முகப்பு
வெள்ளிமணி

சங்கடங்கள் நீக்கும் ஸ்ரீகூர்மாங்கர்!

அகில அண்ட சராசரங்களையும் அதிலுள்ள ஜீவ ராசிகளையும் படைத்து, காத்து ரட்சிக்கும் ஜெகன்மாதாவான ஆதி பராசக்தியின் ஆணைக்கு உட்பட்ட உபாங்க தேவதைகளே நவகிரகங்கள். பூமியில் வாழும் மனிதர்களின் நன்மை, தீமைகளை நவகி

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:26 PM
பகிர்:

அகில அண்ட சராசரங்களையும் அதிலுள்ள ஜீவ ராசிகளையும் படைத்து, காத்து ரட்சிக்கும் ஜெகன்மாதாவான ஆதி பராசக்தியின் ஆணைக்கு உட்பட்ட உபாங்க தேவதைகளே நவகிரகங்கள். பூமியில் வாழும் மனிதர்களின் நன்மை, தீமைகளை நவகிரகங்களே நிர்ணயிக்கின்றன. கிரக நிலைகளுக்கு ஏற்ப துன்பங்களை மனிதர்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டும். எனவே கிரகங்களை வழிபடுவதன் மூலம் துன்பங்களின் தாக்கத்தை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம்.

 சிவாலயங்களில் ஈசான மூலையில் நவகிரகங்களைத் தனியே வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் சனீஸ்வர பகவானுக்கு மட்டும் சில இடங்களில் தனிக்கோயில் இருப்பதையும் அங்கு கூட்டமாக மக்கள் வழிபடுவதையும் பார்க்கலாம். அவ்வகையில் சனி பகவான் தனி சந்நிதி கொண்டு அருளும் திருநள்ளாருக்கு நிகரான பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது கோவில்புரநல்லூர் என்னும் கோலியனூர். இங்கு ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வரர் (கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். "ஓம் கூர்மாங்காய நம' என்பது சனிபகவானின் அஷ்டோத்திரத்தில் காணப்படும் ஒரு நாமாவளி) என்னும் திருநாமத்துடன் தனிச் சந்நிதி கொண்டு அருள்புரிகிறார்.

 கோயிலின் அமைப்பு

 அருள்மிகு பெரியநாயகி சமேத வாலீஸ்வர சுவாமி திருக்கோயில் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது. புராண வரலாறுப்படி இவ்வாலயத்தில் உள்ள ஈஸ்வரன், வாலியினால் பூஜிக்கப்பட்டதால் வாலீஸ்வரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டார். இதுவே மருவி வாலீஸ்வரர் ஆனது. இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு, தல விருட்சம் வன்னி மரத்தோடு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஈசான்ய பாகத்தில் தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் அழிவதற்காக வாலியினால் தெற்கு முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர்.

 கல்வெட்டுச் செய்திகள்

 1897ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம், வாலீசுவரர் கோயிலில் உள்ள மடப்பள்ளி சிறுகப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயில் நுழைவு வாயிலில் உள்ல வீரபிரதாப அச்சுததேவ மகாராயரின் (விஜயநகர மன்னர்) காலத்துக் கல்வெட்டு இவ்வூர் பண்டைய காலத்தில் கோலிபுரநல்லூர் என அழைக்கப்பட்டு வந்த தகவலைப் பறை சாற்றுகிறது. ஆனால் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு இவ்வூர் அருண்மொழி தேவபுரம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது. கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டின் மூலம் சம்புவராயர் காலத்தில் இக்கோயிலுக்கு "ரிஷபதேவர்' செய்தளிக்கப்பட்ட தகவலையும் அறியலாம்.

 இவ்வாலயத்தில் வீற்றிருந்து அருள்புரியும் சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை வளம் பெறும். மேலும் இத்திருக்கோயிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டு ஸ்ரீசனீஸ்வர பகவான் கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்கு பிரவேசிக்கறார். அதை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி சனி ப்ரீதி ஹோமமும், 20ஆம் தேதி சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும், அன்னதானங்களும் நடைபெறுகின்றன. ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வர பகவானுக்கு நடைபெறும் இந்த வைபவங்களில் பங்கேற்று அளப்பரிய பயனைப் பெறலாம். குறிப்பாக ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு உகந்த பரிகாரக் கடவுளாக விளங்குகிறார் கூர்மாங்க சனீஸ்வரர்.

 சனி பகவானின் மூலம் தன் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இச்சிவாலயம் குடமுழுக்கு கண்டு சுமார் 90 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆலயம் சம்பந்தமான தகவல்கள் பெற: 9790909733/7598231159.

 தகவல், பட உதவி: கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.