தமிழ்மணி

இளமை கழிந்ததற்கு ஓர் இரங்கற்பா!

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்ப அவனைச் சேர்ந்தோர்அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கந்தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பாமாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

ம.பெ.சீனிவாசன்

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்ப அவனைச் சேர்ந்தோர்அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கந்தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பாமாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ் மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர்சுரக்க வைப்பவை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே! (112)

பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.

அண்ணல் யானை வேந்தர்க்கு

இன்னான்ஆகிய இனியோன் குன்றே (115:5-6)

என்பன அவரின் பாடலடிகள்.

இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும்,

இல்லாகியரோ காலை மாலை!

அல்லாகியர் யான் வாழும் நாளே! (232)

என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும்

அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.

மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில்,

இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க் கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான்அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.

இத்தகைய கையறு நிலைப் பாடல்களுக்கிடையில் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் மறைவு குறித்து குடவாயிற் கீரத்தனார் பாடிய பாடல் ஒன்று வேறுபடு சிறப்புடன் வீறு பெற்று நிற்கிறது. அதில், அன்று அலர்ந்த முல்லைப் பூவை நோக்கிப் பாடுகிறார் புலவர்.

நீ, பூத்ததனால் என்ன பயன்?

சாத்தன் இறந்ததால் உன்னைப் பறித்துச் சூடுவார்

எவரும் இல்லையே!

இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான்; பாடினி அணியாள்;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோஒல்லையூர் நாட்டே? (242)

சாத்தன் இறந்த பின்பு அவனது ஒல்லையூர் நாட்டில் நீபூக்கக் கடவையோ என்பது கருத்து. அவனையிழந்தும் உயிர் வாழ்கின்ற எம்போன்ற கொடியவர்களைப் போலவே நீயும் பூத்தாயோ எனக் கொள்ளவும்இடமுண்டு.

இங்ஙனம் தமக்கு வேண்டியவர் மறைவுக்காக இரங்கிப் பாடும் கையறு நிலைப் பாடல்கள் பல இருக்க, ஒருவன் தன் வாழ்வில் கழிந்து போன இளமைக்காக வருந்தும் கையறு நிலைப் பாட்டு ஒன்றும் புறநானூற்றில் (243) உள்ளது.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; .......

மறை எனல் அறியா மாயம்இல் ஆயமொடு

உயர்சினை மருதத் துறைஉறத் தாழ்ந்து

நீர்நணிப் படிகோடு ஏறிச்சீர்மிக

கரையவர் மருளத்திரைஅகம் பிதிர

நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

குளித்து மணற்கொண்ட கல்லா இளமை

அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ?

பாடலின் பொருள் வருமாறு: இப்போது நினைத்தாலும் இரக்கமாயிருக்கின்றது. மணலிலே வண்டல் இழைத்து, அங்கு வைத்து விளையாடும் வண்டல் பாவைக்குப் பூச்சூட்டிக் குளிர்ந்த பொய்கையிலே விளையாடும் மகளிரோடு கைகோத்து ஆடினோமே! அவர் தழுவத் தழுவி, அசைத்த விடத்து அசைந்து, வஞ்சனையறியாத எம்மொத்த இளைஞருடன் நீர்த் துறை அருகில் தாழ்ந்த கிளையுடைய மருதமரத்தில் ஏறிமடு நீருட் பாய்ந்து மூழ்கி, அடியிற் கிடந்த மணலை முகந்து கொண்டு வந்து கரையில் நின்றோர்க்குக் காட்டினோமே! அவ்விளமைச் செயலை நினைத்தால் அது மிகவும் இரங்கத்தக்கது.

இப்போது எங்கே எவ்விடத்து இருக்கிறதோ? தலைப் பகுதியில் பூணிட்ட கோலினை (தண்டு) ஊன்றி ஓயாத இருமலுக்கு இடையில் வெளிப்படும் சில சொற்களைப் பேசிவாடும் எமக்கு அவ்விளமைதான் மீண்டும் வருமோ?

இப்படிக் கழிந்த இளமைக்கு வருந்திக் கூறுதலால் இதுகையறு நிலையாயிற்று. காஞ்சித் திணைத் துறைகளுள், 'கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டியமுதுமை'க்கு நச்சினார்க்கினியர் (தொல். புறத். நூ.24) இதனை எடுத்துக் காட்டுகிறார்.

தம்மைப் பிரிந்த உறவுக்காக / நட்புக்காக / புரவலர்க்காக வருந்துவதன்றித் தன் வாழ்நாளில் கழிந்த இளமைக்காக வருந்திப் பாடியது ஒரு புதுமையே. இந்தப் புதுமையைப் புகுத்திப் பாடிய புலவர் பெயர் தெரிந்திலது. எனினும், இந்தப் பாடலில்வரும் 'தொடித் தலைவிழுத்தண்டு' என்னும் தொடராலேயே, அவர் தொடித் தலைவிழுத்தண்டினார் எனப் பெயர் பெற்றார் என்பர். தொடி பூண். தாம் கூறும் முதுமைப் பருவ வருணனையில் 'தொடித்தலை' என்னும்அடையைப் தண்டிற்குக் கூறிய சிறப்பால் வந்த பெயர் இது.

புறநானூற்றில் உள்ள கையறு நிலைப் பாடல்களின் எண்ணிக்கை 65 என்கிறார் ஆய்வறிஞர் கி.சிவா. அவற்றுள் இந்தப் பாடலின் பேசு பொருள் மட்டும் வேறுபட அமைந்தசிறப்பு உணரத்தக் கது. எனினும், இதுபோன்ற பாடல்கள் சிலவற்றைத்

தமிழிலக்கியத்தில் ஆங்காங்கு காணக்கூடும்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்

மீளுமிவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்புமாகி

நாளும்நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாததென்னே!

என்னும் குண்டலகேசிப் பாடல் ஒருவன்தன் வாழ்வில் கழிந்த பாளை முதலான பல பருவங்கட்கும் வருந்தாதது ஏன்? என வினவுகிறது. இங்கு கழிந்த பருவம் ஒவ்வொன்றையும் செத்ததாகவே குறிப்பது கருதத்தக்கது. இவ்வாறே,

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்தபின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்

கத்துங் கணக்கென்னகாண் கயிலாபுரிக் காளத்தியே!

என்னும் பட்டினத்தார் பாடலையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

'ஆசையே அலை போலே' என்னும்

திரையிசைப் பாடலில்,

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன்?

வடிவம் மட்டும் வாழ்வதேன்?

இளமை மீண்டும் வருமா? சுகம் பெறுமா?

என்னும் அடிகளிலும் இந்தச் சிந்தனை துளிர்விட்டிருப்பதைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை கண்டனம்!

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

டயர் உற்பத்தி 7-8 சதவிகிதம் வரை உயரும்!

SCROLL FOR NEXT