மகாகவி பாரதியார் 
தமிழ்மணி

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள்.

ரவிசுப்பிரமணியன்

மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரியிடம் பாசம்.

யதுகிரியம்மாளின் பாரதி நினைவுகள் புத்தகத்தினுடைய முதல் அத்தியாயமே "ஏலேலோ பாட்டு' என்ற தலைப்பில் வெகு சுவாரஸ்யமாக இப்படித் தொடங்குகிறது.

""ஒரு நாள் சாயங்காலம் பாரதியாரின் பெண்கள் இருவர், நாங்கள் நான்கு பேர், ஆக ஆறு சிறுவர்களும், பாரதியாரின் மனைவி செல்லம்மாவும், பாரதியாரும் கடற்கரை வந்து சேர்ந்தோம். மணி ஆறரை இருக்கும். மணல் மேல் உட்கார்ந்து வேடிக்கையாகப்பேசிக் கொண்டிருந்தோம். அருகில் செம்படவர் சிலர் கூடைகளில் மீன்களை நிரப்பி விட்டுச் சந்தோஷமாய்ப் பாடி பஜனை செய்து கொண்டு சென்றார்கள்.

பாரதியாருக்குப் பெரிய சங்கீத கச்சேரிகளைக் காட்டிலும் சாதாரண பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் - இவர்களுடைய பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர் அந்தச் செம்படவர் பாட்டுக்குச் "சபாஷ்' சொல்ல ஆரம்பித்தார்.

நான் அவரைப் பார்த்து, ""இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே? எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லையே!'' என்றேன்.

அதைக் கேட்டு செல்லம்மா, ""அவர் ஒரு பித்து என்பது உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கையடிப்பவன் வந்தால், இவர் கூத்தாடுகிறார்; தம் நினைவே கிடையாது. இப்போ சாயங்கால வேளை; கடற்கரை; அலைகளின் ஒலி; இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு! கேட்க வேண்டுமா?'' என்று சொல்லிச் சிரித்தாள்.

உடனே பாரதியார் எழுந்தார். ஒரு பென்ஸிலும் காகிதமும் எடுத்துக் கொண்டு அந்தச் செம்படவரிடம் ஓடினார்; அதில் இருந்த ஒரு கிழவனை அந்தப் பாட்டை அடி அடியாகச் சொல்லும்படி கேட்டார்; பிழைகளைத் திருத்திக் கொண்டு எங்களிடம் வந்து, ""நீங்களெல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே! பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்'' என்றார்.

செல்லம்மா: ஆகா! நீங்கள் எல்லாருக்கும் சிஷ்யர்தான்! முதல் தெய்வமாகிற மடத்தின் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!

பாரதியார்: இதோ பார், செல்லம்மா. உன் அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே! அந்தச் சாரமில்லாத, உண்மையல்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவனுக்குரிய தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே!

நடுவில் நான் குறுக்கிட்டு, ""செம்படவர் பாட்டின் பொருளையும், அதன் அழகையும் எங்களுக்குப் பாடிக் காண்பியும்'' என்று வேண்டினேன். பாரதியார் பாட ஆரம்பித்தார். அரை மணியாயிற்று. நாங்களெல்லாரும் மெய்மறந்து அதில் லயித்திருந்தோம்.

இப்படி பல சம்பவங்களைப் படிக்கையில் அவர் வாழ்ந்த காலத்தின் இறுக்கத் தளைகளையெல்லாம் பொருட்படுத்தாது, பேதங்கள் ஏதுமின்றி, எல்லா மனிதர்களோடும் சரிசமமாய் பழகி, அவர்கள் கலைகளையும் மதித்து, அதன் வழியேயும் எளிமையான பாடல்களை இயற்றியும் பாடியும் வந்திருக்கிறார் பாரதி என்பது தெரிகிறது.

ஒரு நாள் யதுகிரி, ஸ்ரீநிவாசாச்சாரியார், பாரதி மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கையில் நிகழ்ந்த சம்பாஷணையின் சிறு பகுதி இது.

ஸ்ரீ. ஸ்ரீ.: சில நாள்களாகப் பாரதியார் ஏன் பாட்டுச் செய்வதில்லை என்று யதுகிரி அடிக்கடி கேட்பாள். வேறு வேலை இருப்பதால் செய்வதில்லை என்பேன்.

பாரதி: வேலையும் இல்லை; மண்ணும் இல்லை. ராஜாராம் தன் தகப்பனார் தமிழ்ப்படுத்திய உபநிஷத்தைச் சரியாக இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும்படி சொன்னான். அதுவே சுமார் மூன்று மாதம் பிடித்தது. மறுபடியும் இன்று, முதல் முதலாக ஸரஸ்வதி ஸ்தோத்திரம் செய்திருக்கிறேன் என்று, நொண்டிச் சிந்து மெட்டில் "எங்ஙனம் சென்றிருந்தீர்' என்ற பாடலை பாரதியார் இருவருக்குமாகப் பாடிக் காண்பித்துள்ளார்.

இந்தப் பாடலை நாம் இயக்கிய "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்' என்கிற ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படத்தில் முதல் பாடலாக வைத்தோம். அப்படத்தைத் தயாரித்து இசையமைத்த இளையராஜாவே அதனைப் பாடியிருந்தார். இந்த நொண்டிச் சிந்து மட்டுமல்ல; பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்போது நெல் குத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு கூலிப் பெண் வந்து நெல் குத்துகிறார். நெல் குத்தும் பெண் குத்திவிட்டு கடைசியில் "ஹும்' "ஹும்' என்று எழுப்பும் ஒலி "வேண்டும்', "வேண்டும்' என்று கேட்டு எழுதும்படியாக அவரைத் தூண்டியதாம். அதனடிப்படையில் ஒரு காகிதத்தை எடுத்து அதில் "மனதில் உறுதி வேண்டும்' என்ற பாடலை எழுதினாராம்.

யதுகிரி அம்மாளின் ருது ஸ்நான வைபவம் நடந்தபோது, ஒரு பெரிய சுமங்கலி திருவாய்மொழியில் பத்தாம் பத்தில் "கண்ணன் கழலிணை' என்று தொடங்கும் ஐந்து பாட்டுகளைச் சொல்லிக் கும்மி அடித்ததில் உத்வேகம் பெற்று "கண்ணன் திருவடி எண்ணுக மனமே' என்று துவங்கும் பாட்டை எழுதியிருக்கிறார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாடலும் ஒரு கும்மிப்பாடலே. அவர் மனம் வெதும்பிப் பாடிய "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே' என்ற பாடல் கிளிக்கண்ணி வகையில் அமைந்த பாடல்.

ஒரு சமயம் செல்லம்மாள், சகுந்தலா பாரதியுடன் தன் பிறந்த ஊரான கடையத்துக்குப் போயிருந்தபோது, பாரதியார் வீட்டு வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு, எங்கோ வெளியே போயிருக்கிறார். வீட்டுக்குத் திரும்பியவுடன், கதவைத் திறக்க சாவியை கோட் பைகளில் தேடிப் பார்த்திருக்கிறார். அகப்படவில்லை. அந்த சமயம் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணானஅம்மாக்கண்ணு தற்செயலாக அங்கு வர, அவர் சரியாக

மாட்டிக்கொண்டிராத அந்தப் பூட்டை தன் கையாலேயே அசைத்தசைத்து திறந்துவிட்டாராம். உடனே பாரதி,

பூட்டைத் திறப்பதும் கையாலே

நல்ல மனம் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பதும் பண்ணாலே

மன வீட்டைத் திறப்பதும் பெண்ணாலே

என்று பாடியதாகக் குறிப்பிடுகிறார் சகுந்தலா பாரதி.

ஸீ.ஆர்.சீனிவாச ஐயங்கார் என்பவர் வழியாகக் கிடைத்த தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனைகளுக்கு ஸ்வரங்கள் எழுதிய புத்தகம் ஒன்று அவரிடம் இருந்திருக்கிறது.

அந்தப் புத்தகத்தில் உள்ள ஸ்வரங்களைப் பயன்படுத்தி, தியாகராஜ சுவாமிகளின் "நகுமோமு', "மாருபல்க', "நிதிசால சுகமா' போன்ற கீர்த்தனைகளை தாமே பாட முயற்சி செய்துள்ளார். தெலுங்கும் அவருக்குத் தெரியுமென்பதால் அவ்வார்த்தைகளின் அர்த்தத்தை, அவற்றில் அமைந்திருக்கிற சங்கீத அழகை, அவற்றில் ததும்புகிற பாவத்தைச் சொல்லிச் சொல்லி இன்புறுவாராம்.

"மாருபல்க' என்ற கீர்த்தனத்தின் மீது அவருக்குள்ள இன்ப மிகுதியை அவர்தம் "சந்திரிகையின் கதை' என்ற நவீனத்தில் கதாநாயகி விசாலாக்ஷி பாடுவதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சங்கீத நுணுக்கமெல்லாம் அவர் தாமே சுயமாகக் கற்றதுதான் என்றும் தம் நூலில் சகுந்தலா பாரதி பதிவு செய்துள்ளார்.

தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதரிடம் பாரதிக்கு மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது. ""தியாகய்யர் ஒரு ரஸக்கடல். கர்நாடக சங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்கு அவரே காரணம்.

பூர்வ காலத்து ஞானிகளைப் போல, அவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்து, தான் அற்று, வித்தை வடிவாக விளங்கினார்'' என்றும், 'தீட்சிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை.

இவை கங்கா நதியைப் போலே கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன''”என்றெல்லாம் சொல்லி அவர்களைக் கொண்டாடிய அதே பாரதிதான், எளிய தமிழில் பாமரர்க்கும் புரியும்படி பாட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

அதனால்தான் அவரால் தமிழிசை குறித்து இன்னொரு கோணத்தில் இப்படியெல்லாம் கோபமாகவும் பேச முடிகிறது.

பூர்விக மஹான்களுடைய பாட்டுகளை மறந்து போய்விட வேண்டுமென்பது என் கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டு தெளிவாகச் சொல்ல வேண்டும். விழுங்கிவிடக் கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமல் பாடி சங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது.''

எவ்வளவு ஆழம். எவ்வளவு நுட்பம். எவ்வளவு கவித்துவம். சங்கீதம் தெரிந்த அதிலும் காற்றுக் கருவிகளை வாசிக்கத் தெரிந்த ஒருவனே இவ்வளவு ஒரு நுணுக்கமாகச் சொல்ல முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பிங்க் பியூட்டி.... கெளரி கிஷன்!

முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கதாநாயகனாகும் இன்பநிதி! இயக்குநர் இவரா?

SCROLL FOR NEXT