பலன்தரும் பரிகாரத் தலம்: மன நோய் தீர்க்கும் குணசீலம்!
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில் திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி குணசீலருக்கு, ஓர் எண்ணம் உதித்தது. ""பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்று வருகிறோமே... ஏன் பெருமாளை
திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி குணசீலருக்கு, ஓர் எண்ணம் உதித்தது. ""பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்று வருகிறோமே... ஏன் பெருமாளையே நம் ஆசிரமத்தில் எழுந்தருளச் செய்யக் கூடாது?'' - இந்த எண்ணம் அலைமோத பெருமாளை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது தவத்துக்கு இரங்கிய பெருமாள் காட்சி தந்து வேண்டும் வரம் கேட்டார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் குணசீலர். அவர் விருப்பப்படி பெருமாள் அங்கு எழுந்தருள, அந்த இடம் முனிவரின் பெயரால் குணசீலம் என்றே ஆனது.
ஒரு முறை, ரிஷி குணசீலரின் குரு, குணசீலரைத் தன்னுடன் இருக்குமாறு அழைத்தார். அவருக்கு மிகுந்த மனக்குழப்பம். தவமிருந்து பெற்ற பெருமாளை விட்டுவிட்டுச் செல்வதா அல்லது குருவின் கட்டளையை மறுப்பதா? இப்படிப்பட்ட மனக் குழப்ப நிலையில், குருவுடன் இருக்குமாறு பெருமாள் ஒரு மருந்தைச் சொன்னார். அதன் பேரில் அவர் குருவிடம் செல்லும்போது, தன் சீடன் ஒருவனிடம் பெருமாளை ஒப்படைத்து, தினமும் பூஜை செய்துவரக் கட்டளையிட்டார். சீடனும் அதைக் கருத்தில் ஏற்று செய்துவந்தான். காவிரி பாயும் அந்த வனப்பகுதியில், நெடுகிலும் காடாக இருக்க, காவிரிக் கரையில் குணசீலம் இருந்தது. ஒரு முறை வன விலங்குகள் ஆசிரமத்தைச் சூழ்ந்து கொள்ளவே, அவற்றால் மிகவும் அச்சமுற்ற சீடன், உயிருக்குப் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னர் ஆசிரமம் கேட்பாரற்றுப் போனது. நாளடைவில் ஆசிரமத்தில் புதர் மண்டி, விக்ரஹத்தை புற்று மண் மூடியது.
மன்னர் ஞானவர்மன். பகவத் அனுபவத்தில் ஞானம் பெற்ற அவரின் ஆட்சியில் ஒரு நாள்... அவரது அரண்மனைப் பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றன. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றுவந்த பசுக்கள் மட்டும் பால் குறைவாகக் கொடுத்தன. ஒரு நேரம், அரண்மனைப் பாத்திரங்களில் வைத்திருந்த பால் காணாமல் போக, குழப்பமடைந்த மன்னனுக்கு அசரீரி வாக்காக பெருமாள் தன்னை உணர்த்தினார். ஒரு பெரியவரின் வழிகாட்டுதல்படி, புற்று மண்ணுக்கு பாலபிஷேகம் செய்த மன்னனுக்கு பெருமாள் தன்னை வெளிக்காட்டினார். அதன்பின்னர் மன்னன் அங்கே அழகிய ஒரு கோயிலைக் கட்டினான். இவ்வாறு குணசீலம் கோயில் அழகுற எழும்பியது.
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில், முசிறிக்கு சற்று முன்னர் சுமார் 25 கி.மீ. தொலைவில், காவிரியின் மறு கரையில் உள்ளது கோயில். ஆலயத்தின் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம். அதில் அனுமன் புடைப்புச் சிற்பமாகத் திகழ்கிறார். கோயில் அழகிய கோபுரம், கொடிமரம், தீர்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்துடனும் திகழ்கிறது. இங்கே ஒரு விசேஷ அம்சமாக, வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த ஸ்ரீவிகனஸருக்கு தனி சந்நிதி உள்ளது. ஆவணித் திருவோண நாளில் இவர் புறப்பாடு கண்டருள்கிறார். இங்கே பெருமாளுக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. தாயாருக்கு இல்லை. வேறு பரிவார மூர்த்தங்களும் இல்லை. மூலவர் சாளக்ராம மாலை அணிந்து அழகாகக் காட்சி தருகிறார். திருப்பதி வேங்கடேசரைப் போன்ற உருவம். உற்ஸவர் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியை வலம் வரும்போது, கோஷ்ட தெய்வங்களாக நவநீத கிருஷ்ணர், நரசிம்மர், வராஹர், யக்ஞநாராயணர் ஆகியோர் உள்ளனர். சந்நிதி வலம் வரும்போது உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் இருப்பதைக் காணலாம்.
இங்கே தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. திருமஞ்சனம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.
மனக்குழப்பத்துக்கு மருந்து: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபடவேண்டிய தலம் இது. இங்கே, மனநோயாளிகள் தங்கியிருக்க இலவசமாக செயல்படும் மறுவாழ்வு மையம் உள்ளது.
காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.
மேலும், கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் ச்ருத தேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கே தங்கள் குறை நீங்கப் பெற்றுள்ளனர். இவ்வாறு, பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் மன நிம்மதிக்காகவும், நிவாரணம் பெறவும் பெருமாளை வேண்டிக் கொள்கின்றனர்.
கோயில் திருவிழாக்கள்: சித்ரா பெüர்ணமி, தெப்பத் திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷமானவை.
ஒவ்வொரு மாத திருவோணத்திலும் கருடசேவையில் பெருமாளை தரிசிக்கலாம். புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் குணசீலருக்கு பெருமாள் காட்சி தந்த வைபவம் சிறப்பாக
நடக்கிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30-12.30 வரை, மாலை 4-8.30 வரை.
தகவலுக்கு: 04326 275210 / 275310