சக்தி நதிகளின் முக்கூடல்!
நவராத்திரி என்பது கலைத் திருநாள்! சக்தியின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றும் புனித நாள்! நவராத்திரிக்குரிய ஒன்பது நாட்களிலும் துர்க்கை, திருமகள், கலைமகள் என்று மூன்று வகை உருவமாக சக்தியை மக்கள் வழிபட்
நவராத்திரி என்பது கலைத் திருநாள்! சக்தியின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றும் புனித நாள்! நவராத்திரிக்குரிய ஒன்பது நாட்களிலும் துர்க்கை, திருமகள், கலைமகள் என்று மூன்று வகை உருவமாக சக்தியை மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
சித்திரை மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் உமாதேவியை துதித்து விரதம் இருப்பது "வசந்த நவராத்திரி' எனப்படும். புரட்டாசி முதன்மை மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் பூஜிப்பது "சாரதா நவராத்திரி' ஆகும். இதுவே பரிபூரணமாயும், நித்தியமாயும் உள்ள சக்தி தேவியின் வழிபாட்டை தனிப்பெரும் நோக்கமாய்க் கொண்டு கொண்டாடப்படும் கலை விழா உற்சவமாகும்.
கன்னிப் பெண்களை தேவியாகப் பாவித்து வழிபடும் வழக்கத்தை, அதாவது நவராத்திரி பூஜையைத் துவக்கி வைத்தவர் ராமபிரானின் முன்னோர்களில் ஒருவர் என்றொரு கருத்துண்டு. இந்த அடிப்படையில், இஷ்வாகு வம்சத்தினரால் "நவராத்திரி விழா' ஆரம்பிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். அந்த அரச பரம்பரையினர், பரதக் கண்டத்தில் பாயும் புண்ணிய நதியிலிருந்து நீரைக் கொண்டு வந்து ஒன்பது இடங்களில் வைத்து, அவற்றில் தேவியின் அம்சங்களை ஆவாஹனம் செய்வார்களாம்; ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிப் பெண்ணை தேவியாகப் பாவித்து வழிபாடு செய்வார்களாம். இதன் தொடர்ச்சியாகவே நவராத்திரியில் நவகன்னிகைகளைப் பூஜை செய்வதும் சில இடங்களில் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஆனால் அப்படிப் பூஜிக்கப்படுகிற பெண் குழந்தைகளின் வயது இரண்டு முதல் பத்து வரை மட்டுமே இருக்க வேண்டியது அவசியம்.
Advertisement
நவராத்திரியில் ஒன்பது நாட்களும் முறையே சைல புத்திரி, பிரும்மசாரிணி, சந்திர காண்டி, கூஷ்மாண்டி, ஸ்கந்த மாதா, காத்யாயினி, கால ராத்திரி, மகா கெüரி, சித்திதா என்று நவதுர்காவாக துர்க்கை ஒளிவிடுகின்றாள். அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் இந்த உற்சவ நாட்களில் பராசக்தியே துர்கையாகி தீமைகளை அழிக்கின்றாள். மஹாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கிறாள். புத்தி, பக்தி, சித்தி இம்மூன்றும் அடைய உதவும் அம்பிகை, வீடு பேறு அடையச் செய்யவும் கை கொடுக்கிறாள்.
இஷ்வாகு வம்சத்தினரால் நவ கன்னியர் வழிபாடு உருவானதாகக் கூறப்படும் கருத்து ஒரு புறமிருக்க, நவராத்திரி திருவிழா உருவான வரலாறு வேறு விதமாகவும் கூறப்படுகிறது. இந்தக் கருத்தே இன்று உலகமெங்கும் பரவலாக நிலை பெற்றுள்ளது. ஒரு காலத்தில் மகிஷன் என்ற அசுரன், அசுரர்களுக்குத் தலைவனாக இருந்தான். அவன் "அசுரேந்திரன்' என்று அழைக்கப்பட்டான். ""தேவர்களுக்கும் தானே தலைவனாக இருக்க வேண்டும்'' என்று மகிஷன் பேராசைப்பட்டான்; இதற்காக அமரர்களுடன் போரிட்டான். இந்த மகிஷாசுரனை அடக்கி வெற்றி கொள்ள துர்க்காதேவி முன் வந்தாள். மகிஷன் எருமை உருவில் இருந்து சிங்க உருவில் தோன்றினான். தேவியின் சிங்க வாகனத்துடன் இந்த அசுரச் சிங்கம் சண்டைக்குப் புறப்பட்டது. தேவி சிங்கத்தின் தலையை வெட்ட முற்படும் போது அசுரன், வாளும் கையுமாக மனித உருவில் மாறினான். தேவி அவனைக் கொல்ல முயன்றதும், அசுரன் யானையாக மாறி துதிக்கையால் சிங்க வாகனத்தை இழுக்க ஆரம்பித்தான்.
அந்தத் துதிக்கையை தேவி கத்தியால் வெட்டித் தள்ளினாள். உடனே மகிஷாசுரன் பழையபடி எருமையாக மாற, திடீரென்று தேவி அந்த எருமை மேல் குதித்து ஏறி தன் காலால் கழுத்தில் மிதித்து சூலாயுதத்தால் ஓங்கி அடித்தாள். இந்தச் சூழ்நிலையில் மகிஷாசுரன் தனது நிஜமான அசுர உருவில் வெளிப்பட்டு தொடர்ந்து மோதினான். ஆனால் தேவியின் பெரிய வாள், அசுரனை வெட்டி வீழ்த்தியது.
