கம்பர் 
தமிழ்மணி

கம்பனின் தமிழமுதம் - 43: சிறியோரை இகழ்தல்

'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், 'அதனினும்' என்னும் சொல்லை கவனியுங்கள்.

த.இராமலிங்கம்

'பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், 'அதனினும்' என்னும் சொல்லை கவனியுங்கள். 'சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று' என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.

'சிறியோர்' என்று குறிக்கப்படும் நிலைமை ஒருவருக்கு எப்போது ஏற்படும்? வயது, ஏழ்மை, அறியாமை, பதவி, அதிகாரம், பிறப்பால் ஒருவருக்கு சமுதாயம் விதித்துள்ள ஏற்றத் தாழ்வு இப்படி பல காரணங்கள் உண்டு. பெருந்தன்மை உடைய எவரும், பிறரைச் சிறியோராக எண்ணி மரியாதைக் குறைவாக நடத்துவது இல்லை. பொருத்தமான இடத்தில், உயர்ந்த கருத்துகளுடன் இந்தச் சிந்தனையைக் கம்பன் வலியுறுத்துகிறான்.

வாலியின் மரணத்துக்குப் பின்னர், சுக்கிரீவனுக்கு முடி சூட்டியாயிற்று. அவனுக்குப் பல்வேறு அரசியல் அறங்களை இராமன் சொல்வதாக 'அரசியல் படலம்' என்று ஒரு படலத்தையே வைத்தான் கம்பன். 'அறிவும் உண்மையும் நிறைந்த அமைச்சர்களையும், தீயவை நெருங்க முடியாத ஒழுக்கம் நிறைந்த வீரர்களையும் அருகில் வைத்துக் கொள்.

அவர்களுடன் தூய்மையான உறவுடன் நன்கு பழகு. நெருங்கியும் பழகாதே; விலகிச் செல்லவும் அனுமதிக்காதே. எந்த நிலையிலும் அற வழியில் இருந்து மாறிவிடாதே. அறத்தில் இருந்து பிறழ்ந்தால், வாழ்நாளே முடிந்தது என்று பொருள்...' இப்படிப் பல அரசியல் கருத்துகளை வலியுறுத்திய கம்பன் பாடல்களில், மிக முக்கியமான பாடல் இது.

சிறியர் என்று இகழ்ந்து நோவு

செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய கூனியால்,

குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

'ஏதோ ஒரு காரணத்தால் அல்லது சூழ்நிலையால், சமுதாயத்தில் நாம் மேல்நிலையிலும் சிலர் கீழ்நிலையிலும் இருந்துவிட நேரலாம். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, கீழ்நிலையில் இருப்பவரை அவமானப்படுத்துவதோ, அவர்களின் மனம் புண்படும்படி நடத்துவதோ மிகவும் தவறு' என்னும் கருத்தை, இராமன் வாயிலாகப் பாடலின் முதல் வரியில் அழுத்தமாகச் சொல்கிறான் கம்பன்.

இளம் பருவத்தில் இருந்தபோது, விளையாட்டாக இராமன் கூனியின் முதுகில் மண் உருண்டையால் அடித்தான் என்னும் செய்தி, நாம் எல்லாரும் அறிந்த ஒன்று. கூனி ஒரு மாற்றுத் திறனாளி. கைகேயியின் தோழியாக அரண்மனைக்கு வந்தவளே அன்றி, அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்லள். சிறுவன் இராமனின் செயல், கூனியின் உடலில் இருந்த குறையைச் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துவிட்டது.

எந்த ஒரு மாற்றுத் திறனாளிக்கும், அவரது உடல்குறையைச் சுட்டிக்காட்டும் சொல் அல்லது செயல் மன வேதனையைத் தூண்டவே செய்யும். எதிர்க் கருத்தைப் பதிவு செய்யவும் முடியாத, அரச குமாரன் சிற்றன்னையின் தோழி என்னும் சமூக உயர்வு, தாழ்வு நிலை. எனவே, அந்த வேதனை அவள் மனதுக்குள்ளேயே விதையாக விழுந்து வளர்ந்தது. அதுவே இராமனைத் துயர்க் கடலில் தள்ளிவிட்டது.

இராமன் சுக்கிரீவனிடம் இந்த செய்தியைச் சொன்னதாக அமைந்த இந்தப் பாடலின் பொருள் இதுதான்: 'நம்மைவிட சிறியவராக இருப்பவர்தானே என்று எண்ணி, அவர்கள் மனம் நோவுமாறு எந்தச் செயலையும் செய்து விடாதே.

இந்த உயர்ந்த நெறியை மறந்து நான் செய்த ஒரு தீமை, கூனி மனத்தில் பகை உணர்ச்சியை வளர்த்துவிட்டது; அனைத்தையும் இழந்து, மிகப் பெரும் துயர்க்கடலில் நான் வீழ்ந்தமைக்கு அதுவே காரணமாகிவிட்டது'. கூனி முதுகில் தான் மண் உருண்டையை எய்தது விளையாட்டாகத்தான் என்றாலும், அதனைச் செய்திருக்கக் கூடாது என்ற எண்ணம், வளர்ந்த பருவம் அடைந்த பின்னர் இராமனுக்கு ஏற்பட்டது என்பதை இங்கு பதிவு செய்கிறான் கம்பன்.

'சிறியோரை இகழ்தல் என்பது நடக்கவே கூடாத ஒன்று' என்று நமக்கு அறிவுறுத்துகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT