முகப்பு
வெள்ளிமணி

செயல் வீரர்களாக மாறுவோம்!

நம்பிக்கை உண்டு என்று கூறும் ஒருவன் அதைச் செயல்களில் காட்டாவிட்டால், அதனால் வரும் பயன் என்ன? இறைவன் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் அவருக்கு ஏற்புடைய செயல்களைச் செய்யாவிடில் அந்த நம்பிக்கை வீணானதே; நம் மு

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

நம்பிக்கை உண்டு என்று கூறும் ஒருவன் அதைச் செயல்களில் காட்டாவிட்டால், அதனால் வரும் பயன் என்ன? இறைவன் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் அவருக்கு ஏற்புடைய செயல்களைச் செய்யாவிடில் அந்த நம்பிக்கை வீணானதே; நம் முதுபெரும் தந்தையான ஆபிரகாம் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் என்பதை நாம் தொடக்க நூலில் காணப்படும் நிகழ்ச்சியிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

""தன்னுடைய முதிர்வயதில் பிறந்த ஒரே மகன் ஈசாக்கை தனக்கு பலியிடுமாறு ஆண்டவர் அவரிடம் கேட்டபோது "ஏன் ஆண்டவரே! "உன்னுடைய சந்ததியைக் கடல் மலையென பெருகச் செய்வேன்' என்று கூறிய உமது வாக்குறுதிக்கு மாறானதொன்றை என்னிடம் கேட்கிறீரே'' என்று வாக்குவாதம் பண்ணாமல், தன்னுடைய மகனைக் கூட்டிக்கொண்டு மோரியா நிலப்பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்றார். ஈசாக்கை பலியிடுமாறு தன்னுடைய கத்தியைக் கையிலெடுத்த அதே நேரத்தில், ஆண்டவர் அவரைத் தடுத்து நிறுத்தினார். அங்கே மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஆட்டினை பலியாகக் கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்த ஆபிரகாமின் நம்பிக்கையை வியந்து பாராட்டிய ஆண்டவர் அவரை மென்மேலும் ஆசீர்வதித்தார் (தொடக்க நூல் 22:1-14)''.

தன்னுடைய ஒரே மகனையும் இறைவனுக்குப் பலியிடத் துணிந்த ஆபிரகாம் தன்னுடைய இறை நம்பிக்கையை செயலில் காட்டினார் அல்லவா? நாமும் இறைவனிடம் கொண்டுள்ள நம்பிக்கையை சக மனிதர்களிடம் காட்டும் பரிவின் மூலம் நிரூபித்தல் அவசியம். யாக்கோபு எழுதிய திருமுகத்தில் இதையே காண்கிறோம். ""ஒரு சகோதரன் அல்லது சகோதரி போதிய உடையும், அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குள் தேவையானவை எவற்றையும் கொடாமல், உங்களுள் ஒருவன் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள் என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் (யாக்கோபு 2:15-17)''.

இதனாலேயே உலகிலுள்ள எல்லா மதங்களும் இறை வழிபாட்டுக்குரிய  ஆலயங்களைக் கட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், பல்வேறு தொண்டு நிறுவனங்களையும் நிறுவி துன்பத்தில் உழலும் எளிய சகோதர, சகோதரிகளையும், முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற பெண்கள் அனைவரையும் அரவணைத்துக் காக்கும் சமூகப் பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றன. ஏனெனில் மக்கள் பணியே மகேசன் பணி.

நாமும் நம்மால் இயன்ற அளவில் சக மனிதர்களிடம் பரிவும், பாசமும் காட்டுதல் அவசியம். பிறந்த நாள், திருமண நாள் என்று கொண்டாடும் நேரங்களில் வசதியுள்ள உறவினர்களையும், நண்பர்களையும் விருந்துக்கு அழைத்து மகிழ்விக்கும் அதே வேளையில், துன்பப்படும் ஏழை எளிய மக்களையும் நினைவில்கொண்டு ஏதேனும் ஒரு ஆதரவற்ற இல்லம் அல்லது முதியோர் காப்பகம் சென்று அங்குள்ளோர் அகமும் உடலும் குளிரும்படி பொருளுதவி செய்து மகிழலாம்.  வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவீசும் வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாக மட்டும் இல்லாமல் செயல் வீரர்களாகவும் மாறுவோமா?

முழு கட்டுரையைப் படிக்க →