முகப்பு
வெள்ளிமணி

சிறியதொரு தீப்பொறி!

கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபிள் ஆன்மாவை உயர்த்தும் இறையியல் தத்துவங்களை மட்டும் உள்ளடக்கியதன்று. மாறாக, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் தத்துவங்களையும் கொண்ட அரிய பெட்டகமாகத் திகழ்கிறது. இத

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:

கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபிள் ஆன்மாவை உயர்த்தும் இறையியல் தத்துவங்களை மட்டும் உள்ளடக்கியதன்று. மாறாக, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் தத்துவங்களையும் கொண்ட அரிய பெட்டகமாகத் திகழ்கிறது. இத்தகைய ஒப்பற்ற உண்மைகளைக் கொண்ட பகுதிதான் இயேசு கிறிஸ்துவின் சீடரான யாக்கோபு அக்கால யூதக் கிறிஸ்துவர்களுக்கு எழுதிய திருமுகம் (கடிதம்). இது புதிய ஏற்பாட்டு நூல்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

 ஞானியாகவும், தூயவராகவும் ஒருவர் வாழ நாவடக்கம் மிகத் தேவையான ஒன்று. எத்துணை வலிமை வாய்ந்த குதிரைகளாய் இருப்பினும் சிறியதொரு கடிவாளத்தை வாயில் போட்டு அடக்கிவிட முடிகிறது. எவ்வளவு பெரிய கப்பலாய் இருந்தாலும், கடுங்காற்றினால் அடித்துச் செல்லப்படும் அபாயத்தில் இருந்தாலும், கப்பலோட்டும் மாலுமிகள் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர். மனித நாவும் அதைப் போல ஒரு சிறிய உறுப்புதான். ஆயினும் ஒருவரை சிறந்த பண்பாளராக மதிப்பிட உதவுவது இந்தச் சிறிய நாவு பேசும் பேச்சுதான்.

 ""சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டையும் கொளுத்தி அழித்து விடுவது போன்றே, மனித உறுப்புகளுள் சிறிய உறுப்பான நாவும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையெனில் உடல் முழுவதையும் கறைப்படுத்தி விடுகிறது. (யாக்கோபு 3:5,6).

 காட்டில் வாழ்வன, பறப்பன, தரையில் ஊர்வன, கடலில் வாழ்வன என அனைத்து உயிரினங்களையும் அடக்கி வாழும் மனிதனுக்கு நாவை அடக்க முடிவதில்லை. சாவை விளைவிக்கும் அளவுக்கு நஞ்சு நிறைந்தது நாவு உதிர்க்கும் கடுஞ்சொற்கள். (யாக்கோபு 3:8).''.

 எனவேதான் தெய்வப்புலவரான திருவள்ளுவரும் "யாகாவாராயினும் நாகாக்க' என்றார்.

 போற்றுதலும் தூற்றுதலும் ஒரே நாவிலிருந்துதான் வருகின்றன. ஆண்டவராம் இறைவனைப் போற்றுவதும், நாவுதான். அந்த இறைவன் தம் சாயலாகப் படைத்த மனிதனைத் தூற்றுவதும் அந்த நாவே. ஒரே ஊற்றினின்று உப்பு நீரும், நன்னீரும் வருதல் இயற்கைக்கு மாறானதன்றோ! இனிமையான சொற்களைப் பேசும் நாவும் கடுஞ்சொற்களைப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.

 நானிலம் படைத்த நம் பெருமானை நாவால் நாமும் நாளும் போற்றுவோம். இனிய உளவாக இன்னாத சொற்களை என்றுமே தவிர்க்க முயற்சி செய்வோம். துயருற்றோர் துன்பம் போக்கும் ஆறுதல் மொழிகள் கூறி நிலையற்ற இவ்வுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிட உதவுவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →