தமிழ் அறிவோம் 
தமிழ்மணி

தமிழ் கூறும் ஆசிரியர் பண்பு

காந்தம் தன்னுடன் சேர்ந்த இரும்புத் துண்டை காந்தமாக்குகிறது. நெருப்பு தான் சேர்ந்த பொருளையும் அவ்வண்ணம் ஆக்கிவிடுகிறது.

DIN

முனைவர் பா. சக்திவேல் 

காந்தம் தன்னுடன் சேர்ந்த இரும்புத் துண்டை காந்தமாக்குகிறது. நெருப்பு தான் சேர்ந்த பொருளையும் அவ்வண்ணம் ஆக்கிவிடுகிறது. தயிர் தன்னுடன் சேர்ந்த  பாலுக்கும்  (விரைவில் கெடத்தக்கது) முக்தியளித்து  வெண்ணையாக, நெய்யாக (விரைந்து கெடாத)   உருவாகும் வாய்ப்பை / பதத்தை ஏற்படுத்தித்  தருகிறது. நீரோட்டம் தன்னுள் சேர்ந்த பொருளையும் தூய்மை செய்து இழுத்துச் சென்று வளமான பகுதிக்கு கொண்டு சேர்க்கிறது. குருவானவர் திருவாக இருந்து ஒரு மனிதன், மனிதனாக மனிதத்தோடு உருவாகக் காரணமாக இருப்பவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், ஒருவர்  பிறப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அடுத்து, சிறப்பதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆசிரியர்களின்  வழிகாட்டுதல்களும், நெறிஆளுகைகளும்  சிறியோர்களாய் இருந்தவர்களைப்  பெரியோர்களாக  நிமிர்ந்து நிற்கச் செய்கிறது என்பதில் ஐயமில்லை. அப்படி தெய்வத்திற்கு நிகராகத் தொழப்படும் ஆசிரியர்கள் குறித்து தமிழிலக்கியத்தில் பல எடுகோள்கள் உள்ளன.

குரு கல்வி, கேள்வி முதலியவற்றோடு அருள் செறிந்த ஞான சொரூபமாகத்  திகழ்வதால் அவரைக் கண்டாலே பல குழப்பங்களுக்கு தெளிவு பிறந்துவிடும்.  அவர் பெயர் உச்சரித்தாலே தெளிவுத்தன்மை  ஏற்படும். அவர் திருவாய் மலர்ந்த திருவார்த்தைகளைக் கேட்டாலே தெளிவு கிட்டும்.

அவருடைய உருவத்தை மனதினில் நிறுத்தி அவரை மனக்கண்ணால்  தரிசித்துச் சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என திருமூலர் மொழிந்திருப்பது சிவகுருத் திருமேனியை அறியும் யோகக் கலைகளுக்கு மட்டுமல்ல, வாழ்வியலையும் ஏனைய நெறிகளையும் பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கும் பொருந்துவனவாகவே  உள்ளது.

தெளிவு  குருவின்  திருமேனி  காண்டல்

 தெளிவு  குருவின்  திருநாமம்  செப்பல்

 தெளிவு  குருவின்  திருவார்த்தை  கேட்டல்

 தெளிவு  குருவுருச் சிந்தித்தல்  தானே. (183)

நல்லாசிரியன் குறித்து நன்னூலில் கூறப்பட்டுள்ளவையாவன:

ஆசிரியர் என்பவர் உயர்குடியில் பிறந்தவராக, தெய்வப் பற்றுக் கொண்டவராக, மேலான அறங்களை போதிக்கும் அரிய நூல்கள், கலைகளைக் கற்று, தெளிவு கொண்டு அதன் மூலம்  பெற்ற  அறிவை மாணவர்களுக்கு ஐயமின்றி திடமாக எடுத்துரைக்கும் ஆற்றல் பொருந்தியவரும், நிலத்தைப் போல பொறுமையும் பெருமையும் கொண்டவரும், மலைபோல உயர்ந்த  பண்புகளும் குணங்களும் கொண்டவரும், துலாக்கோல் போல பாரபட்சமின்றி நடுநிலையோடு அறவழி நிற்பவரும், மலர் தன்னுடைய வசீகரத்தாலும் புனிதத்தாலும் நறுமணத்தாலும் மென்மையாலும் தன்மையாலும் வண்டுகளை  தம்வசம் இழுப்பதைப் போல ஈர்ப்பு சக்தி கொண்டவரும்,  சமகால உலகியலை நன்கு அறிந்தவரும், நற்குணம் படைத்தவருமாக இருத்தல்,  நூலுரை போதிக்கவல்ல  ஆசிரியருக்கு இலக்கணமாக வழங்கப்பட்டுள்ளது.  

குலன் அருள்தெய்வம் கொள்கை மேன்மை,

கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை,

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்,

உலகியல் அறிவோடு, உயர்குணம், இணையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்னே (26)

தன்னுடைய  மகன், தனக்கு கல்வி போதித்த ஆசிரியருடைய மகன், நற்பொருள் கொடுப்பவரின் மகன், தன்னை வழிபடுபவன் ஆகியோருக்கு ஆசிரியராக இருந்து கல்வியையும்  கலைகளையும் போதிக்கலாம் எனப்படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர், குரு  என்பவர் ஞானத்தை கூட்டுபவர் , அதற்கான மார்க்கத்தையும் காட்டுபவர். மனதினில் உறைந்திருக்கும் அழுக்குகளை அகற்றிவிட்டு, நிர்மலமான பேரன்புடன் குருவை கண்டுவிட்டால் அவர் உள்ளங்கை நெல்லிக் கனிபோல உண்மைகளை உரைத்திடுவார், உய்வதற்கு வழி செய்வார் என்கிறார்.

உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை

உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்

கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்

சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.

தமிழ் கூறும் நல்லுலகம் ஆசிரியர்கள்-மாணவர்கள் குறித்த நுண்மையான புரிதலை  விளக்கியுள்ளது சுவைத்தும் சிந்தித்தும் போற்றத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT