ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன. திருமலை திருப்பதி வேங்கடவன் கோயிலில் மார்கழியில் 'சுப்ரபாதம்' நிறுத்தப்பட்டுத் திருப்பாவை ஓதப் பெறுவது இதன் உயர்தனிச் சிறப்பை மூதலிக்கப் போதுமானது.
முதியவர்களாம் ஆயர்கள் கூறியபடி, 'மழை பெய்தல் வேண்டும்' என்பதை வெளிப்படையாகவும் 'கண்ணனை அடைதல் வேண்டும்' என்பதை உட் கிடையாகவும் கொண்டும் ஆயர் சிறுமியர் நோற்ற நோன்பினை முப்பது பாசுரங்களால் விவரிக்கிறது திருப்பாவை. காலையில் துயிலெழுந்த பெண்கள், தம் தோழியரைத் துயிலெழுப்பி நந்த கோபனின் மாளிகைக்குச் சென்று கண்ண பிரானையும் அவனுக்கு முன்னவனான நம்பி மூத்த பிரானையும் துயிலுணர்த்தி மார்கழி நீராடி அவனை நாயகனாக அடைந்து, தம் விருப்பம் நிறைவேறப் பெற்றனர் என்பதே திருப்பாவையின் பொருட் சுருக்கமாகும்.
திருப்பாவைப் பாசுரம் ஒவ்வொன்றும் 'ஏலொரெம்பாவாய்' என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவைநோன்பிற் கலந்து கொள்ளும் பெண்களை விளித்துக் கூறும் வகையில் அமைந்த வாய்பாடு போலவே இதைக் கருத வேண்டும். சிலர் இதை , 'ஏல் ஓர் எம் பாவாய்' எனப் பிரித்துப் பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுதல் எல்லாவிடங்களிலும் பொருந்தி வராது. ஆதலின் அடி நிறைக்க வந்த சொற்றொடராகவே இதைக் கொள்ளுதல் தகுதி என்பர். அங்ஙனம் கொண்டதாலேயே பாவை நோன்பிலும் வேறுபட்ட பாடுபொருள் உடைய பிற்காலத்துப் பாவை நூல்களும், 'ஏலேரெம்பாவாய்' என்றே முடிவு பெற்றன.
திருப்பாவையில் 'ஏலேரெம்பாவாய்' என்னும் மகுடத்துக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்று விடுவது கருத்திற் கொள்ளத்தக்கது. சான்றாக மகுடத்தை நீக்கின், 'பாரோர் புகழப் படிந்து', 'உய்யுமாறெண்ணி உகந்து', 'நீங்காத செல்வம் நிறைந்து' எனப் பாசுர முடிவுகள் (தி.பா.1-3) முற்றுப் பெற்று நிற்கக் காணலாம்.
ஆண்டாளின் திருப்பாவை வேறு சில இலக்கிய வித்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. தோழிகளைத் துயிலெழுப்புதல் மூலம் (6}15) பள்ளியெழுச்சிக்கான பிரபந்தக் கூறுகளையும், 'அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்னும் பாசுரத்தில் (24). 'போற்றி } போற்றி' என்று பாடுதல் மூலம் பல்லாண்டுப் பிரபந்தத்துக்கான கூறுகளையும் கொண்டிருத்தல் காண்க.
'தேச முடையாய் திற', 'மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்', 'தேற்றமாய் வந்து திற', 'சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்' (7,9,10,18) என்பன திருப்பாவையில் வரும் கடைதிறப்புப் பற்றிய அடிகளாகும். இங்கு வைகறையில் எழுந்து நோன்புக்கு ஆயத்தமான பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரைத் துயிலுணர்ந்து வந்து கதவு திறக்குமாறு வேண்டுகின்றனர்.
