வெள்ளிமணி

துறவிகள் திருப்பணி செய்த சென்தூர் ஆலயம்

திருச்சீரலைவாய், ஜெயந்திபுரம், கபாடபுரம், செந்தில் மாநகர் என்றெல்லாம் அழைக்கப்படுவது, திருச்செந்தூர் திருத்தலம். இங்கு அலைகள் கொஞ்சும் கடலோரம் அழகுற அமைந்துள்ள செந்திலாண்டவர் ஆலயம், முருகப் பெருமானின்

வி.சி. ஜெயந்​தி​நா​தன்

திருச்சீரலைவாய், ஜெயந்திபுரம், கபாடபுரம், செந்தில் மாநகர் என்றெல்லாம் அழைக்கப்படுவது, திருச்செந்தூர் திருத்தலம். இங்கு அலைகள் கொஞ்சும் கடலோரம் அழகுற அமைந்துள்ள செந்திலாண்டவர் ஆலயம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாகும். நவக்கிரகத் தலங்களில் குரு பரிகாரத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.

தேவர்களைத் துன்புறுத்தி வந்தான் சூரபத்மன். முருகப்பெருமான் செந்தூரில் படைவீடு அமைத்து, விரதமிருந்து அந்த அசுரனை வெற்றிகொண்டு, ஆட்கொண்டார். இந்தத் திருவிளையாடல் நடைபெற்ற தலம் திருச்செந்தூராகும். அதையொட்டி இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, ஆண்டு தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், அப்பர் தேவாரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பழம்பெரும் இலக்கியங்களில் இவ்வாலயம் குறித்து பாடப்பட்டுள்ளது. இவற்றால் இக்கோயிலின் பழைமையை உணர முடிகிறது.

ஆதிசங்கரர், நக்கீரர், குமரகுருபரர், பகழிக் கூத்தர் உள்ளிட்ட மகாத்மாக்களும் செந்திலாண்டவனைப் போற்றியுள்ளனர். பல்வேறு காலகட்டத்தில் இவ்வாலயம், பல திருப்பணிகளின் மூலம் வளர்ச்சி பெற்றுள்ளது.

சிக மூர்த்தி சுவாமிகள் :

குறிப்பாக தவத்திரு தேசிக மூர்த்தி சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள், தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு வள்ளிநாயக சுவாமிகள் ஆகிய ஐம்பெரும் துறவிகள் மேற்கொண்ட திருப்பணிகளால் இவ்வாலயம் சிறப்பு பெற்றது என்றால் அது மிகையாகாது.

செந்திலாண்டவர் கோயிலில், காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில், மேற்குப் பகுதியில் 137 அடி உயரத்தில் ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாக அமைந்துள்ளது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டும் திருப்பணியை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு தேசிக மூர்த்தி சுவாமிகள் மேற்கொண்டார்.

இந்த ராஜகோபுரம் கட்டும்போது செந்திலாண்டவன் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.

ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒருநாள் வேலையாட்களுக்கு கூலி கொடுக்க பணம் இல்லை. அப்போது சுவாமிகள் செந்திலாண்டவனை வேண்ட, இறைவன் இலை விபூதியைக் கூலியாகக் கொடுக்குமாறு கூறினார்.

இறைவன் சொல்லுக்கு மறுப்பேது என்ற வகையில் அன்று வேலை முடிந்ததும், பணியாளர்களுக்கு இலை விபூதியை தேசிகமூர்த்தி சுவாமிகள் கூலியாகக் கொடுத்தார்; விநாயகர் சந்நிதியைக் கடந்ததும் திறந்து பார்க்குமாறு உத்தரவிட்டார்.

கூலியாக இலை விபூதியைப் பெற்ற பணியாளர்களும் சுவாமி கூறியபடி, விநாயகர் சந்நிதியைக் கடந்து சென்று பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர். அப்போது இலை விபூதியோடு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருந்துள்ளது. சுவாமிகள் உள்ளிட்ட அனைவரும் முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்தனர்.

தக்காதி வள்ளலின் நன்கொடை :

கோபுரத்தின் ஆறாவது நிலை கட்டி முடிக்கப்பட்டதும் இந்த அற்புதச் செயல் நின்றுவிட்டது. பணமும் இல்லை! இலை விபூதி பணமாக மாறிய அற்புதமும் நிகழவில்லை! "இனி எவ்வாறு நான் திருப்பணியை மேற்கொள்வேன்?' என தேசிக மூர்த்திகள் செந்திலாண்டவனை வேண்டினார். உடனே, "செந்தூருக்கு அருகிலுள்ள காயல்பட்டினத்தில் வாழும் சீதக்காதி என்ற வள்ளலிடம் சென்று பொருள் கேட்டு வா' என்று ஆணையிட்டுள்ளார் இறைவன்.

சுவாமிகளும் அதுபோல காயல்பட்டினம் சென்று சீதக்காதியிடம் இறைவனின் கட்டளையைக் கூறியுள்ளார். அதைக் கேட்ட சீதக்காதியும் மறுப்பேதும் கூறாமல், ஒரு மூட்டை உப்பைக் கொடுத்து, "இதைச் செந்தூரில் சென்று பிரித்துப் பாருங்கள்' என்று சுவாமிகளிடம் கூறினாராம்.

உப்பு மூட்டையைப் பெற்றுக் கொண்ட சுவாமிகள், உப்பைக் கொண்டு எவ்வாறு கட்டடம் கட்ட முடியும் என்று கலக்கத்தோடு திருச்செந்தூர் வந்துள்ளார். அங்கே மூட்டையைத் திறந்து பார்த்தபோது அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்துள்ளன.

செந்தூரான் நிகழ்த்திய அதிசயத்தை எண்ணியவாறு சுவாமிகள் கோபுரத் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தி முடித்துள்ளார்.

இந்தத் திருக்கோயிலின் வள்ளியம்மன் சந்நிதி அருகிலுள்ள தூண்களில் தவத்திரு காசி சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு தேசிகமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் உருவச் சிலைகள் அமைந்துள்ளன. இவர்களை இன்றும் பக்தர்கள் அன்புடன் வணங்கிச் செல்கின்றனர்.

தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரம் திருப்பணி செய்தமைக்குச் சான்றாக, திருக்கோயிலில் தேசிக மூர்த்தி சுவாமியின் சிலை அமைந்துள்ள தூணில் ராஜகோபுரத்தின் சிற்பமும் அமைந்துள்ளதைக் காணலாம்.

பணிக்கு உதவிய பனை மரங்கள் :

தேசிக மூர்த்தி சுவாமிகளைத் தொடர்ந்து, 1868-ம் ஆண்டு மௌன சுவாமி என்ற துறவி, இலங்கைக்குச் சென்று பணம் வசூல் செய்து, பழுதடைந்த மேலக் கோபுரம் மற்றும் கீழக்கோபுரத்தைப் புதுப்பித்துள்ளார். மேலக் கோபுரவாசலுக்கு எதிரே 150 தூண்களைக் கொண்ட வசந்த மண்டபத்தையும் மௌன சுவாமி கட்டினார் என்று கூறப்படுகிறது.

காசி சுவாமி 1872-ம் ஆண்டு வீடுவீடாகச் சென்று பணம் திரட்டி கோபுர திருப்பணி செய்துள்ளார். அப்போது "சாரம்' அமைக்க பனைமரங்கள் தேவைப்பட்டபோது, திருச்செந்தூருக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று திருப்பணிக்கு பனைமரங்கள் வேண்டுமென அங்குள்ள மக்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு "பட்டுப்போன மரங்களை வேண்டுமென்றால் தருகிறோம்; நல்ல நிலையிலுள்ள மரங்களைத் தர இயலாது' என்று அவ்வூர் மக்கள் கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பேதும் கூறாத சுவாமிகள், வைரம் பாய்ந்த பனை மரங்களைத் தேர்வு செய்து, அவற்றில் பனை ஓலைகளை அடையாளமாகக் கட்டிவிட்டு திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவனை வேண்டியுள்ளார்.

அன்று இரவு சூறாவளி வீசியுள்ளது. காலையில் கண்விழித்துப் பார்த்த அவ்வூர் மக்கள், சுவாமிகள் அடையாளம் காட்டிய பனை மரங்கள் மட்டும் சூறாவளியில் கிழே விழுந்து கிடந்த அதிசயத்தைக் கண்டு வியந்தனர்; திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமிகளிடம் திருப்பணிக்குத் தேவையான பனைமரங்களை ஒப்படைத்தனர்.

ஆறுமுக சுவாமிகள் :

திருச்செந்தூர் கோயிலின் இன்றைய அழகான தோற்றம், இவரது திருப்பணிகளால்தான் வாய்த்தது. 1910-க்கு முன்னர் இக் கோயில் வெள்ளைக் கற்களால் அமைந்திருந்ததாம்.

அந்த வெள்ளைக் கற்கள் பழுதுபட்டதால் ஆறுமுக சுவாமிகள், அவற்றை அகற்றினார்; கருங்கற்களால் ஆன மண்டபங்களைக் கட்டினார். சந்தன மலையைக் குடைந்து, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து கருங்கல் பாறைகளைக் கொண்டு வந்து, தூண்கள் அமைத்தார்; பிரகாரம் மற்றும் மதில்சுவரும் கட்டியுள்ளார்.

இவை தவிர, வள்ளியம்மன் கோயிலைப் புதுப்பித்து, அதில் பள்ளியறையையும் ஆறுமுக சுவாமிகள் கட்டியுள்ளார். அவரது காலத்தில் ஆரல்வாய்மொழியிலிருந்து வள்ளிநாயக சுவாமி என்ற மற்றொரு துறவி வந்து, விநாயகர் சந்நிதியிலிருந்து திருக்கோயிலுக்கு வரக்கூடிய மணல்மேட்டை சரிசெய்து, பக்தர்கள் நடந்துவர வழிசெய்தார். மேலும், கிரி பிரகாரத்தில் தகரக் கொட்டகையும் இவர் அமைத்தார்.

செந்திலாண்டவன் துணைகொண்டு திருப்பணிகள் மேற்கொண்ட இத்துறவிகளின் சமாதிகள், திருக்கோயில் அருகிலேயே அமைந்துள்ளன.

செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு அருகில் மௌன சுவாமி, ஆறுமுக சுவாமி, காசி சுவாமி ஆகிய மூன்று மஹான்களின் சமாதிகள் உள்ளன. வள்ளிநாயக சுவாமியின் சமாதி, திருக்கோயில் நுழைவாயில் அருகில் அமைந்துள்ளது. இன்றும் இத்துறவிகளுக்கு ஓதுவார்களைக் கொண்டு நித்திய பூஜை செய்யப்படுகிறது. இத்துறவிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை குருபூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.

அடியவர்களுக்கு சேவை செய்தால், அது ஆண்டவனுக்கு செய்த சேவை என்பர். அதுபோல செந்திலாண்டவனின் கோயிலைக் கட்ட திருப்பணிகள் மேற்கொண்ட இத்துறவிகளின் சமாதிகளுக்கு சென்று வணங்கி, செந்திலாண்டவனையும் துதித்து, குருவருளும் திருவருளும் பெறுவோம்.

கும்பாபிஷேகம் :

துறவிகளால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட செந்திலம்பதியில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக ரூ 2.44 கோடியில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸுபீன் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! உறவினரான போலீஸ் டிஎஸ்பி கைது!

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT