ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கண வளம் கொண்டிருந்த தமிழ் மொழிக்கு அதன் இயல், இசை, நாடகம் என்ற முத்திறத்தால் 'முத்தமிழ்' என்ற சிறப்புண்டு.
அதுபோன்றே, வனவிலங்குகளிலேயே உருவத்தாலும், வலிமையாலும், பழகும் தன்மையினாலும் சிறப்புப் பெற்றது யானை. இந்த யானையை, 'மும்மத யானை ' எனக் கூறிச் சிறப்பிப்பர்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் வைத்துப் பராமரித்த நால்வகைப் படைகளுள், யானைப் படைக்குத் தனித்துவம் உண்டு. மன்னர்கள், தாம் உலாச் செல்ல யானையைப் பயன்படுத்தினர்.
மலைகளைப் பிளந்து, கருங்கற்பாறைகளை நகர்த்தி, இடம் பெயர்த்து வைக்கவும், அவற்றை நெடுந்தொலைவுக்கு இழுத்துச் செல்லவும், காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டு செல்லவும் யானைகளைப் பயன்படுத்தினர்.
அரிய இலக்கியப் படைப்புகளையும், அவற்றைப் படைத்த புலவர்களையும் ஊரார்க்கு அறிமுகப்படுத்திச் சிறப்பிக்கவும் உள்நாட்டில், யானைகள் ஊர்தியாகப் பயன்படுத்தப் பட்டன.
ஐவகை நிலங்களுள் குறிஞ்சி, முல்லை நிலங்களில் யானைகள் மிகுதி. வலிமை இழந்த யானைகள் பாலை நிலத்திலும், வளர்ப்பு யானைகள் மருத நிலத்திலும் உண்டு.
'மதம்' என்ற சொல், பெரும்பாலும் யானையுடன் தொடர்புபடுத்தப் பெறுகிறது. யானையைப் பொருத்தவரை, அதன் முரட்டுத் தன்மை, உணவுத் தன்னிறைவு, காமவுணர்வு என்பன வெளிப்படும் போது, 'அதற்கு மதம் பிடித்துள்ளது' என்பர்.
மதத்தின் அடையாளமாய் தத்தம் உறுப்புகள் சிலவற்றின் வழி, அவை ஒருவித நீரை ஒழுகவிடும். இதனை 'மதநீர்' என்பர்.
யானையின் மதத்தை மூவகைப்படுத்தி 'மும்மதம்' என்கிறது கழகத் தமிழ் அகராதி (பதிப்பு: 2004. ப.777) (1) யானையின் தும்பிக்கையின் வழி 'மத நீர்' வெளிப்படும் போது 'கைம் மதம்' எனப்படும். (2) கன்னத்தின் வழி ஒழுகி வெளிப்படுவது 'கன்ன மதம்' ஆகும். (3) களிறு (ஆண்), பிடி(பெண்) என, யானைகளின் அடையாள உறுப்புகளிலிருந்து வெளிப்படுவது 'கோச மதம்' ஆகும்.
(1) கன்ன மதம்: இதனைத் திருக்குறள்,
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)
என்பதில் விளக்குகிறது. ஒரு செயலால் இன்னொரு செயலையும் செய்து கொள்ளுதல், கன்ன மத யானையைக் கொண்டு மற்றோர் யானையைப் பிடித்ததற்கு ஒப்பாகும் என்பது இதன் பொருள்.
இந்தக் குறளுக்கு உரைவிளக்கம் தரும் உரையாசிரியர் கோ.சாரங்கபாணி, கன்ன மதத்தைக் 'கபோல மதம்' என்கிறார். மேலும், 'கபோல மதம்' காட்டு யானைக்கு இருக்காது. நாட்டில் மக்களிடமிருந்து அடங்கியிருக்கும்.
யானைக்குத்தான் 'மதம்' இயற்கையான வழி
களில் வெளியாக முடியததால், 'கபோல மதம்' மிகுதியாக வெளியாகும் என்கிறார்.
கன்னமதம் பற்றிக் கூறும் குறுந்தொகைப் பாடலொன்றும் இங்கு நினைக்கத்தக்கது. தோழியானவள், 'தலைவியே! ஆண் புலியானது, மத நீரால் நனைந்த கவுளை(கன்னத்தை) உடைய ஆண் யானையின் முகம் நோக்கிப் பாய, யானையின் வெண்மையான தந்தத்தில், அந்தப் புலியின் சிவப்புக் குருதிக் கறை ஏறி, காற்றினால் முறிந்து கிடக்கும். புலி வேங்கைமரம் போல, அந்தப் புலி இறந்து கிடக்கும் மலைக்
குரிய நாடனே உன் தலைவன். அவனுடன், சுற்றத்தார் அறியாமல் சென்று விடுவதே நல்லது. ஆதலால், புறப்பட்டுச் செல்லும் திறம் காண்பாய்! என்கிறாள். அவளது அக்கூற்று, பின்வருமாறு:
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரு மாறே (343)
இதில், யானையின் 'கன்னமதம்' குறிக்கப் பெறுகிறது. வலிய போர் யானையின் திறம், 'கன்ன மதத்தால்' அறியப்படும் என்பதைச் சிறுபாணாற்றுப் படையும்,
அழிபசி வருத்தம் வீடப் பொழி கவுள்
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
(அடி: 140142)
எனக் குறிக்கிறது.
(2) கைம் மதம்:
போரில் தாம் கொன்று குவித்த பிணங்களைக் கால்களினால் இடரிச் செல்லும் யானைகள் சிந்தும் அருவி போன்ற மதநீர், போர்க்களத் தெழுந்த புழுதியை அடங்கச் செய்யும் என்பதாக, சிறுபாணாற்றுப் படையே,
அண்ணல் யானை அவிதுகள் அவிப்ப
நீரடங்கு தெருவினவன் சாறயர் மூதுர்
(அடி: 200201)
என்றும் கூறுகிறது. இப்புனைவு, கைம் மதத்தைக் குறிப்பதாகக் கொள்ள முடிகிறது.
பொதுவாகவே, மதம் பிடித்த யானை, தனது மதத்தைப் போக்கிக் கொள்ள, வாழை மரக் குருத்தில் தானே மோதிக் கொண்டு, அச்சாறு மத்தகத்தில் பட, மத வலிமை கெட்டு மயங்கும் என்கிறது குறுந்தொகை (பா. 308).
(3) கோச மதம்: யானையானது, அதிங்கம் (குளகு, தாழை) ஆகிய கவளத்தை உண்டால், அதற்கு மதம் உண்டாகும். அதுபோலவே, காதலிணையரில் ஒருவர் மற்றவரைக் காணும் போது, உரிய காலத்தில் காமம் தோன்றும் என்பதை தலைவன் பின்வருமாறு பாடுகிறான்:
காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.
(குறுந்: 136)
அதாவது, 'காமம்' என்பது ஒரு நோயன்று என்கிறது இந்தப் பாடல்.
இந்தப் பாடலுக்கு உரை விளக்கம் எழுதிய பொ.வே. சோமசுந்தரனார், உடலின் கண் உண்டாகும் குறையால் வருவது 'பிணி' என்றும், உடல் குறையற்ற தன்மையில் உண்டாவது 'காமம்' என்றும் கருதுகிறார்.
ஆதலால், உடல் குறையற்ற யானைக்குத் தோன்றும் மதங்களுள், காமத்தால் தோன்றும் மதமும் ஒன்று எனக் கொள்ள முடிகிறது. மேற்குறித்த பாடலில், தலைவனுக்கும் யானைக்கும் தோன்றும் 'காமம்' பற்றிய செய்தி குறிக்கப் பெறுகிறதே தவிர, அது உறுப்பு வகையால் எவ்வாறு வெளிப்படும் என்பது குறிக்கப் பெறவில்லை. யானையின் இத்தகைய மதத்தினைக் 'கோச மதம்' எனக் கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களை இன்னும் ஆய்ந்தால், மேலும் இதுகுறித்த குறிப்புகள் கிடைக்க வாய்ப்புண்டு.
'மும்மத யானைகள்' தமக்குரிய கானகத்தில் வாழும் போது, மனிதருடனான மோதல்களுக்கு வாய்ப்பில்லை. மனிதர் வாழும் நிலப் பகுதிக்கு அவை தருவிக்கப்படும் போது, புத்துணர்வுக் குறைவால், தம்முள் தோன்றும் மதத்தைச் சினத்தால் வெளிப்படுத்துகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது. ஆக, கைம் மதம், கன்ன மதம், கோச மதம் என்னும் மூவகை மதங்களால் பெற்ற 'மும்மத யானை' என்னும் சிறப்பு யானைக்கு மிகவும் பொருத்தமானதே எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.