முகப்பு
வெள்ளிமணி

வெற்றி வேல்! வீர வேல்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறும் பெரிய திருவிழா, கந்த சஷ்டி-சூர சம்ஹார விழா.   "தலையா? கடல் அலையா ?' என வியக்கும் வண்ணம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் விரத விழா இத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:35 PM
பகிர்:

மு ருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறும் பெரிய திருவிழா, கந்த சஷ்டி-சூர சம்ஹார விழா.

  "தலையா? கடல் அலையா ?' என வியக்கும் வண்ணம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் விரத விழா இது. குறிஞ்சி நிலக் கடவுள் முருகனுக்கு உகந்த இடம் மலையும் மலையைச் சார்ந்த இடமும்! எனினும் திருச்செந்தூரில், கந்தன் கடற்கரையில் குடியிருப்பதற்குக் காரணம் உண்டு.

திருச்செந்தூர் கடலுக்கு அப்பால் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீர மகேந்திரபுரி எனும் கோட்டையில் தேவர்களை சிறை பிடித்துக் கொடுமை புரிந்த சூரபத்மன் வசித்தான். அவனை அழிக்க அவதாரம் செய்த முருகன், தனது படையோடு செந்திலம்பதி வந்து தங்கினார்; சூரனோடு போரிட்டு அவனை அழித்து தேவர்களை சிறை மீட்டார்; பின்பு இங்கேயே கோயில் கொண்டருளினார்.

Advertisement

  சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்னர் தாரகாசுரனைக் கொன்றார் முருகன். இந்த அசுரன், மாயாபுரி என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவன் ஒரு சிவ பக்தன். சிவபெருமானின் கருணையால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன்.

 அசுரனான தாரகன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறை பிடித்தான். 108 சதுர் யுக ஆண்டுகள் அவனது ஆட்சி நீடித்தது. தங்களின் சிரமம் நீக்கக் கோரி, சிவபெருமானிடம் முறையிட்டனர் தேவர்கள். அவர் தனது நெற்றிக் கண்ணில் இருந்து பறந்த ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார். அவை சரவண பொய்கையில், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்தத் தெய்வச் சிசுக்களை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்; உமா தேவி ஒன்றிணைத்தாள். இதனால் சரவணபவனாகிய குமரன், "ஆறுமுகன்' எனவும் அழைக்கப்பட்டார். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் "கார்த்திகேயன்' என்றும், அழகாக இருந்ததால் "முருகன்' என்றும் போற்றப்பட்டார்.

இளங்காளைப் பருவம் எய்திய குமரக் கடவுள், தனது தளபதியான வீரபாகுத் தேவரை தூதனுப்பி, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி அசுரர்களிடம் கேட்க, தாரகாசுரன் மறுத்துவிட்டான். உடனே முருகனது படை புறப்பட்டது. தாரகாசுரன், சிங்கமுகாசுரன், கஜமுகாசுரன் ஆகியோர் அழிக்கப்பட்டனர். சூரனும் களத்தில் இறங்கினான்! கந்தக் கடவுளால் வெல்லப்பட்டான்! இறுதியாக ஒரு மாமரத்தில் போய் அடைக்கலம் புகுந்தான் சூரன். அந்த மரத்தை ஞானவேலால் இரண்டாகப் பிளந்த முருகன், அதன் ஒரு பகுதியை சேவலாக்கி தனது கொடியின் சின்னமாக்கினார்.

மற்றொரு பகுதியை மயிலாக்கி தனது வாகனமாக்கிக் கொண்டார். சூர சம்ஹாரம் நடக்கும் முருகன் கோயில்களில் இறுதியாக சூரனின் தலைக்குப் பதிலாக மாவிலை கட்டப்படுவதும், சேவல் பறக்க விடப்படுவதும் இதனால்தான். திருச்செந்தூரில் இன்று மாலை, சூர சம்ஹார விழா நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவின் நோக்கம் மனிதர்களிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைப் போக்குவதுதான். இவற்றை ஞானம் என்னும் சக்தி வேலால்தான் நீக்க முடியும். சஷ்டியின் மறுநாள் குமரனுக்கு திருக்கல்யாணம் நடக்கும். இந்திரனின் வளர்ப்பு மகளான "தேவ குஞ்சரி' எனப்படும் தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் வைத்து முருகன் மணம் முடித்த திருநாள் அது.

சஷ்டி நாள்களில் விரதம் இருந்தால் பெண்களின் கருப்பையில் மக்கட்பேறு எனும் செல்வம் தோன்றும். சஷ்டி விரதம் அனுஷ்டிப்போர்க்கு அறிவும், அழகும், ஆற்றலுமிக்க, மக்கட் செல்வமும் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.