விருந்தினரை உபசரிப்பது என்பது ஒரு கலை. 'ஒப்புடன் முகம் மலர்ந்து, உபசரித்து உண்மை பேசி, உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பது அமிர்தமாகும்' என்கிறது விவேகசிந்தாமணி. சில சமயங்களில், அன்பைக் காட்டுவதாக எண்ணிக்கொண்டு உபசரிப்பில் எல்லை மீறிப் போய் விடுபவர்களின் பிடியில் சிக்கித் தவித்திருக்கிறீர்களா?
அக்காலத்தில் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கு வெயில், மழையைப் பொருட்படுத்தாமல், வீடு வீடாக நேரில் சென்று உரிய மரியாதைகளுடன் அழைப்பு தர வேண்டும். இல்லாவிட்டால், உறவில் விரிசல் வந்துவிடும். அதில் இருக்கும் பெரும் சிக்கல், உங்களுக்கு சாப்பிடவும் அருந்தவும் அவர்கள் அளிப்பதை மறுக்கக் கூடாது.
மறுத்தால், அது உறவில் சிக்கல் உருவாகலாம். சாப்பிட்டால், வயிறு சிக்கலுக்கு உள்ளாகும். சாப்பிட்டு முடித்ததும் 'பலகாரம் எப்படி இருக்கு?' என்றும் கேட்பார்கள். 'இதை ஒரு நான்கு நாள்களுக்கு முன்னரே நான் வந்து சாப்பிட்டிருக்க வேண்டும்' என்ற உண்மையை சொன்னால் அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிடும்!
சில வீடுகளில், குடிக்கும் நீரையும், 'சுடு நீரா? குளிர் நீரா? சாதாரணமாகவா?' என்று கேட்டுக் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் கொஞ்சமாகப் பரிமாறி, நாம் விரும்பி உண்பதை கவனித்து, கேட்டுப் பரிமாறுவார்கள். உணவின் சுவையைவிட, இப்படிப் பரிமாறுதல் இனிமையாக இருக்கும். இது ஓர் உயர்ந்த பண்பு.
இதை, நாம் கொஞ்சமும் எதிர்பாரா இடத்தில், எதிர்பாராத மனிதன் வாயிலாக நமக்கு உணர்த்துகிறான் கம்பன். காட்டுக்குக் கிளம்பிய இராம, இலக்குவ, சீதை மூவரும், கங்கைக் கரையில் சிருங்கிபேரம் என்னும் இடத்தில் தங்கி, அங்குள்ள முனிவர்களின் உபசரிப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்போது, வேடர்குலத் தலைவனான குகன், இராமனைக் காண வருகிறான்.
உள்ளே சென்ற குகன், நிலத்தில் விழுந்து அவனை வணங்கினான். அமருமாறு இராமன் சொல்லியும் உட்காராத குகன், இராமன் உண்பதற்காக உணவு கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். வான்மீகி இராமாயணத்தில், இராமனும் பிறரும் அசைவம் உண்டதாகக் குறிப்புகள் உள்ளன; இதனை சுவாமி விவேகானந்தரும் உறுதிப்படுத்துகிறார். ஆனால் கம்பன், இராமன் உட்பட அனைவரையும் சைவ உணவினராகக் காட்டுகிறான். இதை மனத்தில் கொண்டு, கம்பனின் பாடலைக் காணலாம்.
இருத்தி ஈண்டு' என்னலோடும்
இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு
அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்;
என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
விளம்பலுற்றான்.
'தேனையும் மீனையும் உண்பதற்கு ஏற்றாற்போல் திருத்தி, கொண்டு வந்துள்ளேன்' என்றான் குகன். அவற்றை இராமன் உண்பானா என்றெல்லாம் குகன் சிந்திக்கவில்லை. அவனுக்கு என்ன கிடைக்குமோ அவற்றை, உண்பதற்குத் தகுந்தவாறு சமைத்துக் கொண்டு வந்ததைச் சொன்ன குகனின் அடுத்த சொற்கள்தான் முக்கியம். 'என்கொல்; திருவுளம்?'.
'நான் அன்புடன் கொண்டு வந்திருக்கிறேன்; இவற்றை நீங்கள் சாப்பிடத்தான் வேண்டும்' என்று துளி வற்புறுத்தலும் அவன் சொற்களில் இல்லை. 'களைத்து வந்திருக்கிறீர்கள்; கண்டிப்பாகச் சாப்பிடுங்கள்' என்னும் உபசார சொற்கள் இல்லை.
'உங்களுக்காகவே கங்கை ஆற்றில் கிடைக்கும் மீன் வகைகளிலேயே உயர்ந்தவற்றைப் பிடித்து, மலை உச்சியில் இருக்கும் தேன் கூட்டில் இருந்து மலைத் தேனை எடுத்து, அவற்றை உண்பதற்கான சிறந்த முறையில் சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் மறுக்கவே கூடாது' என்று தற்பெருமை கலந்த கண்டிப்பு இல்லை.
'உங்கள் மீது என் அன்பு காரணமாக இந்த உணவைக் கொண்டுவந்திருக்கிறேன். உங்கள் விருப்பம் என்னவோ அதனைச் செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டு, இராமன் முன் வணங்கி நின்றான்.
எந்த அழுத்தமும் தராத, அன்பில் நனைந்திருந்த அவன் உபசரிப்பில் நெகிழ்ந்தான் இராமன். 'நான் அசைவம் சாப்பிடுவதில்லை' என்னும் சொற்கள் அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை.
'பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்' என்று இராமன் சொன்னதாக எழுதினான் கம்பன். 'அன்புடன் கொடுக்கப்படும் எவையும் உயர்ந்ததாகிவிடுகின்றன' என்று பொருள். அழுத்தம் தராத உபசரிப்பின் உயர்வை, வேடர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் வாயிலாக இப்படி விளக்குகிறான் கம்பன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.