பதினெண்மேல்கணக்கு எனப்படும் சங்க இலக்கியங்களுள் "கற்றிந்தார் ஏத்தும் கலி' எனப் போற்றப்படும் நூல் கலித்தொகை. அந்நூலுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளுக்குமாக கலிப்பாவில் அமைந்த நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
குறிஞ்சிக்கலியைக் கபிலரும், முல்லைக்கலிப் பாடல்களைச் சேரன் நல்லுருத்திரனும், மருதக்கலியை மருதனிளநாகனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும், பாலைக்கலியைப் பெருங்கடுங்கோவும் பாடியுள்ளனர்.
இவையனைத்தும் நாடகப் பாங்கில் உரையாடல் கூறுகள் அமைய விளங்குகின்றன. அவ்வாறான உரையாடலில் சங்கத் தமிழ் தலைவி ஒருத்தி, தன்னைத் தனியே விட்டுவிட்டுப் பரத்தையை நாடிச் சென்று திரும்பிய தலைவனுடன் பேசும் உரையாடல் இருபொருள் தந்து இலக்கிய இன்பம் தருகிறது.
மருதனிளநாகனார் பாடிய மருதக்கலிப் பாடலில் பரத்தையை விடுத்து வீடுவந்து சேர்ந்த தலைவனிடம் தலைவி வினாத் தொடுக்கிறாள். பரத்தையோடு இன்பம் துய்த்த தலைவன் கலைந்த சந்தனக் கலவை பூசிய தோற்றத்தில் வருகிறான். இருண்ட நள்ளிரவில் வந்த காரணம் யாது? எனத் தலைவனிடம் தலைவி வினவுகிறாள்.
தனது புறத்தொழுக்கத்தை மறைத்துப் பேசும் நோக்கம் கொண்ட தலைவன், தலைவியோடு உடனுறை வாழ்க்கை வாழ உதவிபுரியும் கடவுளரிடம் தங்கினேன் எனக் கூறுகிறான். இங்கு கடவுள் என்ற சொல் கடவுளரை வணங்கும் முனிவர்க்கும் ஆகி வருகிறது.
அவனது புறத்தொழுக்கம் அறிந்த தலைவி கோபம் கொண்டு மலர் சூடிய கடவுளர்கள் பலர் உண்டே? அவருள் எக்கடவுள்? என வினா எழுப்புகிறாள். தலைவியின் சினம் (புரிந்தும்) புரியாதவன்போலத் தலைவன், நமது திருமணத்துக்கு நன்னாள் பார்த்துக் கொடுத்த முனிவரே அக்கடவுள். அவரோடுதான் இதுநாள்வரை தங்கியிருந்தேன் என உரைக்கிறான்.
அவனது பொய்யுரை கேட்டுக் கோபம் கொண்ட தலைவி அம்முனிவர் யார் என்றும், உனது பொய்களை நான் உணர்ந்துள்ளேன் எனவும் வெகுண்டு பேசுவன பரத்தையருக்கும் முனிவருக்கும் பொருத்தி அமைவது, கலித்தொகையின் சிறப்பினை மட்டுமல்ல, பெண்மையின் நுண்ணறிவினையும் காட்டி நிற்கிறது.
உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையால் குறியிடத்துக்குத் தவறாமல் வருபவளும், அழகிய பல்வரிசை உடையவளும், தன்னைப் பார்த்தவர்களைத் தன் அழகாலே கொல்பவளும், தன்னை அழகுபடுத்திக் கொண்டு உன் இல்லத்துக்கு வந்த பரத்தையாகிய கடவுளோடு ான் நீ இருந்தாயா? எனக் கேட்கிறாள்.
பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்பப்
பறிமுறை நேர்ந்த நகாராகக் கண்டார்க்கு
இறுமுறை செய்யும் உருவொடு நும்இல்
செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ? (கலி.93:17-20)
என்ற தலைவியின் வினா, பொருள் ஈட்ட வேண்டும் என்ற உனது தீரா விருப்பத்தை மாற்றும் சொற்களைக் கூறியருள்பவரும், தமது உருவத்தாலே மக்களின் தீவினைகளை நீக்குபவரும் ஆகிய முனிவர்கள்தான் (செறிமுறை வந்த கடவுள்) நீ கூறும் கடவுளரா? என்று முனிவரையும் குறிப்பது எண்ணத்தக்கதாகும்.
விடை கூற முடியாத தலைவன்மீது தான் கொண்ட கோபம் தீராத தலைவி, மணம் கொண்ட சந்தனமும் கஸ்தூரியும் தடவப்பட்ட அடர் கூந்தலை ஒப்பனை செய்தவளின் கண்களைக் கண்டு மயங்கி அவளுக்கு மலர்களைச் சமர்ப்பித்து மகிழ்ந்தாயே? அவள்தான் நீ குறிப்பிட்ட முனிவரா? என வினவுகிறாள்.
"நோக்கில் பிணிகொள்ளும் கண்ணொடு' என்ற தொடர் மகளிருக்கு உரியதாகிறது. வள்ளுவப் பெருந்தகையும் ஒரு நோக்கம் நோய் என்றும் மற்றொரு நோக்கம் மருந்து என்னும் இரு நோக்கும் பெண்ணுக்கு உண்டு என உரைக்கின்றார்.
இவ்வாறு நோய் கொள்ள வைக்கும் நோக்கம் உடைய பெண் என்று பொருள் தரும் தொடர், தமது பார்வையால் துன்பங்கள் தீர்க்கும் அருளாளர் என்ற பொருளையும் தருகிறது. அத்தகைய முனிவரைச் சந்தனமும் கஸ்தூரியும் பூசிய கூந்தல் உடைய பெண்கள் பூப்பலியிட்டு வணங்கிய முனிவர்கள்தான் நீ கூறும் கடவுளரா? எனப் பொருள் தருவதும் எண்ணத்தக்கதாகும்.
தலைவன் மீது கொண்ட கோபம் சற்றும் தணியாத தலைவி, விலங்கு முகமும் மனித உடலும் கொண்ட சூரனைக் கொன்ற முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு உன்னோடு பரங்குன்ற மலையில் (மழை நாளில்) தங்கித் தெவிட்டாத இன்பம் நுகர்ந்த பெண்தான் நீ
குறிப்பிட்ட கடவுளா? (முனிவரா) என வினவுகிறாள்.
ஆராக் கனைகாமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
(கலி.93:27-28)
என்ற தொடர் பரத்தைப் பெண்ணுக்கு மட்டுமன்றி, தணியாத விருப்பத்தோடு பரங்குன்ற மலையில் உன்னோடு தங்கியவர்களாக நீ குறிப்பிட்ட அந்த முனிவர்களா? என்பதாகவும் பொருள் கொள்ள இடமளிக்கிறதே!
தலைவனோடு இருப்பதையே விரும்பும் பரத்தையரை விட்டுத் தன்னை நாடி வந்தவன் மீது கோபம் கொண்டு இகழ்ச்சியாக மேலும் சிலவற்றைக் கூறுகிறாள் தலைவி.
உன்னுடைய பொய்களை எல்லாம் நான் அறிவேன்; நீ அவளிடமே சென்றுவிடு; (தேறினேன், சென்று நீ... கலி.93:33) நீ போகாமல் இருந்தால் உன்னோடு அப்பெண்கள் துய்த்த இன்பத்துக்கு முட்டுப்பாடாகி விடும் எனக் கோபித்துப் பேசுகிறாள்.
நெட்டிருங் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பா டாகலும் உண்டு
(கலி.93: 35-36)
பலமுறை நீராடுவதால் ஈரம் சார்ந்த சடைமுடி உடைய முனிவர்களுக்கெல்லாம், நீ சென்று சேராமையால் முட்டுப்பாடாகுமே என அவன் கூறிய பொய்யுரைக்கு ஏற்பவே தலைவி வினாத் தொடுக்கிறாள்.
இந்தக் கலித்தொகைப் பாடல் தலைமக்களது உரையாடலாக அமைவது மட்டுமல்லாமல், இல்லறத்தில் உள்ளவர்களை நன்னெறிப்படுத்துவதற்குரிய அறவழிச் சான்றோர்களாகிய முனிவர்கள் அக்கால தமிழகத்தில் இருந்தனர்.
அவர்கள் கடவுளரை வழிபட்டு சமூகத்தில் நன்னெறியைப் போதித்தனர். அந்த முனிவர்களையும் கடவுளர் என்றே போற்றினர் தமிழர் என்பதும் புலனாகிறது.
மேலும், திருப்பரங்குன்றத்தில் சூரனை அழித்த முருகன் இருக்கும் கோயிலும், அந்தக் குன்றத்தில் முருகனை வழிபடும் முனிவர்களும் இருந்தனர் என்பதும் தமிழர்தம் பண்பாட்டுச் செய்தியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.