முகப்பு
வெள்ளிமணி

கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

அன்னை தெரசா அவர்கள் ஒரு சமயம் தமது அனுபவங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டபோது, தம் மனதைத் தொட்ட ஒரு நிகழ்வைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்: ""வயதான ஒருவர் ஒருநாள் இரவு எங்கள் மடத்திற்கு வந்திருந்தார்.

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:32 PM
பகிர்:

அன்னை தெரசா அவர்கள் ஒரு சமயம் தமது அனுபவங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டபோது, தம் மனதைத் தொட்ட ஒரு நிகழ்வைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:

""வயதான ஒருவர் ஒருநாள் இரவு எங்கள் மடத்திற்கு வந்திருந்தார். அவரோடு அவரது மனைவியும், எட்டுப் பிள்ளைகளும் வந்திருந்தனர். அவர் என்னிடம், "நாங்கள் சாப்பிட்டுப் பல நாள் ஆயிற்று. ஏதாவது உணவு தர முடியுமா?' என்று கேட்டார். நான் அவர்களுக்கு அப்போது மடத்தில் இருந்த சாதமும், குழம்பும் கொடுத்தேன். குழந்தைகளின் தாய் அதில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். பிள்ளைகள் சாப்பிட்டதிலிருந்து, அவர்கள் உணவருந்திப் பல நாள் ஆயிற்று என்பது புரிந்தது. வெளியே சென்ற பெண் திரும்பி வந்தபோது அவரிடம் "எங்கே சென்றிருந்தீர்கள் அம்மா?' என்று கேட்டேன். அவர், "சேரியில் எனக்கு அடுத்த வீட்டில் இருந்தவர்களும் உணவருந்திப் பல நாட்களாயிற்று. அவர்களும் பசியாயிருப்பார்களே? அதனால்தான் அவர்களுக்கும் சிறிது உணவு கொடுக்கப் போயிருந்தேன்' என்றார். அவருடைய முகத்தில் உணவு கிடைத்த மகிழ்ச்சியைவிட பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சிதான் அதிகமாகக் காணப்பட்டது''.

அன்னை தெரசா தொடர்ந்து இவ்வாறு கூறினார். ""பணம் மட்டும் ஒருவனை செல்வனாக்குவதில்லை. அவன் அப்பணத்தைக் கொண்டு என்ன செய்கிறான் என்பதுதான் அவனை உண்மையில் செல்வனாக்குகிறது''

ஆம்! அன்னை கூறியதுபோல் பகிர்ந்து கொள்வதற்குத்தான் இறைவன் நமக்குச் செல்வத்தைத் தருகின்றார். செல்வத்தைத் தனக்காகவே வைத்துக் கொள்வது மாபெரும் பாவம்.

அதனால்தான் இயேசுவும்கூட, ""உங்களுடைய உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள். இற்றுப் போகாத பணப் பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை, பூச்சியும் அரிப்பதில்லை (லூக்கா 12: 33)'' என்று கூறுகிறார்.

நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் செல்வம் நம்முடைய தேவைக்கும், தேவையில் இருப்போருக்குமே ஒழிய, சேர்த்து வைப்பதற்கோ, பதுக்கி வைப்பதற்கோ அல்ல. இதைத்தான் காந்தியடிகளும், ""தன்னுடைய தேவைக்கு அதிகமாகப் பகிராமல் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்'' என்று கூறுகிறார்.

பைபிளில் இயேசு செய்த ஒரு புதுமையும் பகிர்வின் அவசியத்தை விளக்குகிறது. ஒரு சிறுவனிடம் இருந்த ஐந்து அப்பங்களையும், இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் இயேசு. எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார். (யோவான் 6:9-13)

நாமும் நமது உடைமைகளை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது ஆண்டவரின் அருள் எப்போதும் நம்மிடம் இருக்கும். ""நான் பசியாய் இருந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன். என் தாகத்தைத் தணித்தீர்கள். நோயுற்றிருந்தேன். என்னை கவனித்துக் கொண்டீர்கள். மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத்தேயு 25:35-40)'' என்று இயேசு நமக்குக் கூறுவது அப்போது உண்மையாகும்.

மேலும், ""மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும் (லூக்கா 12:48)'' என்ற பைபிளின் வார்த்தைகள் நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகிறது. அதிக செல்வம் யாரிடம் உள்ளதோ, அவர்கள் அதிகமாகவே சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதே அது! எனவே ஏழைகளுக்கு உதவும் நற்பண்பாளர்களாகத் திகழும் மனத்தை அருளுமாறு இறைவனிடம் வேண்டுவோம். அதுவே வீடும், நாடும் உயர்வதற்கான ஒரே வழியாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →