
-------------------------------
கவிஞர் சிற்பி கையொப்பமிட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகங்களில் ஒன்று "சர்ப்பயாகம்'. 1976-இல் அந்தப் புத்தகம் வெளியானபோது நான் சென்னையில் "நாரேட்டர்' என்கிற ஆங்கில இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதிலிருந்த "கனவுகள்' கவிதையில் வரும் வரிகள் அற்புதமான கற்பனை. அப்போது படித்து ரசித்ததை இப்போது மீண்டும் ரசித்துப் படித்தேன்.
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாவது பதிப்பாக அந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது என்பது கவிஞர் சிற்பியுடைய கவிதா விலாசத்தின் சிறப்பு என்பதல்லாமல் வேறென்ன? அந்தக் கவிதை வரிகள் இவை -சூரிய வெப்ப
முலைப்பால் அருந்திப்
புறவெளி மெத்தையில்
புரண்டு படுக்கும்
பூமிக் குழந்தையின் கனவில்
நிலா பலூன்கள்
நட்சத்திர மிட்டாய்கள்!