முகப்பு
வெள்ளிமணி

தண்டனையிலிருந்து மீளுவோம்!

இறைவன் தடுத்ததை அறியாது உண்கிறோம். ஒரு சிலர் தெரிந்தே செய்கின்றனர்.

வெள்ளிமணி

தண்டனையிலிருந்து மீளுவோம்!

இறைவன் தடுத்ததை அறியாது உண்கிறோம். ஒரு சிலர் தெரிந்தே செய்கின்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

இறைவன் தடுத்ததை அறியாது உண்கிறோம். ஒரு சிலர் தெரிந்தே செய்கின்றனர். இது அலட்சியத்தாலும், குருட்டு தைரியத்தாலும் ஏற்படுகிறது. இறைவன் தண்டிப்பான் என்கிற அச்சமிருந்தால் இப்படி ஒரு அசட்டு தைரியம் ஏற்படுமா?

""இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து நடத்தும் வியாபாரம் மூலமன்றி, மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ண வேண்டாம் (அல்குர் ஆன் 4:29)''.

""பத்து திர்ஹம் கொடுத்து வாங்கப்பட்ட ஒரு துணியில், ஒரு திர்ஹம் (ஹராமாக) தடுக்கப்பட்டதாக இருந்து, அத்துணியை உடுத்தித் தொழுதால், இறைவன் அத்தொழுகையை ஏற்றுக்கொள்ள மாட்டான் (நபிகள்

நாயகம் (ஸல்)''.

""தடுக்கப்பட்ட உணவை உண்பவர், இறைவனின் உண்மையான அடியாரைப் போன்று தன்னைக் கட்டிக் கொண்டு, நல்விளைவை ஏற்படுத்தும் புனிதத் தலங்களுக்குச் சென்று, ஆகாயத்தை நோக்கி,கைகளை உயர்த்தி, இறைவனை இறைஞ்சினாலும், அது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார். நூல்: முஸ்லிம்.

பல்கு நாட்டு பேரரசர் இப்ராஹீம் இப்னு அத்ஹம் நாட்டைத் துறந்து இறைவனை வணங்க முற்பட்டார். அவர் ஒரு நாள் மக்கா நகர் கடைவீதியில் சிறிது பேரீச்சம் பழங்களை விலைக்கு வாங்கினார். அப்பொழுது எதிர்பாராது இரண்டு பழங்கள் அவரது கால்களுக்கிடையில் விழுந்துவிட்டன. தான் வாங்கிய பழத்திலிருந்துதான் அப்பழங்கள் விழுந்துவிட்டதாக எண்ணி அதனை எடுத்து

உண்டும் விட்டார்.அதன்பின் சில காலம் கழித்து இவர் பைத்துல்முகத்தஸில் உள்ள புனிதப் பகுதிக்குள் வணங்குவதற்காக சென்றார். அங்கு அஸர் (மாலை நேரத்) தொழுகைக்குப் பின், இரவு முழுவதும் வானவர்கள் அங்கு வந்து தங்கி வணக்கம் புரிவதில் ஈடுபடுவது வழக்கம். அதனால் அங்கு இருப்பவர்களை நிர்வாகிகள் வெளியேற்றி விடுவார்கள். இறை நேசர் அங்கு மறைந்திருப்பதைக் கண்ட வானவர் ஒருவர், ""இங்கு யாரோ ஒரு மனிதர் உள்ளார்போல் தெரிகிறதே'' என்றார். ""பல்கு நாட்டு பேரரசர் இப்ராஹீம் இப்னு அத்ஹம் போல் தெரிகிறதே'' என்றார் மற்றொரு வானவர்.

""ஆம். அவரேதான். இந்த மனிதரின் செயல்கள் அனைத்தும், தினமும் ஆகாயத்தை நோக்கி மேலே சென்று இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்'' என மூன்றாம் வானவர் விளக்கினார். ""ஆம். உண்மைதான். ஆனால் ஓராண்டு காலமாக அவருடைய வணக்க வழிபாடுகளை இறைவன் ஏற்கவில்லை. காரணம், இந்த இரண்டு பேரீச்சம் பழங்கள்தான். மக்கா நகரில் இவர், தனது பேரீச்சம்பழம் என எண்ணி, மற்றவரின் பழத்தை பூமியிலிருந்து எடுத்து உண்டுவிட்டார்'' என நான்காம் வானவர் கூறிமுடித்தார்.

வானவர்களின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்த இறைநேசர், பேரீச்சம்பழம் கடைக்குச் சென்று நடந்ததைக் கூறினார். கடை உரிமையாளரும் அவரை மன்னித்துவிட்டதாகச் சொன்னார். அதன்பின்னரே தனது பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை வானவர்கள் மூலம் அறிந்தார் அந்த இறைநேசர். (ஆதாரம்: "கல்யூபி ஹலால்-ஹராம்' பக்:39).

மற்றவருக்குச் சொந்தமான சாதாரண இரண்டு பேரீச்சம் பழங்கள் உண்டதால் இவ்வளவு பெரிய தண்டனை. எனவே நாமும் தண்டனைக்குரிய தவறு செய்வதைத் தவிர்த்துவிட்டு இறை தண்டனையிலிருந்து மீளுவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →