தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 18-01-2025

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், எழுதும்போது கிடைக்கும் அலாதி இன்பம் குறித்துப் பேசாமல் இருந்ததில்லை.

கலாரசிகன்

பொங்கல் விடுமுறைக்கு மதுரை சென்றிருந்தேன். வடக்கு மாசி வீதி பெரியார் மணியம்மை மழலையர் பள்ளியின் தாளாளர், நண்பர் பி.வரதராசனை சந்திக்கச் சென்றிருந்தேன். நாங்கள் இருவருமே மை பேனாவால் எழுதுபவர்கள். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், எழுதும்போது கிடைக்கும் அலாதி இன்பம் குறித்துப் பேசாமல் இருந்ததில்லை.

அதிகமாக மை நிரப்பி எழுதும் பேனாக்கள் முன்புபோல இப்போது கிடைப்பதில்லை என்று ஒருமுறை நான் அவரிடம் பேச்சுவாக்கில் சொல்லி இருந்தேன். எப்போதோ நான் சொன்னதை நினைவில் வைத்திருந்து, 'ப்ரில்' இங்க் நிறுவனம் தயாரிக்கும் மை பேனா ஒன்றை எனக்காக வாங்கி வைத்திருந்தார் நண்பர் வரதராசன்.

அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, வழக்கம்போல் தமிழ் உணர்வு குறித்தும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழில் பேசுவது குறைந்து வருவது குறித்தும் பேச்சு வந்தது. அப்போது, அவர் தெரிவித்த செய்தி ஒன்றை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர் இளைஞராக இருந்தபோது, நண்பர் ஒருவரால் 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதத்திடம் அறிமுகப்படுத்தப்பட்டாராம். ''இந்த இளைஞர் நல்ல தமிழ்ப் பற்றாளர்'' என்று அறிமுகப்படுத்தப்பட்டபோது 'முத்தமிழ்க் காவலர்' சிரித்தபடியே கேட்டாராம்- 'வேறு எந்த நாட்டிலாவது, மொழியிலாவது, இனத்திலாவது இப்படியொரு இழிநிலை இருக்க முடியுமா? யாராவது பிரிட்டனில் 'இவர் ஓர் ஆங்கிலப் பற்றாளர்' என்றோ, ஜப்பானில் இவர் ஒரு 'ஜப்பானிய மொழிப் பற்றாளர்' என்றோ, வங்காளத்தில் 'இவர் வங்காளப் பற்றாளர்' என்றோ சொல்கிறார்களா? தமிழில்தான், தமிழன் மட்டும்தான் தங்களில் ஒருவர் தமிழ்ப் பற்றாளராக இருக்கிறார் என்று வெட்கமில்லாமல் சொல்கிறான். தமிழன் என்று சொன்னாலே அவர் தமிழ்மொழிப் பற்றாளராகத்தானே இருக்க வேண்டும்?''

அன்று 'முத்தமிழ்க் காவலர்' இளைஞராக இருந்த நண்பர் பி.வரதராசனிடம் சொன்னது, இன்றைக்கும் பொருந்தும். தமிழன் என்று பீற்றிக்கொள்கிறோமே தவிர தவறில்லாமல் நான்கு வரிகள் தமிழ் எழுதத் தெரியாத சமுதாயத்தை அல்லவா நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?

********

நண்பர், வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் எங்கள் முதன்மைச் செய்தியாளர் வ.ஜெயபாண்டி மூலம் தனது 'நிமிர வைக்கும் நெல்லை' புத்தகத்தின் விரிவுபடுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பை அனுப்பி வைத்திருந்தார். தமிழில் வெளிவந்திருக்கும் வேறு எந்தவொரு புத்தகத்துக்கும் இத்தனை தலைசிறந்த ஆளுமைகள் அணிந்துரை வழங்கியும், பாராட்டியும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் பட்டியலை நீங்களே பாருங்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, எழுத்தாளர் கி.ரா., 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்கள் மாலன், வாஸந்தி, தோப்பில் முஹம்மது மீரான், வல்லிக்கண்ணன், தி.க.சி., பிரேமா நந்தகுமார், சுதாங்கன், மேலாண்மை பொன்னுசாமி, கொ.மா.கோதண்டம் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல், மதுரை குருமகா சந்நிதானமும், வானமாமலை இராமானுஜ ஜீயரும்கூட வாழ்த்துரை வழங்கி இருக்கிறார்கள்.

''நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் பெருமைப்படவைக்கும் பங்களிப்பு செய்திருக்கிறது. தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய மூன்றுக்கும் நெல்லையின் பங்களிப்பு அளப்பரியது'' என்று அவர்கள் ஒவ்வொருவரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தஞ்சைத் தரணி இசைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையைவிட, பொருநை நதி பாயும் நெல்லைத் தரணி தமிழுக்கு வழங்கி இருக்கும் இலக்கிய ஆளுமைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதை 'நிமிர வைக்கும் நெல்லை' பதிவு செய்கிறது.

''நெல்லையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பல தொகுதிகளாக எழுதினால்தான் முழுமையான வரலாற்றையும், சிறப்பையும் சொல்ல முடியும். என்னுடைய சின்னஞ்சிறு முயற்சியில் நெல்லையைப் பற்றிய சில செய்திகள் கோடிட்டு மட்டுமே காட்டப்பட்டிருக்கின்றன. இதை முழுமையான வரலாறு என்று சொல்ல முடியாது'' என்று தனது உரையில் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சொன்னாலும்கூட, இத்தனை செய்திகளையும், தரவுகளையும் உள்ளடக்கி இன்னொரு நூல் இதுவரை வெளிவந்ததில்லை.

''அரசியல், இலக்கியம், கலைகள், சமயம் என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியத்துவமும், ஒரு நெடிய சரித்திரமும் நெல்லைச் சீமைக்குத் தனித்தனியாக உண்டு. தமிழக அரசியலின் முக்கிய அசைவுகளிலும் நெல்லையின் பங்களிப்பு உண்டு. 'நாகரிகத்தின் பிறப்பிடமே நெல்லை' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதற்கான ஆதாரங்களும் உண்டு எனச் சொல்லலாம். இதற்காக, நெல்லை மண்ணைச் சார்ந்த மக்கள் ஒவ்வொருவரும் அந்தப் பெருமையை உணர்ந்து கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கலாம்'' என்கிற அவருடைய பதிவை, பொருநை நதிக் கரையில் ஓடி விளையாடி வளர்ந்த நானும் வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

பொருநை நதி, ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட வரலாறு, தொல்லியல் தடங்கள் அதைத் தொடர்ந்து பூலித்தேவன், கட்டபொம்மன், தியாகி சுந்தரலிங்கம் என்று நகர்ந்து, மகாகவி பாரதியார், வ.உ.சி. என விடுதலை வேள்வியில் நெல்லையின் பங்கு குறித்துப் பதிவு செய்திருக்கிறது 'நிமிர வைக்கும் நெல்லை'. 'நெல்லை சதி வழக்கு' குறித்தும், காந்தியத் தாக்கம் குறித்தும், இலக்கியப் பங்களிப்பு குறித்தும் எதையும் விட்டு வைக்காமல் பதிவு செய்திருக்கும் இந்தப் புத்தகம், பல முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாகத் திகழும் என்பது எனது கருத்து.

திரிகூடராசப்பக் கவிராயர், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப பாண்டியன், விளாத்திகுளம் சுவாமிகள் குறித்தெல்லாம் வருங்கால சந்ததியினர் மறந்துவிடாமல் இருப்பதை 'நிமிர வைக்கும் நெல்லை' உறுதிப்படுத்துகிறது. நெல்லைச் சீமை தந்த தமிழ் ஆளுமைகளின் பட்டியல் நீளமானது. அவர்களில் தலைசிறந்தவர்கள் யாரும் விட்டுப்போகாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புத்தகத்தை மீண்டுமொருமுறை படித்து முடித்ததும், நண்பர்கள் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், 'கல்கி' ப்ரியன், மைபா நாராயணன், அய்யாறு என்று நாங்கள் ஐந்து பேரும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் மகிழுந்தில் பயணித்த காலம் நினைவுக்கு வந்தன. வாழ்நாளில் மறந்துவிடக் கூடியவையா அந்த நினைவுகள்...

********

கவிஞர் துஷ்யந்த் சரவணராஜின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு 'மகள் கையளித்த மயிற்பீலிகள்'. அதில் இடம்பெறுகிறது இந்தக் கவிதை:

மகளைக்

கரைசேர்க்கிற தந்தை

அதன் பிறகு

அவள் நினைவுகளில்

தத்தளிக்கிறான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 வெற்றியாளர் திவ்யா கணேசன்! 2வது இடம் யாருக்கு?

தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது: முதல்வர் ஸ்டாலின்

வெடிகுண்டு மிரட்டல்: இண்டிகோ விமானம் லக்னௌவில் அவசர தரையிறக்கம்

இந்தியாவின் ஹல்க்... ராம் சரணின் புதிய புகைப்படம்!

பிஞ்சுக் கை வண்ணம்

SCROLL FOR NEXT