கோப்புப் படம் 
தமிழ்மணி

அரசன் மீதுதான் தவறு!

அந்தப் பெண் பிறந்த போதே அழகாய் இருந்தாள். அவள் வளர்ந்த போதும் அவளோடு அழகும் வளர்ந்து கொண்டிருந்தது.

முனைவர் அரங்க. பாரி

அந்தப் பெண் பிறந்த போதே அழகாய் இருந்தாள். அவள் வளர்ந்த போதும் அவளோடு அழகும் வளர்ந்து கொண்டிருந்தது. அவள் அழகு பலரைத் தூங்காமல் ஆக்கிவிட்டதை அறியாமல் அவள் நாள்தோறும் தூங்கி எழுந்து கொண்டிருந்தாள். அந்த அழகின் சிரிப்பில் பெருமூச்சு விட்டவர்கள் பலர்; மூச்சு விடாமல் போனவர்கள் சிலர்.

அன்றொரு நாள் அவள் வீதி வழி நடந்தாள். பேதமை வழியும் கண்களும், பின்னலிட்ட சடையும், பவளச் செவ்வாயும், பால் நிறமும், நிலாப் பிறை நெற்றியும், நீள் புருவமும் அவளோடு நடந்தன. அதனால் வீதியில் நடந்தோர் பார்வை எல்லாம் நின்றன. அப்போது இளைஞன் ஒருவன் அவளைப் பார்த்து விட்டான். விட்டான் என்று சொல்வது பிழை. விடாது தொடர்ந்தான். தன் காதலை அவளிடம் சொல்லிவிடவும் துணிந்தான். அவனிடம் பருவம் இருந்தது; வீரத்தால் நிமிர்ந்த உருவம் இருந்தது; தன்னைப் பற்றிய நினைப்பில் கர்வம் இருந்தது. இவையெல்லாம் இருந்ததால் மீசையோடு அவனிடம் காதலும் முளைத்து இருந்தது.

அவன், அவள்முன் சென்று நின்றான். அவளின் நிமிர்ந்த பார்வையில் அவன் உயரம் குறைந்தது. 'என்ன?'' என்றன அவள் விழிகள்.

அவன் சொன்னான்: 'பெண்ணே! அன்னம் தான் நீயா? அணி மயிலா? சின்னஞ் சிறுகல் உண்ணும் புறாவே தானா? கானுலவும் மானா? கலக்குகிறாய் ஊரை எல்லாம். தேனுலவும் உன் இதழ் திறக்கக் கூடாதா?'' என்றான். அவள் முகத்தில் நாணச் சிவப்பு ஏறவில்லை. விழியில் வெட்கம் குடியேறவில்லை. வேறு ஏதோ மொழி பேசுகிறான் போல எண்ணினாள் போலும்!

'உன்னைக் கண்டு ஊரே உன்மத்தம் ஆகுதடி. பெண்ணே! பேசத்தான் கூடாதா'' என்றான். அவள் பேசாது விழியில் இருந்து அவனை விலக்கி தன் வழியில் நடந்தாள்.

அப்போது தான் தெரிந்தது, அவள் இன்னும் பருவம் அடையவில்லை என்பது. மதர்த்து வளர்ந்து இருந்தாலும் இன்னும் அவள் அரும்புதான். பால் முற்றாக் கதிர்தான். மனதளவில் பிஞ்சுதான்; காதல் கருக்கொள்ளாத கன்றுதான். 'இவளிடம் போய்க் காதல் உரை பேசினோமே! பித்தேறிப் போய்விட்டது நமக்கு. மனச்சலனம் இல்லாத பேதையிடம் போய், பிஞ்சு என்று கருதாமல் கொஞ்சு மொழி பேசினோமே!' என்று மனம் குமைந்தான்.

இருந்தாலும் இது என் தவறல்ல. பின் யார் தவறு? அவன் எண்ணினான், அவளைத் தொடர்ந்து சென்று உரைத்தான்: 'சின்னஞ் சிறுமி இது கேள்! உன்னிடம் தவறேதும் இல்லை. அழகாய் பிறந்ததற்காக மக்கள் பழகும் வீதிக்கு வராமல் இருக்க முடியுமா? பெற்றோர்தான் உன்னை வெளியே செல்லாமல் சிறை வைக்க முடியுமா? தவறெல்லாம் உன்னிடமும் இல்லை, உன் பெற்றோரிடமும் இல்லை.

மதம் கொண்ட யானையை, நீர்த்துறைக்கு அழைத்து வரும் போது பறையடித்து அவ்வழி வருவோரை அப்பால் போக என அறிவிப்பார்களே! அதுபோல, அழகுக்கு அழகு செய்யும் பெண் ஒருத்தி மக்கள் வழங்கும் தெருவில் வருகிறாள், காதலைக் கட்டுப்படுத்த முடியாத காளைகள் எல்லாரும் போதுவீர், அப்புறம் போகாவிடில் நாம் பொறுப்பல்ல என்று பறையடித்து அறிவிக்கச் சொல்லாத அல்லது அவளை செல்லாது ஒழிக என்று ஆணையிடாத அரசன் மீதுதான் தவறு''.

இது, கபிலரின் குறிஞ்சிக்கலி 56 -ஆவது பாடலின் எழுத்தோவியம்,

நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறிலர்

நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பறையறைந் தல்லது செல்லற்க என்னா

இறையே தவறுடை யான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT