பலன்தரும் பரிகாரத் தலம்: முழங்கால் வலி நீக்கும் முருகன்!
மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரய்யா திருக்கோயில் அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காகவே சேனாதிபதியாக முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஜோதியாகத் தோன்றி, ஆறு முகம் கொண்ட குழ
மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரய்யா திருக்கோயில்
அசுரன் சூரபதுமனை அழிப்பதற்காகவே சேனாதிபதியாக முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஜோதியாகத் தோன்றி, ஆறு முகம் கொண்ட குழந்தையாகி, குமரனாகி, தேவர்களின் சேனைக்கு அதிபதியாகி, அன்னை பராசக்தியிடம் இருந்து சக்தி ஆயுதமாக வேல் பெற்று அதன் துணை கொண்டு அசுரனை வதம் செய்தார் குமரப் பெருமான்.
இது கந்த புராணம் கூறும் கந்தனின் கதை. ஆனால், மேலக்கொடுமலூரில் உள்ள ஓர் ஆலயத்தில், தல புராணமாக வித்தியாசமான ஒரு கதை சொல்லப்படுகிறது. இதுவே இந்த ஊருக்கு பெயர் வந்ததன் காரணத்தையும் கூறுகிறது.
முருகப் பெருமான், அன்னையிடம் வேல் பெற்றுக்கொண்டு மட்டும் போருக்குச் செல்லவில்லை. இன்னும் பல சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பெற்றார். அதில் ஒன்று மழு என்ற ஆயுதம். இந்த ஆயுதத்தால் அசுரனின் தலையைக் கொய்து, அதை எடுத்து வரும் வழியில், மாலை வெகு நேரம் ஆனதால், ஓர் இடத்தில் தங்க நேர்ந்தது. அங்கே முனிவர்கள் தவம் செய்துவந்தனர். அவர்களுக்கு காட்சி தந்து அருளினார் குமரப் பெருமான். மேலும், சூரியன் மேற்கில் மறைந்த பின்னே முனிவர்களுக்கு மேற்கு முகமாக நின்று காட்சி அளித்தார். இவ்வாறு, அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தைக் கேட்டுப் பெற்றதை நினைவுகூரும் வகையில் "கொடுமழு ஊர்' என்று அழைக்கப்பட்டது இந்த ஊர். மேலும் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருந்ததால், மேலக் கொடு மழூர் என்று ஆனது. இதுவே பின்னாளில் மேலக்கொடுமலூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இத்தல இறைவன் குமரனை, பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர், எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர் உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர்.
சூர்யாஸ்தமனத்தில் அபிஷேகம்:
மாலை நேரத்தில் சூரியன் மேற்கே மறைந்த பிறகே இந்தத் திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வார நாட்களில் திங்கள், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் மாதக் கார்த்திகை நாட்களிலும் சம்பந்தப்பட்ட நட்சத்திரம் இரவு நேரத்தில் வருவதை அனுசரித்து அனைத்து அபிஷே ஆராதனைகளும் நடக்கின்றன. இந்தத் திருத்தலத்தில் நடைபெறும் 33 அபிஷேகங்களையும் இரவு நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும். பகலில் அபிஷேகம் எதுவும் நடப்பதில்லை. மா, பலா, வாழை இவை மூன்றும் இணைந்த முக்கனிகளால் ஆன முப்பழ பூஜை வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும்.
ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழா ஆகியவற்றின் போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். பாத யாத்திரைக் குழுக்கள், மாத கார்த்திகை அபிஷேகத்துக்கு பாத யாத்திரையாகவே வந்து 33 அபிஷேகங்களையும் செய்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது. சுவாமிக்கு அன்ன நைவேத்தியம் கிடையாது என்பதால் இக்கோயிலில் யாரும் பொங்கல் வைப்பதில்லை. பழங்கள், தேன் கலந்த தினைமாவு, வெல்லம் கலந்த பாசிப் பருப்பு, கைக்குத்தல் அரிசி ஆகியவையே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
தல விருட்சம்:
குமரக் கடவுளால் பல் துலக்கி வலதுபுறம் வீசப்பட்ட குச்சியே பெரிய அளவில் தல விருட்சமாக(உடைமரமாக)விளங்குகிறதாம். இதன் பெருமையை ""விழுந்த உடை வேரூன்றி வெயில் முகம் காணாமல் தளிந்த உடைக்கீழிருக்கும் தங்கக் குமரையாவே'' என்று ஜவ்வாதுப் புலவர் பாடியுள்ளாராம்.
இந்தக் கோயிலில் மூலஸ்தானம் சீரமைத்துக் கட்டப்பட்டு, 1926ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மன்னர் ராமநாத சேதுபதி தலைமையில் 1978ஆம் ஆண்டும் பின்னர் 2004ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
முழங்கால் வலி நீக்கும் அற்புதம்:
தீராத முழங்கால் வலி உடையவர்கள் இக்கோயிலுக்கு வந்து மஞ்சள் பூசப்பட்ட உடங்கால்களை (கவட்டையுடன் கூடிய உடைமரக் கால்கள்) வாங்கி, பக்தி பூர்வமாக குமரனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்
கடன் செலுத்தினால் முழங்கால் வலி நீங்கும். வயிற்றுவலி, நெஞ்சுவலி உள்ளவர்கள் மாவிளக்கு வைக்கின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் 48 நாள் தூய விரதமிருந்து தலவிருட்சமாக உள்ள உடைமரத்து இலையை சாப்பிட்டு, குமரனருளால் குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுகிறார்கள்.
இருப்பிடம்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள இத்திருக்கோயிலுக்கு மதுரையில் இருந்து வருபவர்கள் பரமக்குடியில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள நகரப் பேருந்துகள் மூலமாக செல்லலாம். பேருந்து வசதி நிறைய உண்டு. அபிராமத்தில் இருந்து 8 கி.மீ தொலைவு.
தரிசன உதவிக்கு: அறங்காவலர்: ஆனந்த நடராஜன்- 98434-30230.