முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (31-03-2024)

நூற்றாண்டு விழாவில் தி.க.சி. உருவான நினைவுகள்

Updated On : 23 மார்ச், 2026 at 5:20 PM
பகிர்:

நெல்லையிலிருந்து ஓவியர் வள்ளிநாயகம் அழைத்திருந்தார். மார்ச் 30-ஆம் தேதி தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிறது என்கிற தகவலைத் தெரிவித்தார். நாளும் பொழுதும் தி.க.சி.யின் நினைவுடன் இப்போதும் உழன்று கொண்டிருக்கிறார்கள் ஓவியர் வள்ளிநாயகமும், பொன்னையனும், பாபுவும். அந்த மாமனிதரை நிழலாகத் தொடர்ந்தவர்கள் அவர்கள் மூவரும்.

தி.க.சி. பிறந்தது மார்ச் 30 என்றால், அவர் மறைந்தது மார்ச் 25-ஆம் தேதி. தி.க.சி. மறைந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் அவரது கலகலச் சிரிப்பும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத பண்பும், பெரியவர் சிறியவர் வேறுபாடில்லாமல் அனைவருடனும் சரிசமமாகப் பழகும் தோழமையும் வேறு யாரிடம் காண முடியும்?

எனது ஆசிரியர் உரையைப் படித்துவிட்டு வாரத்தில் ஒரு நாளாவது அவரிடமிருந்து கைப்பேசியில் பாராட்டு வந்துவிடும். அதேபோல, அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் பொன்னையனிடம் என்னை அழைக்கச் சொல்லி, தனது கருத்தைத் தெரிவித்து விடுவார்.

சுடலைமாடன் கோயில் தெருவுக்குப் போய் அவரை சந்திப்பது என்பது ஒரு சுகானுபவம். அந்தச் சிறிய வீட்டின் தரையில் பாயை விரித்துக்கொண்டு நான் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த நாள்கள் உண்டு. அவருடன் நடந்து சென்று நெல்லை டவுனில் தெருவில் நின்றுகொண்டு தேநீர் அருந்தியபடி சமூக, இலக்கிய, அரசியல் சங்கதிகளைப் பேசிக்கொண்டிருந்த அந்த நாள்களை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

அவருக்கென்று சில தேர்ந்தெடுத்த உணவகங்கள் உண்டு. சிறிய சந்துக்குள் நான்கைந்து பெஞ்சுகளை போட்டு யாராவது உணவகம் நடத்திக் கொண்டிருப்பார்கள். "வாருமய்யா, அந்தக் கடையில் போய் ரவா பொங்கல் சாப்பிடுவோம், நல்லாயிருக்கும்' என்று அழைத்துப் போவார். தேவாமிர்தமாக இருக்கும். அவரது ரசனை இலக்கியத்தோடு மட்டுமல்ல, உணவையும் விட்டுவிடவில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

""உம்மை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா? உம்மோட எழுத்தில் "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்கிற சிந்தனை அடித்தளமாக இருக்கிறதனால் பிடித்திருக்கிறது''- எனக்கும் எனது எழுத்துக்கும் இதைவிடப் பெரிய பாராட்டும், அங்கீகாரமும் வேறு என்னவாக இருக்க முடியும்?

நான் எழுதிய அரசியல் தலைவர்களின் நேர்காணல்களின் தொகுப்பான "சாளரம்' புத்தகத்துக்கும், ஆசிரியர் உரைகளின் தொகுப்பான "உண்மை தெரிந்தது சொல்வேன்' புத்தகத்துக்கும் அவர் அணிந்துரை வழங்கி இருந்தார். "இந்த வாரம்' பத்தி தொகுக்கப்பட வேண்டும் என்று என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த தி.க.சி., அது தொகுக்கப்பட்டபோது, நம்மிடையே இல்லாமல் போனது எனது துரதிருஷ்டம்.

தி.க.சி.யிடமிருந்து நான் படித்த பாடம்தான், அவரது வழிகாட்டுதல்தான், முகம் தெரியாத கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பாராட்டுவது. நல்ல எழுத்து யாருடையதாக இருந்தாலும் அதைப் பாராட்டும் பரந்த மனம் ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சாவியும், தி.க.சி.யும் எனக்குக் கற்றுக்கொடுத்தனர்.

"பாராட்டு என்பது மழைபோல. மழைப்பொழிவால் புல் பூண்டுகளும் வளரும், மரம், செடி, கொடிகளும் அதனதன் அளவுக்கேற்ப வளரும். அதே போலத்தான் பாராட்டும். வஞ்சம் பாராமல் எழுத்தாளர்களைப் பாராட்ட வேண்டும். யாருக்குத் தெரியும், அவர்களில் ஒரு கல்கியோ, புதுமைப்பித்தனோ, ஜெயகாந்தனோ, நா.பா.வோ இருக்க மாட்டார்கள் என்று' - இதுதான் தி.க.சி. என்கிற விமர்சகரின் பார்வை!

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், தமிழகத்தில் உள்ள இலக்கிய அமைப்புகளும் தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டை விமரிசையாகக் கொண்டாடுவதன் மூலம், பாரதியார், தோழர் ஜீவா, பாரதிதாசன், புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, டி.எஸ்.சொக்கலிங்கம் - வரிசையில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தி.க.சி. காலத்தின் குரல்!

தி.க.சி.யைப் போலவே எனது நினைவிலிருந்து அகலாத இன்னொரு எழுத்தாளுமை உண்டென்றால் அது வலம்புரி ஜானாகத்தான் இருக்க முடியும். என்னவொரு எழுத்து... வார்த்தைகள் அந்த மனிதரிடம் போட்டி போட்டுக்கொண்டு சல்லாபம் செய்யும் வித்தகத்தைக் கண்டு நான் மலைத்துத்தான் போகிறேன்.

வலம்புரி ஜானின் "பாரதி ஒரு பார்வை' புத்தகத்தைப் பல தடவை படித்து விட்டேன். நேற்று இரவு மீண்டும் ஒருமுறை பிரித்தேன், மிதந்தேன். வார்த்தைச் சித்தரின் எழுத்துக்களைப் படித்தால் பித்துப் பிடித்துவிடுகிறது.

காஞ்சி முனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அந்தப் புத்தகத்தைக் காணிக்கையாக்கி இருந்தார். வலம்புரி ஜானின் தமிழை நீங்களுந்தான் கொஞ்சம் ரசித்துப் பருகுங்களேன்-

"ஒவ்வொரு புத்தகமும் நான் முட்டாள் என்பதைத்தான் குட்டி குட்டிச் சொல்கிறது. ஒவ்வொரு புத்தகம் எழுதுகிறபோதும் நாம் கண்டுபிடித்ததெல்லாம் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்பதுதான்.

எங்கே உங்கள் புத்தகங்கள் என்று கேட்கிறார்கள். விழுதுகளைப் பார்க்க நேரமில்லாத அரச மரத்துக்கு சருகுகளை சேகரிப்பதற்குப் பொழுது எங்கே இருந்து வரும்?

பறவைகள் கூடுகளைச் சுமந்துகொண்டு போவதில்லை. கோழிக்குஞ்சுகள் தோடுகளைத் தோள்களிலே ஏந்திக் கொள்வதில்லை.

கொடியை அறுத்துக்கொண்டு விழுந்த பிறந்த குழந்தையை நீங்கள் என்றாகிலும் பார்த்ததுண்டா?

அவை ஒரு பறவை உதிர்த்துவிட்டுப்போன சிறகுகள்.

எழுதுகிறபோது எண்ணத்தில் வேள்வி நடப்பதுபோல இருக்கும். எழுதுகோல் விடைபெறும்போதோ தாள்களில் நீலம் பூத்திருக்கும்....'

புத்தக விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது கவிஞர் "அவை நாயகன்' எழுதிய "சூரியச் செதில்கள்'. 1988-ஆம் ஆண்டு வெளியான இந்தக் கவிதைத் தொகுப்பு, 36 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், தமிழில் வெளிவந்த 5-வது ஹைக்கூ தொகுப்பு இது. அதிலிருந்து ஒரு துளிப்பா-

கவிஞனின் உயிலைத் தேடினார்கள்

அகப்பட்டது

சீட்டுக்கவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.