தமிழ்மணி

காலம் பெற உய்யப் போமின்

'காலம் பெற' என்பது விடியற்காலை எனப்பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும்.

முனைவா் ம.பெ.சீனிவாசன்

'காலம் பெற' என்பது விடியற்காலை எனப்பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.

காலம்பெற மலர்நீரவை தூவித் தொழுதேத்தும்

ஞாலம்புகழ் அடியார்உடல் உறுநோய்நலி யாவே

(160)

என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், 'காலை வேளையில் மலரும் நீரும் தூவி இறைவனை வழிபடுமுறை' பேசப்பட்டுள்ளது.

அங்ஙனம் வழிபடும் அடியார்களை 'உடலுறுநோய் வருத்தாது' என்கிறார் அவர்.

'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' (5) என்னும் திருப்பாவைப் பாசுரத்தில் விடியற்காலையில் கண் விழித்தெழுந்து நீராடிப் பாவை நோன்பில் ஈடுபடும் பெண்கள்,

'தூமலர் தூவித் தொழுது' கண்ணனை வழிபட்டதாகவே அறிகிறோம்.

இவ்வொரு பொருளேயன்றி 'முன்னதாக' என்னும் பொருளிலும், 'காலம் பெற' எனும் சொல் எடுத்தாளப்பெற்றதையும் பக்திப் பனுவல்களில் பார்க்கலாம்.

பெரியாழ்வார் தம்முடைய திருமொழி ஒன்றில், இறைவன் தம் மனத்தின்கண் குடியேறிவிட்டதால், 'நோய்களே! உங்களுக்கு இனி இடமில்லை. ஓடிப் போய்விடுங்கள்' என்று சொல்லும் வகையில் ஒரு பதிகமே (5-2) பாடியிருக்கிறார். அப்பதிகத்தின் முதற்பாசுரத்தில் 'காலம் பெற' என்னும் சொல்லை அவர் பொருத்த

முறக் கையாண்டிருப்பதைக் காணலாம்.

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!

காலம் பெற உய்யப் போமின்,

மெய்க் கொண்டு வந்து புகுந்து

வேதப் பிரானார் கிடந்தார்,

பைக்கொண்ட பாம்பணை யோடும்

பண்டன்று பட்டினம் காப்பே!

இப்பாசுரத்தில் இறைவன் வருவதற்கு

முன்பாகத் தம் உடம்பில் குடியேறியிருந்த நோய்களை நோக்கி, 'நீங்கள் இனி வெளியேறி விடுங்கள்' என்கிறார் ஆழ்வார். அதனைக் 'காலம் பெற உய்யப் போமின்' என்னும் தொடரால் உணர்த்துகிறார்.

'நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகளைப் போலே என் உடம்பு முழுதும் பரவி என்னைக் கையாளாகக் கொண்டு என்னுள் நிலைத்து நிற்கின்ற நோய்களே' நீங்கள் பிழைத்திருக்க வேண்டுமெனில் இங்கிருந்து தப்பிப் போய் விடுங்கள். என் உடம்பு, வேதப் பிரானாகிய இறைவன் திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடும் வந்து பள்ளி கொண்டிருக்கும் இடமாயிற்று. ஆதலால், இத்தனை நாளும் போலல்ல இந்நாள். அவனுடைய பட்டினமாகிய ஆத்மா முன்போல் உள்ளதன்று. அவனால் காவல் உடையது ஆயிற்று என்கிறார்.

ஆதலால், 'காலம் பெற' அதாவது முன்னதாக நீங்கள் போய்விடுவதே உங்களுக்குப் பாதுகாவலாகும் என்பது கருத்து.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும், 'உரிய காலத்தில் அல்லது காலந்தாழ்த்தாமல்' என்னும் பொருளில் இச்சொல் ஆளப்பட்டிருப்பதைக் காணலாம்.

முனிந்து சகடம் உதைத்து மாயப்

பேய்முலை உண்டு மருதிடைப் போய்

கனிந்த விளவுக்குச் கன்றெறிந்த

கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்;

முனிந்தினி என்செய்தீர் அன்னை மீர்காள்,

முன்னி அவன்வந்து வீற்றிருந்த

கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே

காலம் பெற என்னைக் காட்டுமினே! (7-3-5)

அன்னைமார்களே! தாய், பால் கொடுக்கத் தாழ்த்தாள் என்று சீறி மூரி நிமிர்ந்த தன் திருவடிகளால் சகடத்தை உதைத்து ஒழித்தவனும் வஞ்சனை பொருந்திய பேயின் நஞ்சு தடவிய முலையை உண்டு அவளை முடித்தவனும், மருதமரங்களின் ஊடே சென்று பழுத்திருந்த விளங்கனியின் மீது கன்றினை வீசியெறிந்து கொன்றவனும் ஆகிய கண்ணபிரானுக்கு என்னுடைய பெண்மைக்குரிய அடக்கம் முதலியவற்றை இழந்தேன். இவ்வளவில் தாய்மார்களே! என்னை முனிந்து நீங்கள் என்ன பயன்பெறப் போகிறீர்கள்? அவன் முற்பட்டு வந்து எழுந்தருளியிருக்கின்ற, பழங்கள் நிறைந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்பேரெயில் என்னும் திவ்ய தேசத்திற்கே என்னைக் கொண்டு செல்லுங்கள் என்கிறாள்.

'நீ இங்ஙனம் விரைவது (அதாவது அவசரப்படுவது) உன் பெண் தன்மைக்கு அடுக்காது' என்று தாயார் சொல்லி வருந்தவும் இவள், 'நீங்கள் குறிக்கும் என் பெண்தன்மையும்' என்பால் இல்லை. அது எனக்கு முன்னே அவனிடம் போயிற்று. பயனற்ற நிலையில் என்னை அங்கே கொண்டு போகாமல் இப்போதே திருப்பேரெயில் கொண்டு போய்விடுங்கள் என்கிறாள்.

அன்றியும் நீங்கள் முனிவது என் நன்மைக்கே என்று சொல்லுவீர்களாயினும், உண்மையிலேயே என் நன்மையில் நோக்குடையவர்களாகுங்கள் என்று குறிப்பால் உணர்த்துகிறாள்.

என் நினைவை எண்ணிப் பாருங்கள். அவன் முனிவிலே சுகப்பட்ட நான், இனி உங்கள் சீற்றத்தினால் மீள்வேனோ? அவன் முனிவு அன்பாய் இனிமையாய் உள்ளது. உங்கள் முனிவு வெறுப்பாய், கடுமையாய் இருக்கிறது. அதனால் உங்கள் முனிவு என்னை என் எண்ணத்தினின்றும் மீட்காது என்கிறாள். 'முனிந்து என் செய்தீர்?' என்றதன் கருத்து இதுவே.

இதனை அடுத்துவரும் பாசுரமும் கண்ணன் திறத்து அவள் கொண்ட காதல் 'கடலின் மிகப் பெரிது' ஆதலால் அவனை அடைவதில் அவள் கொண்ட 'த்வரை'யை அதாவது விரைவினை உணர்த்துவதாகவே அமைகிறது.

காலத்தாழ்வின்றித் திருப்பெரெயில் என்னும் திவ்ய தேசத்தைக் 'காலம் பெற' எனக்குக் காட்டுங்கள் என்கிறாள்.

காலம்பெற என்னைக் காட்டுமின்கள்

காதல் கடலின் மிகப் பெரிதால்

நீலமுகில் வண்ணத்து எம்பெருமான்

நிற்கும் முன்னே வந்து கைக்கும் எய்தான்;

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த

நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்

கோலச் செந்நெற்கள் கவரி வீசும்

கூடு புனல் திருப் பேரெயிற்கே! (7-3-6)

'என் காதல் அளவுபட்டதாய் இல்லை. கடலினும் மிகப் பெரியதாய் இருக்கிறது. என்னால் இங்கே பொறுத்து இருத்தல் இயலாது. என்னைத் திருப்பேரெயிலிலே கொண்டு சென்று மகர நெடுங்குழைக் காதனை எனக்குக் காட்டுங்கள்- இஃதன்றி வேறு பரிகாரம் இல்லை; இனி என்மேல் குற்றம் இல்லை. ஆதலின் காலம் பெற என்னைக் காட்டுமின்கள்'.

இத்தகைய பாசுரங்களால் 'காலம் பெற' என்பதற்கு 'விடியற் காலை' என்ற பொருளோடு 'முன்னதாக' என்று வேறொரு பொருளும் வழங்கியதை அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT