வெள்ளிமணி

துணைமாலை அம்மனின் துணைவர்!

சைவ சமயம் தழைக்க அருந்தொண்டாற்றிய ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நான்கு சான்றோர்களாலும் போற்றித் துதிக்கப்பட்ட, அற்புத தெய்வீகத் திருத்தலம், "திருச்சுழியல்' ஆகும்.  விருதுநகர் மா

வெ. கணேசன்

சைவ சமயம் தழைக்க அருந்தொண்டாற்றிய ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நான்கு சான்றோர்களாலும் போற்றித் துதிக்கப்பட்ட, அற்புத தெய்வீகத் திருத்தலம், "திருச்சுழியல்' ஆகும்.

 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரின் கிழக்கே பதினைந்து கி.மீ. தொலைவில், இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இங்கு ஈசன், "திருமேனி நாதன்' எனும் திருநாமத்துடன் விளங்குகிறார். அம்பிகை, "துணைமாலை அம்மன்' என்ற பெயரில் கோயில் கொண்டுள்ளார். சைவ சமயக் குரவர்கள் நால்வர், சேக்கிழார், குமர குருபரர், சேரமான் பெருமாள் நாயனார் என சைவ சமயச் சான்றோர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் இத்தலத்து இறைவனின் மேன்மையை அழகு தமிழில் பாடிப் போற்றியுள்ளனர்.

தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்கள் பதினான்கில் பத்தாவது திருத்தலமாக பேறு பெற்று விளங்குவது திருச்சுழியல் ஆகும். இதன் தலவிருட்சம் புன்னை மரமாகும்.

திருமலை ரகுநாத சேதுபதி என்னும் மன்னர் (1647-72) கோயில் திருப்பணிக்கும், நித்திய பூஜைக் கட்டளைகளுக்கும் தானங்கள் கொடுத்ததற்குச் சான்று உள்ளது. சகாயவல்லி அம்மன் சந்நிதியின் வடக்குப் பிரகார கல் சுவரில் முதலாம் ராஜராஜ சோழன், தனது பத்தாவது ஆட்சி ஆண்டில்  கோயிலுக்குத் தானங்கள் அளித்த செய்தி, தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலயத்தில் உள்ள ஏழுநிலைக் கோபுரம், முத்து நாயக்கர் என்பவரால் கி.பி. 1750ல் கட்டப்பட்டது. கோயில் கம்பத்து மண்டபம், கி.பி. 1749ல் முத்துக் கருப்பணன் சேர்வை என்பவரால்  கட்டப்பட்டது.

கி.பி.1803ல் ராமநாதபுரம் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரால் மண்டபத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.பி. 1772ல், முத்து விஜய ரகுநாத சேதுபதி, திருக்கல்யாண மண்டபம் கட்டி வைத்தார். அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தின் வடபகுதி, உருத்திர கணிகையர்களால் கி.பி. 1800-1820ல் கட்டப்பட்டது.

திருக்கோயில் நித்தியபூஜை காரியங்களுக்காக பூமி நந்தவனம், எழுவடி நந்தவனம், தமிழ்ப்பாடி நந்தவனம் என மூன்று வெவ்வேறு நந்தவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடித்தபசு, மாணிக்க வாசகர் திருநாள், தைப்பூசத் திருநாள், பிட்டுத் திருவிழா, மாரியம்மன் திருநாள், சுழியல் சொக்கம்மைத் திருநாள், பங்குனி உத்திரத் திருமணம் ஆகிய விழாக்கள் இவ்வாலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு வைபவங்களுக்காக கோயில் ரத வீதிகளில் திருநாவுக்கரசு சுவாமிகள் மடம், அறுபத்து மூவர் மடம், சுந்தர மந்திரம், மல்லம்பட்டியார் மடம், துவாதசிக் கட்டளை மடம், பசு மடம் ஆகிய மடங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு இருமுறை சூரிய கதிர்கள் மூலவரின் திருமேனி மீது விழுமாறு கர்ப்பக் கிரகம் கட்டப்பட்டுள்ளது. நீத்தார்கள் ஆன்மா சாந்தி அடையும் பொருட்டு. இவ்வாலயத்தில்  மோட்ச தீபம் ஏற்றி வழிபடும் மக்கள் ஏராளம்.

இது தவிர நிலம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளில் சிக்கித் தீராத அல்லலும், மன உளைச்சலுக்கும் ஆளானவர்கள், தங்களது நிலத்து மண்ணை திருக்கோயில் தல விருட்சத்தில் போடுவார்கள். பின்னர் கோயில் வளாகத்திலிருந்து சிறிது திருமண் எடுத்து, வீட்டில் வைத்து வழிபாடு செய்வார்கள். இப்படிச் செய்வதால் நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களும், வழக்குகளும் சுமுகமாகத் தீர்ந்து போகும் என்பது இங்கு ஐதீகம்.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவில் இறைவனின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று கௌதமர்,  அகலிகை திருவுருவங்களை எதிரே எழச் செய்து, ஈசனின் திருமண நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடக்கும்.

வழக்கம்போல் இந்த பங்குனி மாதம் ஐந்தாம் நாள், கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நிகழ்ச்சியில், முக்கிய வைபவமான திருக்கல்யாண நிகழ்ச்சி, எட்டாம் திருநாளான நாளை சனிக்கிழமை (27.03.2010) மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெறுகிறது. இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் வீதி உலா கண்டு அருள் பாலிப்பர். பக்த கோடிகள் அனைவரும் இறைவனின் திருவருள் கூடி, எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ, திருச்சுழியல் தலத்திற்கு வாரீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT