முத்துப் பந்தல் அருளிய அத்தன்!
பசியறிந்து பாலூட்டுவது அன்னையின் செயல் என்றால், பிள்ளையைப் பேணிக் காப்பது தந்தையின் கடமையல்லவா? ஒரு பெற்றோரின் கடமையான இதனை தான் நிறைவேற்றி, தன் பக்தனின் பெருமையை உலகறியச் செய்தான் அகில உலகத்திற்கும்
பசியறிந்து பாலூட்டுவது அன்னையின் செயல் என்றால், பிள்ளையைப் பேணிக் காப்பது தந்தையின் கடமையல்லவா? ஒரு பெற்றோரின் கடமையான இதனை தான் நிறைவேற்றி, தன் பக்தனின் பெருமையை உலகறியச் செய்தான் அகில உலகத்திற்கும் நாயகனான கயிலை நாதன். அந்தப் பேறு பெற்றவர் சிவசக்தியால் ஆளப்பட்ட ஞானசம்பந்தப் பெருமான் ஆவார்.
சைவ சமயத்தை தமிழகத்தில் நிலைபெறச் செய்தவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர். "சைவ சமய ஆசாரியர்கள்' என அழைக்கப்படும் சிறப்புப் பெற்ற இவர்கள், இறைவனைப் புகழ்ந்து பாடிய தமிழ்ப் பாசுரங்கள் தேவார, திருவாசகங்கள் எனப் பன்னிரு திருமுறைகளில் மிகவும் உயர்ந்த நிலையில் போற்றப்பெறும். இந்நால்வர் பெருமக்களும் சைவ சமய நெறிகளில் தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என்பனவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். இவர்களுள் ஞானசம்பந்தப் பெருமான் வாழ்க்கை, சற்புத்திர மார்க்கத்திற்கு (மகன்மை நெறிக்கு) எடுத்துக் காட்டாக விளங்குவது ஆகும்.
பக்தி இயக்கத்தின் மூல புருஷராகக் கருதப்படும்
Advertisement
ஞானசம்பந்தப் பெருமானுக்கு சைவமும், தமிழும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். தமிழின் அருமையை அறிந்த அவர் தன்னை ""நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்'' என்று கூறிக் கொள்வதிலும், தான் இறைவனைப் புகழ்ந்து பாடிய தமிழ்ப் பாசுரங்களை ""திருநெறிய தமிழ்'' என்று கூறி அழைப்பதிலும் பெருமையுடையவராகத் திகழ்ந்தார்.
அன்னை உமாதேவியின் கைகளால் ஞானப்பால் அருந்தியதால் அந்த ஆளுடைய பிள்ளை, பள்ளிக் கல்வி கற்காமலேயே மிக அருமையாகத் தமிழில் இலக்கணமும், இசையும் பொருந்தி வரப் பாடும் ஆற்றலைப் பெற்று விளங்கினார். தன் மூன்றாவது வயது தொடங்கி சிவபிரான் மீது பல நூறு பதிகங்கள் பாடினார். தன் குழந்தைப் பருவத்திலேயே பல திருத்தலங்களுக்கு தன் பூலோகத் தந்தை சிவபாதரின் தோள் மீது அமர்ந்து சென்று தரிசித்தார்.
சற்று வளர்ந்து, பால பருவமடைந்த திருஞானசம்பந்தர், தன்னுடைய அடியார் திருக் கூட்டத்தினரோடு காவிரியின் தென்கரை தலங்களை தரிசித்து வருங்கால் திருசக்தி முற்றத்தில், "தழுவக் குழைந்தாளோடு உடனாய ஒருவனாய்' அருள் பாலிக்கும் சிவக் கொழுந்தீசனின் திருவுருவை ஆனந்தமாய் தரிசித்தார். பிறகு அருகில் உள்ள பட்டீச்சுரம் வந்து ஈசனை வழிபட நினைத்தார்.
அன்று சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் முதுவேனிற் காலமானதால் வெப்பம் தகித்தது. தெய்வத்திருக் குழந்தையாம் ஞானசம்பந்தர், அந்த வெப்பத்தையும் பாராட்டாது ஈசனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். பாலறாவாயனின் பாதம் நோகா வண்ணம் இருக்க இறைவன் திருவுள்ளம் கொண்டான். ஒரு அழகிய முத்துப் பந்தல் திடீரென்று அங்கே உருவானது. சிவ (பூத) கணங்கள் அந்த முத்துப் பந்தலை சம்பந்தப் பிரானுக்கு ஒரு குடையாகச் சுமந்து வந்தன. இறையருளை எண்ணிக் கசிந்துருகிய சம்பந்தரிடம், சிவ கணங்கள் "எம்மை விடுத்து அருளினார் பட்டீசர்' என இயம்பின. பெறற்கறிய இப்பெரும் பேற்றினை ஞானசம்பந்தர் பெறும் காட்சியினை தம் காப்பியத்துள் மிக அழகாக வடித்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
ஞானக்குழந்தையின் நடையழகைக் காண ஆவல் கொண்ட அம்மையும், அப்பனும் நந்தி தேவரை சற்றே விலகியிருக்குமாறு பணித்தனர். திருப்புன்கூரில் நந்தனாருக்காக நந்தி விலகி நின்றதுபோல் பட்டீச்சரத்திலும் நிகழ்ந்தது. மூலவரின் தரிசனம் கண்ட ஞானசம்பந்தர், ""பாடல் மறை'' எனத் தொடங்கும் பதிகம் பாடியருளினார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த நிகழ்வினை தனது திருப்பழசைப் பதிற்றுப் பத்தந்தாதியில் (பழசை என்று பட்டீசுரத்திற்கு ஒரு பெயர் உண்டு) அருமையாக வர்ணித்து தனக்கும் அவ்வாறே திருவருள் புரிய இறைவனை இறைஞ்சுகிறார். அந்தப் பாடலில்,
""காழியர் கோனுக்காக நந்தியை விலகச் சொன்னீரே? அவ்வாறே எளியேனுடைய வினைத் தொகுதிகளையும் நகரும்படி தேவரீர் நினைத்தாலே அடியேன் பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு உய்வேன் அன்றோ?'' என்று உருக்கத்தோடு "மகா வித்துவான்' விண்ணப்பிக்கும் நயம் வியக்கத் தக்கது.
ஞானசம்பந்தப் பெருமானுக்கு சிவபெருமான் முத்துப் பந்தல் நல்கியது ஒரு ஆனி மாதம் முதல் தேதி. இதனை ஓர் விழாவாகப் பழங்காலத்தொட்டு பட்டீச்சரம் அருள்மிகு ஞானாம்பிகா உடனுறை தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் மூன்று நாட்களுக்கு நடத்துகின்றனர். இம்மாதம் 13ம் தேதி காலையில் சம்பந்தருக்கு திருமுலைப் பால் அளித்து ரிஷபாரூடராய் சிவ-பார்வதி காட்சியளித்தலும், அவருக்கு பொற்றாளம் கொடுத்து அருளுதலும், மறுநாள் 14ம் தேதி முத்துக் கொண்டை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளித்து ஓடத்தில் ஞானசம்பந்தர் வீதி வலம் வருதலும், நிறைவாக 15ம் தேதி (ஆனி 1) முத்துப் பந்தல் பெருவிழாவும் நடைபெறுகின்றன. அன்று திருச்சக்தி முற்றம் சக்திவனேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஞானசம்பந்த மூர்த்தி உற்சவர், முத்துப் பந்தலில் அடியார்கள் கூட்டத்துடன் தேவார இன்னிசையுடன் தேனுபுரீஸ்வரர் ஆலயம் வந்து சேரும் அழகைக் காண ஆயிரம் கண்கள் படைத்தாலும் போதாது.
இந்த விழாவினைக் காண சிவநேயச் செல்வர்களை அன்புடன் அழைக்கின்றனர் இந்த விழாவினை ஏற்பாடு செய்து வரும் ஆலய நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் அறங்காவலர் குழுவினைச் சேர்ந்த வெங்கடேசன். அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. குடந்தையிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் விவரங்கள் அறிய ஆலயத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 0435- 2416976 மற்றும் 9442512703.
- எஸ். வெங்கட்ராமன்
தகவல், பட உதவி: செல்வ சேகர்