திருமண வீடுகளிலும், பொதுவான சிறப்பு நிகழ்வுகளிலும் நாதஸ்வர, தவில் ஒலிகள் கேட்கும். இந்த ஒலி கேட்டால், மங்கல நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது என்று உணரலாம். இதற்கு நேர்மாறான பறை ஒலி, துக்கச் செய்தியை அறிவிக்கும். மங்கலம், துக்கம் இரண்டுமே வாழ்வில் தவிர்க்க முடியாதவை. இவை இரண்டையும் தனித்தனியே வைத்தே பார்த்தனர் தமிழர்.
"ஒரு வீட்டில், துக்கத்தைச் சொல்லும் நெய்தல் பறை ஒலிக்கிறது; மற்றொரு வீட்டில், மகிழ்ச்சி ததும்பும் முழவு ஒலிக்கிறது' என்று புறநானூறு, இந்த உலக இயல்பைச் சொல்லும்போது பேசுகிறது. மங்கல வீடுகளில் அமங்கலச் சொற்களைச் சொல்வதையும், அமங்கலச் செய்திகள் பேசுவதையும்கூட மக்கள் தவிர்ப்பார்கள். கம்பன் காப்பியமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மிக இயல்பாக, இந்தக் காட்சிகளைப் பதிவு செய்திருப்பான் கம்பன்.
"வில்லினை வளைப்பவர்களுக்கே சீதை மணம் முடிக்கப்படுவாள்'
என்னும் நிபந்தனையுடன், போட்டிக்கு ஏற்பாடு செய்தான் ஜனகன். அரக்கர்களைக் கொல்லும் உதவிக்காக இராமனையும், உடன் இலக்குவனையும் அழைத்துச் சென்ற விசுவாமித்திர முனிவன், மிதிலை நகரில் இருந்த ஜனகன் அரண்மனைக்கும் அவர்களை அழைத்துப் போனான். அனைவரும் அமர்ந்திருக்க, வில்லைக் கொண்டுவருமாறு சேவகர்களுக்கு ஜனகன் ஆணையிட்டான்.
சிவதனுசு என்று அழைக்கப்படும் அந்த வில்லினை, அறுபதினாயிரம் வீரர்கள் சுமந்து வந்தனர் என்றான் கம்பன். அந்த வில்லின் வரலாற்றையும், பலர் அதனை அசைக்கவும் முடியாமல் தோற்றுச் சென்றதையும் சதானந்த முனிவன் அவையினருக்கு அறிவித்தார்.
விசுவாமித்திர முனிவர், இராமனைக் குறிப்பால் நோக்க, அவரது எண்ணத்தைப் பார்வையிலேயே புரிந்துகொண்ட இராமன், வில்லை நோக்கிச் செல்வதற்காக "சரேலென' வேகமாக எழுந்தான். அவன் எழுந்த வேகத்துக்குக் கம்பன் ஓர் உவமை சொன்னான். "வேள்வியில் பொழியப்பட்ட நெய், உடனே தீயாக எழுவதுபோல், இராமன் வேகமாக எழுந்தான்'. இதைச் சொல்லும் பாடலின் இரண்டு வரிகள் இவைதான்.
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
வில்லை வளைப்பது திருமணத்தில் முடியப்போகிறது என்பதால், "வேள்வித்தீயில் நெய் பொழிந்தவுடன் எழும் மங்கலத் தீயை உவமையாக்கினான் கம்பன். இதேபோல், மங்கலச் சூழலில் அவன் சொல்லும் மற்றோர் உவமை உண்டு. இராமன் திருமணத்துக்கு, கோசல நாட்டில் இருந்து எல்லோரும் ஊர்வலமாகச் செல்லும் காட்சி.
அரச குடும்பத்தினர் தொடங்கி, பொதுமக்கள் வரை அனைவரும் சென்ற மிக நீண்ட ஊர்வலமாக அது இருந்தது. "நீண்ட ஊர்வலம் என்றதால், ஒருவருக்கொருர் இடம் விட்டு நடந்தார்கள் என்று நாம் சிந்தித்துவிடக்கூடாது' என்று எண்ணியவன்போல, "மிக நெருக்கமாக எல்லோரும் நடந்தார்கள்' என்றான் கம்பன்.
பொதுவாக மக்களின் நெருக்கத்தைச் சொல்ல, "எள் போட்டாலும் கீழே விழாத அளவுக்குக் கூட்டம்' என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஆனால், கம்பன் மாற்றிச் சொன்னான்.
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்.
மங்கலச் சூழலில், "எள் விழ இடமில்லை' என்று சொல்லாமல், "உழுந்து விழ இடமில்லை' என்று சொன்னது, கம்பனின் முத்திரை.
துக்கச் சூழலில், சரியான இடத்தில் "எள்' எனக் கம்பன் சொன்ன இடங்களும் உண்டு. இராமன் அம்பால் போர்க்களத்தில் தாக்குண்டு, இராவணன் மரணித்தான். செய்தி காதில் விழுந்த கணத்தில், அழுது அரற்றியவாறு ஓடி வந்தாள், அவனது மனைவி மண்டோதரி. இராவணன் மீது வீழ்ந்து அழுதாள். அவள் அழுது புலம்பியதாக, புகழ் பெற்ற பாடல் ஒன்றுண்டு. இராமனின் அம்பு, இராவணன் மேனியை சல்லடையாகத் துளைத்திருந்தது. அதனைக் கண்ட மண்டோதரி இப்படிச் சொல்லிக் கதறியதாகக் கம்பன் எழுதினான்.
வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள் இருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடன் நாடி இழைத்தவாறோ?
"மேனியில் எள் விழுந்தாலும் நிற்க இடம் இல்லாமல், இராமன் அம்பு துளைத்துவிட்டிருக்கிறதே' என்பது பொருள். மங்கலச் சூழலில் "உழுந்து' என்னும் சொல்லைப் பயன்படுத்திய கம்பன், மரணச் சூழலில், "எள்' என்றே பயன்படுத்துகிறான்.
போர்க்களத்துக்கு வந்த கும்பகர்ணனிடம், இராமனுடன் இணைய வருமாறு தூது வந்தான் வீடணன். "நான் வரமாட்டேன்; இராவணனுக்காக இறப்பது இழிவானதுதான். ஆனால், எனக்கு இதுதான் புகழ். ஆனால், நீ அங்கேதானிருக்க வேண்டும். உனக்கு அதுவே பெருமை என்ற கும்பகர்ணன், அதற்கான காரணத்தையும் சொன்னான். இதுதான் கம்பனின் வரி:
"கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய்'
"வீடணா, எல்லா அரக்கர்களும் இராமன் கணையால் இறப்பது உறுதி. எல்லோருக்கும் எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் காரியங்களை நீதான் செய்யவேண்டும்; எனவே நீ இராமன் கூடவே இருக்க வேண்டும்' என்றான் கும்பகர்ணன்.
மங்கல இடங்களையும், அமங்கல இடங்களையும் சொற்களாலேயே கம்பன் சுட்டிக்காட்டிய இடங்கள் இவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.