முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 23-07-2023

மானிடர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை 120 ஆண்டுகள் என்பார்கள். கிரகங்களின் சுழற்சி ஒரு சுற்று முடிய 120 ஆண்டுகள் எடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிப்பதாகச் சொல்கிறார்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:41 AM
பகிர்:


மானிடர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை 120 ஆண்டுகள் என்பார்கள். கிரகங்களின் சுழற்சி ஒரு சுற்று முடிய 120 ஆண்டுகள் எடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி 120 ஆண்டுகள் முழு வாழ்க்கை வாழ்ந்தவர் ஆச்சாரியர் ஸ்ரீராமாநுஜர்.

ஒவ்வொரு கிரகமும் தனது சுழற்சியின்போது ராமாநுஜரின் இறுதிக்காலம் ஏற்படக் கூடாது என்று பிடிவாதமாக இருந்து விட்டதாகவும், அனைத்து கிரகங்களின் 120 ஆண்டு சுழற்சி முடிந்தபோது அதற்கு மேலும் வாழ, தான் ஆசைப்படவில்லை என்று ஜீவமுக்தியை வரித்துக்கொண்டார் "பாஷ்யகாரர்', "திருப்பாவை ஜீயர்' என்றெல்லாம் போற்றப்படும் ஆச்சாரியர் ராமாநுஜர் என்று கூறப்படுகிறது.

அகவை 120ஐ எட்டுவது இருக்கட்டும், நூறு ஆண்டுகள் வாழ்வது என்பதே வெகு சிலருக்கு மட்டுமேதான் சாத்தியமாகி இருக்கிறது. நூறு ஆண்டுகள் வாழ்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் நடமாடிக் கொண்டும், செயலாற்றிக் கொண்டும் இருப்பவர்கள், நூறாயிரத்தில் ஒருவர் இருப்பதுகூட அபூர்வம். அப்படி ஒருவர் இருந்தால் அவர் இருக்கும் திசைநோக்கித் தெண்டனிட்டுத் தொழுது புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கமும், முறையான திட்டமிட்ட பழக்க வழக்கங்களும் இருந்தால், நூறாண்டு காலம் திட ஆரோக்கியத்துடன் செயல்பட்டுக் கொண்டு வாழ முடியும் என்பதற்கு நம்மிடையே எடுத்துக்காட்டாக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, வாரா வாரம் எழுதிக் கொண்டும் இருக்கிறார்; செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.
கடந்த வாரம் சென்னை, திருவல்லிக்கேணி பகுதி வழியாக காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். தெற்கு மாட வீதி வழியே சென்றபோது, பெரியவர் ஏ.எம். ராஜகோபாலனைச் சந்தித்து ஆசிபெற வேண்டுமெனத் தோன்றியது. இரண்டாவது மாடியில் இருந்த அவரது வீட்டுக்குப் போய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவரிடம் ஜோதிடம் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் பேசுவது என் வழக்கம்.

"தினமணி' மீது அவருக்கு அளப்பரிய காதல் உண்டு. தினமணியின் "வெள்ளிமணி' இணைப்பில் தான் ஜோதிடம் எழுதிக் கொண்டிருந்த காலத்தை "பொற்காலம்' என்று அவர் அடிக்கடி வர்ணிப்பதுண்டு. இரண்டாவது மாடியில் குடியிருக்கும் ஏ.எம்.ஆர். நாள்தோறும் குறைந்தது மூன்று நான்கு முறையாவது மாடிப்படிகளில் ஏறி இறங்குகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்றாடம் பூஜை புனஸ்காரம் என்று தவறாமல் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து கொண்டிருக்கும் ஏ.எம்.ஆரின் மகன், தனது பெற்றோருடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அமெரிக்காவில் தான் வகித்துவந்த உயர்பதவியைத் துறந்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். அதிலிருந்தே எந்த அளவுக்கு அவரது குழந்தைகள் பெற்றோர் மீது பாசமும், பக்தியும் வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஏ.எம்.ஆர். தம்பதியரை நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்து எழுந்து, விடைபெற்றபோது அவர் மெதுவாக என்னிடம் தெரிவித்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜூலை 27 கோடானு கோடியில் ஒருவருக்கு வாய்க்கும் அரிய வாய்ப்பை, அவர் நெஞ்சில் நிறுத்தி வணங்கும் நாராயணன் பெரியவர் ஏ.எம்.ஆருக்கு வழங்கி இருக்கிறான்!

