தனிப்பெருமை கொண்ட திருமுருகாற்றுப்படை!
அச்சில் நூல்களைப் பதிப்பிப்பதற்கு முன்பு நம் முன்னோர், சுவடிகளைச் சேகரித்து, திரட்டிய சுவடிகளை ஒப்பு நோக்கி பிழையற்ற மூலபாடத்தை அறிவதுண்டு.
அச்சில் நூல்களைப் பதிப்பிப்பதற்கு முன்பு நம் முன்னோர், சுவடிகளைச் சேகரித்து, திரட்டிய சுவடிகளை ஒப்பு நோக்கி பிழையற்ற மூலபாடத்தை அறிவதுண்டு. அதனைப் பரிசோதித்தல், பார்வையிடுதல் என்று குறிப்பிடுவர். பின்னர் நூல்களை அச்சாக்கம் செய்யும் பணியினைச் செய்தனர்.
அத்தகைய அச்சாக்கப் பணியில் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வெளிவரத் தொடங்கின. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். அவற்றில் சங்க இலக்கியங்களுள் முதல் நூலாகக் காப்புச் செய்யுள் போல அமைந்த திருமுருகாற்றுப்படை ஜய ஆண்டு (1834) ஆவணி மாதம் திருத்தணிகை சரவணப் பெருமாளையரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.
இப்பதிப்பு நச்சினார்க்கினியருரையில் இருந்தபடியே பரிசோதித்து உரையில்லாமல் மூலபாடமாக வெளிவந்துள்ளது. இந்நூலே சுவடியிலிருந்து புத்தக வடிவில் வந்த முதல் சங்க இலக்கியப் பதிப்பாகும்.
திருமுருகாற்றுப்படை முருகப் பெருமானின் புகழ் பாடுவதால் சைவ அன்பர்கள் இதன் செய்யுட்களைத் தினந்தோறும் பாராயணம் செய்வர். அதனால் திருமுருகாற்றுப்படை, பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் என இருவகையான நிலையில் பதிப்பிக்கப்பட்டது.
இந்நூலைப் பக்தி இலக்கியப் பதிப்பாகப் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலர் ஆவார். இவர் சுக்கில (1869) வருட வைகாசி மாதம் திருவாலவாயுடையார் முதலிய பன்னிருவர் அருளிய நாற்பது பிரபந்தங்கள் அடங்கிய பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்தார்.
ஆறுமுகநாவலர் பதிப்பு வந்து ஏறத்தாழ பத்தொன்பது ஆண்டுகள் கழித்துத் திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பத்துப்பாட்டுப் பதிப்பை அச்சில் கொண்டு வந்தவர் பதிப்புத்துறையில் ஆழங்காற்பட்ட உ.வே. சாமிநாதையர் ஆவார். இவர் 1889-ஆம் ஆண்டு நச்சினார்க்கினியர் உரையுடன் பத்துப்பாட்டை முழுமையாகப் பதிப்பித்தார். பின்னர் இவரே மூலம் மட்டுமே அமைந்த பத்துப்பாட்டை 1931-ஆம் ஆண்டு வெளியிட்டார்.
பொதுவாகத் திருமுருகாற்றுப்படைப் பதிப்புகளை மூலப்பதிப்புகள், உரைப் பதிப்புகள் என வகைப்படுத்தலாம். அவற்றில் மூலப்பதிப்பு என்பது உரையாசிரியர்களின் உரையில்லாமல் நூலாசிரியரால் இயற்றப்பட்ட செய்யுள்களை மட்டுமே பதிப்பித்தலைக் குறிக்கும்.
அந்த வகையில் மழவை மகாலிங்க ஐயர் (1845), தி. சண்முக ஐயர் (ஆண்டு அறியக்கூடவில்லை), காஞ்சி நாகலிங்க முதலியார் (1891), அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் (1892), ஊ. புஷ்பரத செட்டியார் (1896, 6-ஆம் பதிப்பு) ஆகியோர் திருமுருகாற்றுப்படைக்கு மூலப்பதிப்புகள் கொண்டு வந்துள்ளதைக் குறிப்பிடலாம்.
திருமுருகாற்றுப்படை மூலபாடம் தொகுப்பு நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் 1888-ஆம் ஆண்டு அ. இராமசுவாமியால் பதிப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் பிரபந்தக் கொத்து, 1940-ஆம் ஆண்டு சைவசித்தாந்த மகாசமாஜத்தால் வெளியிடப்பட்ட சங்க இலக்கியம், 1957-ஆம் ஆண்டு மர்ரே
எஸ். ராஜத்தால் வெளியிடப்பட்ட பத்துப்பாட்டு ஆகிய பதிப்புகளைக் கூறலாம்.
செய்யுள்களுக்கு உரையாசிரியர்கள் எழுதும் உரை, மரபுரை, புத்துரை என இருவகைப்படும். மரபுரை என்பது பழைய உரையாசிரியர்களால் எழுதப்பட்டதாகும். இவ்வுரையைத் திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதி போன்றோர் எழுதியுள்ளனர். இந்நூலுக்கு மரபுரைகள் எழுதியது போன்று வேறு எந்தச் சங்க இலக்கியத்திற்கும் மரபுரைகள் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1853-ஆம் ஆண்டு நச்சினார்க்கினியரின் உரைப்பதிப்பை சுப்பராய முதலியாரும், 1885-ஆம் அண்டு பரிமேலழகரின் உரைப்பதிப்பை தி. சண்முக பிள்ளையும், 1943-ஆம் ஆண்டு உரையாசிரியரின் உரைப்பதிப்பை பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையும் 1950-ஆம் ஆண்டு கவிப்பெருமாள், பரிதி ஆகியோரின் உரைப்பதிப்பைத் திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து (நச்சினார்க்கினியர், உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதி) என்னும் தலைப்பில் கே.எம். வேங்கடராமையா, வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆகியோர் இணைந்தும் வெளியிட்டுள்ளனர்.
இவை அனைத்தும் திருமுருகாற்றுப்படைக்கு வெளிவந்த பழைய உரையாசிரியர்களின் முதல் உரைப் பதிப்புகளாகும்.
பிற்காலத்தில் சைவஅன்பர்கள், மாணவர்கள் ஆகியோர் திருமுருகாற்றுப்படையின் பொருளை எளிதில் புரிந்து கொள்வதற்காகப் புதிய உரைகளை உரையாசிரியர்கள் எழுதினர். அந்த வகையில் புத்துரைப் பதிப்பை முதல் முதலில் நச்சினார்க்கினியர் உரைத் தழுவி எழுதியவர் அர. இலட்சுமணன் ஆவார்.
இவரைத் தொடர்ந்து ஆறுமுக நாவலர் 1853-ஆம் ஆண்டு நச்சினார்க்கினியர் உரைக் கருத்தைத் தழுவிப் பதிப்பொன்றைக் கொண்டு வந்தார். இப்பதிப்புத் தொடங்கி 1967-ஆம் ஆண்டு வரை 19 முறை இந்நூலுக்கு மறுபதிப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் உரைப் பதிப்பினுடைய சிறப்புக் கருதியே இந்நூல் மறு பதிப்புகள் பல கண்டது.
திருமுருகாற்றுப்படைக்குப் புத்துரைகள் பல உள்ளன. அவற்றில் திருத்தணிகை சரவணப் பெருமாளையரின் பதவுரை (1902), எஸ். துரைசாமி ஐயரின் பொழிப்புரையுடன் அரும்பத விளக்கம் (1920), ஆர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் விருத்தியுரை (1933), வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியாரின் ஆராய்ச்சியுரை (1935), க.ரா. ஜமதக்கனி நாயகரின் விருத்தியுரை (1937), சு. அருளம்பலனாரின் ஆராய்ச்சியுரை (1937), பொ.வே. சோமசுந்தரனாரின் விளக்கவுரை (1950) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
திருமுருகாற்றுப்படைப் பதிப்புகள் விற்பனை நோக்கத்தோடு வெளியிடப்பட்டபோதும் அந்நூல் அதிக மக்களைச் சென்று சேரவேண்டும் எனும் நோக்கில் இலவசப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. அந்த வகையில் காஞ்சி நாகலிங்க முனிவர் 1934-ஆம் ஆண்டு திருமுருகாற்றுப்படை மூலபாடத்தை பத்தாயிரம் படிகளுடன் இலவசப் பதிப்பாகக் கொண்டு வந்தார்.
திருத்தணிகை சரவணப் பெருமாளையர் தொடங்கிய திருமுருகாற்றுப்படைப் பதிப்பு இன்று வரை முந்நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ளது. வேறு எந்தச் சங்க இலக்கிய நூலுக்கும் இப்பெருமை கிட்டவில்லை.