கோப்புப் படம் 
தமிழ்மணி

முடமுதிர் மருதத்துப் பெருந்துறை!

சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருப்பொருள்களின் பயன்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

தினமணி செய்திச் சேவை

முனைவர் ப. சுடலைமணி

சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருப்பொருள்களின் பயன்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. தாவர இனங்களை அகப்பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளனர்.

தொல்காப்பியார் மருதநிலத்தை 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' எனச் சிறப்பித்துள்ளார். இதன்படி பார்த்தால் மருதநிலம் அதிக நீர்வளம் கொண்டது. மருதநிலத்திற்கே உரியதாக வஞ்சி, காஞ்சி, மருதம் போன்ற தாவர இனங்களை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மருத மரங்கள் நீர்நிலைகளை ஒட்டி செழிப்பாக வளர்கின்றன.

ஓரம்போகியார் ஐங்குறுநூறு பாடல்களில் மருதநிலக் காட்சிகளை அழகாகச் சித்திரித்துள்ளார். அகப்பாடல்களில் கருப்பொருள்களின் பயன்பாட்டை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார். மருதத் திணைக்குரிய ஒழுக்கமாக 'ஊடல்' குறிக்கப்பட்டுள்ளது. ஓரம்போகியார் இயற்றிய ஊடல் குறித்த பாடல்கள் மிகவும் இலக்கியச் சுவை கொண்டதாகவும் அமைந்துள்ளன.

தலைவனும் தலைவியும் அன்பொருமித்த இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவன், தலைவி மீது மிகவும் அன்புடையவனாக இருக்கிறான். இருப்பினும், ஒருநாள் தலைவியைப் பிரிந்து பரத்தையின் உறவை நாடுகிறான். பரத்தையருடன் இணைந்து நீர்த் துறையின்கண் நீராடுகிறான். தன்னை மறந்த நிலையில் புனல் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்கிறான்.

இந்தச் செய்தி தலைவியை அடைகிறது. தலைவி தோழியாரிடம் இதனைத் துக்கத்துடன் கூறுகிறாள்.

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை,

பெண்டிரொடு ஆடும் என்பதன்

தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே.

அன்புள்ள தோழியே! தலைவன் உயர்ந்த மருத மரங்கள் சூழ்ந்த பெரிய நீர்நிலையில், மற்ற பெண்களுடன் நீராடும்போது, அவனுடைய குளிர்ந்த மாலைகள் பெண்களின் மார்புகளில் படும்படி அணைத்து மகிழ்கிறான் என்று தலைவி தோழியிடம், தலைவனின் செயல்களைக் கூறி வருத்தப்படுகிறாள்.

தலைவன் தலைவியுடன் முன்னொரு நாள் புனலாட்டு நிகழ்த்தினான்.

அப்போது, தோழியரும் உடனிருந்தனர். தன் உடனாடும் ஆயத்தார் அறியுமாறு, இனி புறத்தொழுக்கம் விரும்பேன் என்று சூளுரைத்தான்.

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

கடன்அன்று என்னும் கொல்லோ நம்ஊர்

முடம்முதிர் மருதத்துப் பெருந்துறை

உடன்ஆடு ஆயமோடு உற்றசூளே?

தோழி, கேட்பாயாக; நம் ஊரில் வளைந்து முதிர்ந்த மருதமரத்து ஆற்றுநீர்த் துறையில் நம்மோடு நீராடும் மகளிர் கூட்டத்துக்கு நடுவே உன்னைத் தவிர வேறொருத்தியை விரும்பமாட்டேன் என்று சூளுரை கூறினானே! அந்தச் சொல்லைக் காப்பாற்றுவது அவனுக்குக் கடமை இல்லை போலும்! என்று கூறினாள்.

தலைவன் சூளுரைத்ததை மறந்துவிட்டு பரத்தையருடன் நீர் விளையாட்டில் மகிழ்ந்திருந்ததைத் தலைவி அனைவரிடமும் கூறுகிறாள்.

தலைவனின் இரண்டு புனல் விளையாட்டுகளும் நடந்த நீர்த்துறையின்கண் மருத மரங்கள் நின்றதாகக் குறிப்பிடுகிறாள்.

ஒரு மரத்தை முடம் முதிர் மருதம் என்கிறாள். அதாவது, முதிர்ந்த வளைந்த மரம் என்கிறாள். மற்றொரு மரத்தை உயர்ந்து ஓங்கிய மரமென்று குறிப்பிடுகிறாள்.

மருதத் திணைப் பாடல்களின் பொருண்மைக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக மருத மரங்கள் பின் அமைப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

SCROLL FOR NEXT