------------------------------------------------


மயிலாப்பூர் சென்றால் "அல்லயன்ஸ்', தி.நகர் பாண்டிபஜார் சென்றால் "வானதி' என்பதுபோல, கோவைக்கு நான் சென்றால், முடிந்தவரை விஜயா பதிப்பகம் செல்லாமல் இருப்பதில்லை. நேற்று முன்தினம், எங்கள் அலுவலக நிருபர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை சென்றிருந்தேன். வழக்கம்போல விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியை சந்திக்கப் போயிருந்தேன்.

அங்கே வேறு ஏதோ வேலை நிமித்தம் வந்திருந்தார் ஆயிரம். நடராஜன். என்னைப் பார்த்ததும் தொடர்ந்து வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் விராக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம். நடராஜன், பல்வேறு பெரு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்துப் பணி ஓய்வுபெற்று இப்போது கோவையில் வாழ்ந்து வருவதாகக் கூறினார். 

கல்கியின் "பொன்னியின் செல்வன்' தொடராக வெளிவந்தபோது, பதின்மூன்று வயதில் வாரா வாரம் எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கியவரின் வாசிப்புப் பழக்கம் தமிழ், ஆங்கிலம் என்று பல நூறு நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எனக்கு மனச்சோர்வோ, பிரச்னையோ வரும்போதெல்லாம் நான் மேஜையிலேயே வைத்திருந்து படிக்கும் புத்தகம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய "தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ'. நான் பிறந்த ஆண்டு வெளிவந்த நாவல் அது. 1953இல் புலிட்சர் விருதையும், 1954இல் இலக்கியத்துக்கான நோபல் விருதையும் ஹெமிங்வேக்குப் பெற்றுத்தந்த சாகாவரம் பெற்ற அற்புதமான படைப்பு.

என்னை மட்டுமல்ல, உலகில் பல லட்சம் வாசகர்களை ஈர்த்த, பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த புத்தகம் குறித்துப் பேசி சிலாகிக்காதவர்களே கிடையாது. விற்பனையில் உலக சாதனை படைத்த எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் நாவலைப் பலமுறை வாசித்து வாசித்து, அதைத் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டதாகக் கூறினார் ஆயிரம். நடராஜன். "கடலும் ஒரு கிழவனும்' என்று அவர் மொழியாக்கம் செய்திருந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் மலையாளத்திலுமாக இந்த நாவலின் பல மொழிபெயர்ப்புகளைப் பலமுறை நான் படித்துவிட்டேன். ஆயிரம். நடராஜனின் மொழிபெயர்ப்பும், அவற்றில் ஒன்று. இதில் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் தங்களை எர்னெஸ்ட் ஹெமிங்வேயாக பாவித்து மொழிபெயர்த்திருந்தார்கள்; ஆயிரம். நடராஜன் தன்னை அந்தக் கிழவனாகவே பாவித்து மொழிபெயர்ந்திருக்கிறார்!


கவிஞர் தபசி எனக்கு அனுப்பித் தந்திருந்த "இன்னும் இந்த வாழ்வு' கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கிறது "பிறப்பிடம் நோக்கி' என்கிற இந்தக் கவிதை  

நகரத்திலிருந்து 
கிராமங்களுக்குச் செல்கின்றன
பருத்தி ஆடைகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
பதப்படுத்தப்பட்ட பால்
பனைமட்டை விசிறிகள்!

முழு கட்டுரையைப் படிக்க →