மகிஷாசுர வதம் செய்த துர்க்கா தேவியை மக்கள் "மகிஷாசுர மர்த்தினி' என்று போற்றி நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள். துர்க்கா தேவி மகிஷாசுரனை அழிக்கும் பொருட்டு விரதமிருந்த தினங்களை நவராத்திரி என்றும், அசுரனை வென்ற தினம் "விஜயதசமி' என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பதாவது நாளை "மகா நவமி' என்கிறோம். வெற்றி அளிக்கப்போகும் ஆயுதங்களைத் தேவி அன்று வைத்துப் பூஜை செய்ததால் மகா நவமி, "ஆயுத பூஜை'யாகக் கொண்டாடப்படுகிறது.
அருள், பொருள், ஆனந்தம் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளை அளித்திடும் மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதியின் முக்கூடலே துர்க்கையின் வடிவமாகும். புராணங்களிலும், ஆகமங்களிலும் பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் துர்க்கை போற்றப்படுகின்றாள். இங்கே பிரபலமான சில துர்க்கா தேவிகளைக் காண்போம் :
* திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் பிராஞ்சேரி என்னும் இடத்தில் படுத்துள்ள கோலத்தில் சயன துர்கை அருள்புரிகிறாள்.
* பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் வடக்கு வாசலில் அஷ்டபுஜ துர்கா தேவி காட்சி தருகிறாள். இந்த துர்க்கையை "விஷ்ணு துர்க்கை' என்றும் சொல்வர். வருகின்ற பக்தர்களைக் காக்க உடனே புறப்படுகிற தயார் நிலைத் தோற்றத்தில் இவள் நிற்பது சிறப்பாகும். எட்டுக் கரங்களுடைய இந்த துர்க்கையின் கைகள் ஒன்றில் கிளி உள்ளது. இது இந்தத் தேவியின் சாந்த சுபாவத்தையும் காட்டுகிறது.
* குடந்தையில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடபுறமுள்ள கோஷ்டத்தில் ஆறு கரங்கள் உள்ள துர்க்கை, எருமைத் தலையின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
* திருவக்கரை கோயில், விழுப்புரத்தில் உள்ளது. இங்கு வக்ரகாளியம்மன் கோயிலில் அருள் புரியும் துர்க்கை, தலை சாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள் புரிகிறாள். "வக்கிரன்' என்ற அசுரனை இந்தக் காளி வதைத்ததாகத் தல புராணம் கூறுகிறது. இது பிரதானமாக சிவாலயம்! தேவாரப் பாடல் பெற்ற கோயில்! வெளிச் சுற்றில் "பிரயோக சுதர்சன சக்கரத்துடன்' திருமாலும் தனிக் கோயிலில் காட்சி தருகிறார்.
* காசியிலும், நேபாளத்திலும் துர்கை, பத்து கரங்கள் கொண்டவளாக- மகிஷாசுரமர்த்தினியாக அருள்புரிகிறாள்.
* பஞ்சாப், ஹரியானா, பாட்னா, சாரநாத், நாளந்தா ஆகிய இடங்களில் முப்பத்திரண்டு கர துர்க்கையைத் தரிசிக்கலாம்.
* புதுக்கோட்டை மாவட்டம் மலையாப்பட்டியில் உள்ள சிவன் குடவரைக் கோயிலின் மேற்குச் சுவரில் தாமரை மலரில் நின்ற கோலத்தில் துர்க்கையானவள் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள்.
* துர்க்கையில் இரண்டு வகை. ஒன்று, சிவ துர்க்கை! சிவபெருமானுக்குரிய சூலம் முதலான படைக்கலங்களைத் தாங்கிக் காட்சி தரும் சிவாம்ச சக்தி இவள். மற்றொன்று விஷ்ணு துர்க்கை! சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்களைத் தாங்கிக் காட்சி தரும் விஷ்ணு அம்ச சக்தி அவள்.
கல்கத்தா அமைந்துள்ள மாநிலமான மேற்கு வங்காளத்தில் பத்து நாட்கள் துர்க்கா பூஜை செய்வதுபோல இந்தியாவில் வேறு எங்கும் காண்பது அரிது. துர்க்கை தேவி, பிறந்த பூமியாக தங்கள் மாநிலத்தைக் கருதும் அவர்கள் களிமண்ணாலும், தக்கைகளாலும் செய்த துர்க்கை உருவங்களுக்கு விதவிதமான பூஜை செய்வார்கள். நவராத்திரியில் தேவி பார்வதி தன் கணவன் வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு வருகிறாள் என்பர்.
துர்க்கா தேவியின் வரலாறு, மகாத்மியம், வழிபடும் முறைகள் முதலிய செய்திகளைத் தேவி பாகவதம், தேவி மான்மியம், ஸ்காந்தம், பிரம்மாண்ட புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. நவராத்திரி விழாக்காலத்தில் மூன்று சக்திகளை, முப்பெரும் தேவியை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.