கலிங்கத்துப் பரணியிலும் இத்தகைய கடைதிறப்புப் பகுதி உள்ளது. போர்க்களத்திலிருந்து திரும்பிய வீரர், ஊடல் கொண்டு கதவடைத்திருந்த காதலியரைக் கதவு திறக்குமாறு வேண்டும் காதற் சுவைமிக்க பகுதி அது. பொதுவாகப் பரணி நூல்களில் கடவுள் வாழ்த்தை அடுத்து அமைவது கடைதிறப்பு. இன்று நமக்குக் கிடைத்துள்ள பரணிகளுள் காலத்தால் முந்தியதாகக் கருதப்படும் கலிங்கத்துப் பரணி இவ்வுறுப்பினைக் கொண்டுள்ளது. கலிங்கத்துப் பரணி தோன்றியது கி.பி.12-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி என்பர். ஆதலால் அதற்கும் முந்திய திருப்பாவை தன் கடை திறப்புக் குறிப்புகளால் பரணி இலக்கியத்தில், 'கடை திறப்பு' என்னும் ஒரு பகுதி அமைவதற்கு வழிவகுத்தது எனலாம்.
பக்தி நெறிக் காலத்துப் பாவை நூல்களாக இன்று நமக்குக் கிடைத்திருப்பவை ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் ஆகும். இவ்விரு நூல்களுக்கும் முந்தியவையாக வேறு பாவைநூல்கள் இருந்த விவரம் தெரியவில்லை.
தொல்காப்பியச் செய்யுளியல் 149ஆம் நூற்பாவுரையில் பேராசிரியர் குறிக்கும் 'பாவைப்பாட்டு', திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களையே குறிப்பதாக அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூலின் உரையில், கோழியும் கூவின; குக்கில் அழைத்தன;
......................................
ஊழியும் மன்னுவோம் என்றேலோர் எம்பாவாய் என்றொரு பாடல் இடம் பெறுகிறது. பாவைப்பாடல்களுக்குரிய வைகறை வருணனை, நீராட அழைத்தல், குடைந்து நீராடல், எம்பாவாய் என்னும் மகுடம் போன்ற பல கூறுகளையும் உள்ளடக்கியதாக அப்பாட்டு அமைந்துள்ளது. இதுவே சிறிது பாடபேதத்
துடன் யாப்பருங்கலக் காரிகையிலும் காணப்படுகிறது. இதனால் திருப்பாவை, திருவெம்பாவை போல வேறொரு பிரபந்தமும் வழங்கியமை அறியலாம். 'அறிவனடி யேத்தி' என வருதலால் இது அருகக் கடவுளையோ புத்தரையோ போற்றிச் செய்த பாவை நூலாகலாம் என்பர் மு. இராகவையங்கார்.
முன்னைய பாவை நூல்களின் போக்கைத் தழுவித் தத்துவராய சுவாமிகள், சிவகுமார மெளனகுரு சாமிகள் முகவைக்கண்ணமுருனார் போன்றோரும் 'பாவை' நூல்கள் படைத்துள்ளனர். 'திருஞானப்பாவை' என்னும் நூலில் மார்கழி நீராடலுக்குப் பதிலாகச் 'சித்திரை நீராடல்' பேசப் பெறுகிறது. பாடியவர் சிவகுமார மெளனகுரு சாமிகள்.
இந்நூற்றாண்டில் ஏறத்தாழ இருபது பாவை நூல்கள் தோன்றியுள்ளன. இக்காலப் பாவை நூலாசிரியர்களுள் கவியோகி சுத்தானந்த பாரதியார், கவிஞர் கண்ணதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர் ஆவர். இவர்கள் படைத்த பாவை நூல்கள் முறையே தமிழ்த்திருப்பாவை, தைப்பாவை, செந்தமிழ்ப்பாவை என்னும் பெயரின. பண்டிதர் அ.கி.நாயுடு பாடியது, 'திருமணப் பாவை' என்பதாகும்.
பாவை நூல்களைப் பொருத்தவரை நாம் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்துக்குப்பின் தோன்றிய பாவை நூல்களின் பாடுபொருள் பாவை நோன்பு அன்று. அவை பாவை நடையும் வடிவும் மொழியும் கொண்டு அமைந்தவையே தவிரப் பாவை நோன்பின் அடியாக எழுந்தவை அல்ல. அவை தத்துவம், தமிழ் உணர்ச்சி, சமுதாய சிந்தனை முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப புதிய கருத்துகளைப் பழைய வடிவத்தில் வெளியிடும் இலக்கியங்களாகப் பாவை நூல்கள் இன்றளவும் தொடர்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.