முகப்பு
வெள்ளிமணி

ராமர் வழிபட்ட இராமங்கேஸ்வரர்!

அருளோடு பொருளும் அள்ளித் தரும் திருத்தலங்கள் சோழ நாட்டில் எண்ணற்றவை. அவற்றுள் ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலமாகப் பேசப்படுவது இராமனதீஸ்வரம். ""இராம நந்தீஸ்வரம்'' என்று முன்பு அழைக்கப்பட்ட இந்தத் தலம், முடிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:52 PM
பகிர்:

அருளோடு பொருளும் அள்ளித் தரும் திருத்தலங்கள் சோழ நாட்டில் எண்ணற்றவை. அவற்றுள் ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலமாகப் பேசப்படுவது இராமனதீஸ்வரம். ""இராம நந்தீஸ்வரம்'' என்று முன்பு அழைக்கப்பட்ட இந்தத் தலம், முடிகொண்டான் ஆற்றின் மீது அமைந்துள்ளது. நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் திருப்புகலூருக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம்.



தல வரலாறு

பரமேஸ்வரனின் அதிதீவிர பக்தனான ராவணேஸ்வரனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் ராமபிரானை பற்றிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் விலக வேண்டி, சேதுக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் ராமர். இதுவே "இராமேஸ்வரம்' ஆனது. அதுபோன்று இந்தத் தலத்திலும் ராவண சம்ஹார பாவம் தீர ராமன் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. ராமனும், நந்தியும் இங்கே ஈசனை வழிபட்டதன் காரணமாக இந்தத் தலத்துக்கு இராமநந்தீஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

துர்வாச முனிவர் இங்கே தவம் புரிந்ததால் தவ பூமியாகத் திகழ்கிறது. ராமபிரான் இத்தலத்துக்கு வந்தபோது, நந்தி தடுத்ததாகவும், பின் அம்பாள் நந்தியை தன் இடக்கரத்தில் பிடித்துக்கொண்டு காட்சி தந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக இத்தல உற்ஸவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் விக்கிரகத்தில், அம்பாளின் இடது கரத்தில் நந்தி உள்ளதைக் காணலாம். இந்த விக்கிரகம் பாதுகாப்பு காரணமாக திருப்புகலூர் சிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் இது. ரகுராமர் இங்கே தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி சிவபெருமானை வழிபட்டுள்ளார். இதனால் ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் "இராமதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. மணிகங்கை என்றொரு தீர்த்தமும் இத்தலத்துக்கு உண்டு.

திருக்கண்ணபுரம் ஊரின் சைவ ஆலயமாக இந்த இராமனதீஸ்வரமும், வைணவாலயமாக ஸ்ரீசெüரிராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

ஆலய அமைப்பு

பேருந்து சாலையின் தென்புறமாய் முதலில் இராமதீர்த்தக் குளம் அமைந்திருக்க, எதிரே தோரண வாயிலுடன் ஆலயம் திகழ்கிறது. வாயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கின்றார். ஒரே பிராகாரம் கொண்ட விசாலமான ஆலயம். ஆலயத்தின் மையமாக அமைந்த அகண்ட மேடை. அதன் மேற்குப் பகுதியில் சுவாமி சந்நிதியும், வட புறத்தில் அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தென்முகம் கொண்டது அம்பாள் சந்நிதி. அதனுள் ரம்மியமாய் காட்சி தருகின்றாள் அன்னை ஸ்ரீசூளிகாம்பாள். "சரிவார்க்குழலி' என்றும், "கருவார்க்குழலி' என்றும் அழைக்கப்படுகிறாள். கரத்தினில் ருத்ராட்ச மாலை ஏந்திக் காணப்படுகிறாள்.

பின், சுவாமி சந்நிதி அடையும் முன் இரண்டாம் வாயிலின் மேல் கயிலை தரிசனம் காண்கின்றோம். உள்ளே பெரியதொரு மகா மண்டபம். அடுத்து இடை மண்டபம். பின்னர் ஈசன் கருவறை. கருவறையுள் பளபளக்கும் கல்லாலான பச்சை இழையோடும் பாண லிங்கம் வட்ட ஆவுடை நடுவே உள்ளது. இவர் இராமநாதீஸ்வரர் என்றும் இராமலிங்கேஸ்வரர் என்றும் போற்றப்படுகின்றார். பக்தர்களை ஈர்க்கும் வண்ணம் ஜோதி வடிவாய் ஜொலிக்கின்றார். ஆலய வலம் வருகையில் கன்னி மூலையில் தனிச் சந்நிதியில் கணபதியையும், வருண பாகத்தில் கந்தனையும், வாயு திக்கில் கஜலக்ஷ்மியையும் வணங்கி மகிழ்கின்றோம்.

கோஷ்ட மாடங்களில் வழக்கமான மூர்த்தங்கள் அமைந்துள்ளன. சுவாமி கருவறை விமானம் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கின்றது. தல விருட்சமாக மகிழமரம் மணம் பரப்புகின்றது.

திருப்பணி

திருப்பணி கண்டு பல காலம் ஆகிவிட்டதால் தற்போது திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாம் துன்பங்களிலிருந்து விடுபட சிறந்த சிவத்தலமாக இந்த இராமனதீஸ்வரம் திகழ்கிறது.

திருப்பணித் தகவல் அறிய:

ஸ்ரீசூளிகாம்பாள் உடனுறை இராமநாதீஸ்வரர் ஆலயம்,

வேளாக்குறிச்சி ஆதீனம்,

திருக்கண்ணபுரம் (வழி) திருப்புகலூர்-609704

முழு கட்டுரையைப் படிக்க →