முகப்பு
வெள்ளிமணி

பலன்தரும் பரிகாரத் தலம்: சந்ததி தழைக்க வரம் அருளும் தாயார்

மகான் ஸ்ரீராமானுஜர்... துறவறம் ஏற்கும் நிகழ்வு எளிமையாக நடந்து வந்தது. துறவு வாழ்வை ஏற்றபோது, ஒவ்வொன்றாகத் துறந்து வந்தார் அவர். எனினும், ஒரு பெயரை உச்சரித்தபோது, அவர் மனம் சற்றே தயங்கி நின்றது. எல்லோ

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:59 PM
பகிர்:

மகான் ஸ்ரீராமானுஜர்... துறவறம் ஏற்கும் நிகழ்வு எளிமையாக நடந்து வந்தது. துறவு வாழ்வை ஏற்றபோது, ஒவ்வொன்றாகத் துறந்து வந்தார் அவர். எனினும், ஒரு பெயரை உச்சரித்தபோது, அவர் மனம் சற்றே தயங்கி நின்றது. எல்லோரிடமும் சொன்னார்...எல்லாவற்றையும் அடியேன் துறப்பேனாயினும், முதலியாண்டானைத் துறத்தல் இயலாது...

மகான் ஸ்ரீராமானுஜர் திருவுள்ளத்தில் அவ்வளவு முக்கியமானவராக இடம்பெற்ற அந்த முதலியாண்டான்... வேறுயாருமில்லை... ராமானுஜரின் மருமகன் தான். ஸ்ரீமத் ராமானுஜருக்கு தொண்டுபுரிந்த தாசராக விளங்கியவர் இந்த தாசரதி. ஆசார்யனுக்கு செய்யும் தொண்டே ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்று இருந்தவர்.

சுமார் 960 ஆண்டுகளுக்கு முன், புருஷமங்களம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் ஸ்ரீ

அனந்தநாராயண தீட்சிதர் } நாச்சியாரம்மாள் தம்பதி. (தற்போது இந்த கிராமம் அகரம்மேல் என்று அழைக்கப்படுகிறது) நெடுநாட்களாக அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. பகவானை விட்டால் வேறு கதி என்ன என்று அவர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். ஏழுமலையானை தரிசித்துவிட்டு, ஊருக்குத் திரும்பும் வழியில், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமானை தரிசித்து வணங்கி, அருகே இருக்கும் ராமர் கோயிலில் அன்று இரவு தங்கினர். ராமபிரான் மனத்துள்ளே நிலைத்திருக்க, உறக்கத்தில் இருந்த அம்மைக்கு, ராமபிரான் தாமே வந்து அவர்களுக்கு மகவாகப் பிறப்பதாகக் கூறினார். மனத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க, ஊர் திரும்பிய சில மாதங்களில் அவர்களுக்கு அழகான ஆண் மகவு பிறந்தது. ராமபிரானே தங்களுக்கு குழந்தையாகப் பிறந்ததாகக் கருதிய தம்பதி, குழந்தைக்கு ராமபிரானின் பெயரான தாசரதி என்ற திருநாமத்தைச் சூட்டினர்.

இவரே பின்னாளில் முதலியாண்டான் ஸ்வாமி என்று அழைக்கப்பட்டவர். ராமானுஜர் வைணவ மார்க்கத்தைப் பரப்ப நியமித்த 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஸ்ரீமத் ராமானுஜருக்கு பாதுகையாகவும், திரிதண்டமாகவும் விளங்குபவர் ஸ்ரீமுதலியாண்டான்.

நசரத்பேட்டையை அடுத்த அகரம்மேல் கிராமத்தில் சாலையின் வலப்புறத்தில் பார்த்தால் அழகான ராஜகோபுரம் தெரிகிறது. முதலில் வெளிப்புற அனுமன் சந்நிதி இருக்கிறது. இங்கே அனுமன்

சந்திதி தனியாக இருக்க, ஸ்ரீராமர், சீதா, லக்ஷ்மணர் சகிதராக சந்நிதி கொண்டுள்ளார்.

இந்த ராமபிரானுக்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. ஆசார்யர் ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமியால் திருவாராதனம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்ட ராமபிரான் இவர் என்பதே அது.

ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமியின் அவதாரத் தலமான இங்கே, சித்திரை மாதம் பத்து தினங்கள் உற்ஸவம். புனர்ப்பூச நட்சத்திரத்தில் ஸ்வாமியின் சாற்றுமுறை நடக்கிறது. ஆசார்யரான ஸ்ரீமத் ராமானுஜரின் பரிபூரண அருள் பெற்ற இந்த ஸ்வாமியை தரிசித்தால், நீண்ட ஆயுள் பெறலாம் என்பது இங்கே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் தலபுராணம், மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது.

உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது மகாபாரதப் போர். தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான போர். இதில், சூழ்ச்சிகளும் எதிரியை வீழ்த்தும் உபாயங்களும் நிறைந்திருந்தது. ஆசார்ய துரோணர், பாண்டவர் படைகளை சிதறடித்துக் கொண்டிருந்தார். துரோணரை வீழ்த்தவில்லை என்றால் போர் முடிவுக்கு வராது என்பதை கண்ணன் அறிவான். துரோணரை வீழ்த்துவது எப்படி? துறவு மன நிலையில் இருந்த ஆசார்ய துரோணர், பிள்ளைப் பாசத்தை மட்டும் கைவிட்டாரில்லை. அதையே உபாயமாகக் கொண்டான் கண்ணன். அதன்படி, துரோணரின் பிள்ளையான, அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என்ற சொற்கள் துரோணரின் காதுகளில் விழும்படி தருமனிடம் உரக்கச் சொல்லச் சொன்னான் கண்ணன். காரணம், தர்மன் சத்தியம் தவறாதவன். அவன் வாக்கை துரோணர் நம்புவார் என்பதுதான். ஆனால், தர்மன் தயங்கினான். அதற்காகவே, அசுவத்தாமன் என்ற பேருள்ள யானையை பீமன் கொன்றுவிட்டு, அதைச் சொல்லச் சொன்னான். தருமனும், கொல்லப்பட்டது அசுவத்தாமன் யானை எனும் பொருள்பட, அசுவத்தாமா ஹத: குஞ்சர: என்றான். குஞ்சர: என்று தருமன் சொல்லும்போது, கண்ணன் பலமாக சங்கினை ஊதி, யானை என்கிற சொல் துரோணரின் காதுகளில் விழாமல் பார்த்துக் கொண்டான். முடிவு துரோணர் கொல்லப்பட்டு, பாண்டவர் பக்கம் வெற்றி சேர்ந்தது.

ஆனால், இந்த வெற்றியில் தர்மனுக்கு எள்ளளவும் மகிழ்ச்சி இருக்கவில்லை. மன நிம்மதி இழந்து தவித்தான். தாம் பொய் சொல்லி, துரோகம் இழைத்ததால், துரோணர் வீழ்த்தப்பட்டதாகவே எண்ணினான் தர்மன். தாம் மன நிம்மதி பெற என்ன செய்ய வேண்டும் என்று நாரத மகரிஷியிடம் வினவினான். அவர்களது துக்கத்தைக் கேட்ட நாரதர், புருஷ மங்களம் என்ற கிராமத்தில் அமர்ந்து, தர்ம சத்ர யாகம் செய்தால் பிராயச்சித்தம் ஏற்பட்டு, மன நிம்மதி கிட்டும் என்று உபாயத்தைக் கூறினார்.

அவ்வாறே பாண்டவர்கள் இங்கே அமர்ந்து யாகத்தைச் செய்தனர். யாகத்தின் முடிவில், எப்படி யானையைக் கொன்று அதன் மூலம் துரோணர் கொல்லப்பட்டாரோ, அந்த எண்ணம் போகும் வகையில், கண்ணன் பச்சை யானையின் மீது அமர்ந்து, ருக்மிணி சத்யபாமா சகிதனாகத் தோன்றி அவர்களுக்கு ஆசியளித்து, மன நிம்மதி பெறச் செய்தார். அதனால், இந்தப் பெருமாள் பச்சைவாரணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். வாரணம் என்றால் யானை.

இன்றும் இந்தக் கோயிலுக்கு நிம்மதி தேடி வருவோருக்கு பச்சைவாரணப் பெருமாள் மன நிம்மதி அளித்து, வாழ்க்கையை இனிதாக்குகிறார். பெருமாள் யானை மீது அமர்ந்து காட்சியளித்ததால், அதை நினைவுறுத்தும் வண்ணம் கோயிலின் கொடிமரத்தின் கீழே யானை ஒன்று உள்ளது வித்தியாசமான காட்சி. இதை வேறு எங்கும் காணமுடியாது.

குழந்தைச் செல்வம் அருளும் தாயார்:

இங்கே எழுந்தருளும் தாயார் அமிர்தவல்லித் தாயார். இந்தத் தாயார் சந்தான பாக்கியம் அருள்பவர் என்பது விசேஷம். மணமாகியும் வருடக் கணக்கில் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியருக்கு எளிமையான பரிகாரம் இந்தத் தலத்தில். இங்கே தாயார் சந்நிதி வாசல் படியில், தொடர்ந்து ஆறு வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில், தூய பசு நெய்யால் அந்த பீடத்தை மெழுகி, சர்க்கரைப் பொடியால் கோலம் இட்டால் சந்தான பாக்கியம் சாத்தியம் என்பது பலரது வாழ்வில் நிகழ்ந்த அனுபவ உண்மை.

இருப்பிடம்: சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது அகரம்மேல் கிராமம். கிராம பேருந்து நிறுத்தத்தின் வலப்புறத்தில் உள்ளது இந்தக் கோயில்.

தகவலுக்கு: 94445 58608.

முழு கட்டுரையைப் படிக்க →