சர்ப்பதோஷம் நீங்கும்! கோடகநல்லூர் ஸ்ரீபிருஹன் மாதவப் பெருமாள் திருக்கோவில்!
பலன்தரும் பரிகாரத் தலம்: சர்ப்பதோஷம் நீங்கும்! கோடகநல்லூர் ஸ்ரீபிருஹன் மாதவப் பெருமாள் திருக்கோவில்! முனிவர் ஒருவர். காட்டிலே குடில் அமைத்து தவத்தில் ஈடுபட்டிருந்தார். சுற்றுப்புறம் அவர் தியானத்தில் ச
பலன்தரும் பரிகாரத் தலம்: சர்ப்பதோஷம் நீங்கும்! கோடகநல்லூர் ஸ்ரீபிருஹன் மாதவப் பெருமாள் திருக்கோவில்!
முனிவர் ஒருவர். காட்டிலே குடில் அமைத்து தவத்தில் ஈடுபட்டிருந்தார். சுற்றுப்புறம் அவர் தியானத்தில் சிறிதும் சலனத்தை ஏற்படுத்தவில்லை. முனிவருக்கு உதவியாக அவரின் மகனும் உடன் இருந்தார். ஒரு நாள்... விறகு பொறுக்குவதற்காக மகன் சென்றுவிட்ட அந்த நேரத்தில் ஓர் அரசகுமாரன் அங்கே வந்தான். வேட்டையாடிய களைப்பில் தண்ணீரைத் தேடி அந்தக் குடிலுக்கு வந்த அரச குமாரன், முனிவர் தவத்தில் இருப்பது பற்றி அறியவில்லை. எத்தனையோ முறை அவர் கவனத்தைக் கவர அழைத்துப் பார்த்தான். ஆனால் வீண்முயற்சியானது.
அரச குமாரனுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னை அவமதிப்பதாகவே அவன் கருதினான். எனவே பதிலுக்கு தானும் அவமரியாதை செய்ய எண்ணம் தோன்றியது. கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், அருகே இறந்துகிடந்த ஒரு பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்துவந்து, அதை முனிவரின் கழுத்திலேயே மாலையாகப் போட்டான். அப்போதும் முனிவர் அசையவில்லை.
நேரம் சென்றது. விறகு எடுக்கச் சென்ற முனிகுமாரன் தன் குடிலுக்குத் திரும்பினான். தவத்தில் ஆழ்ந்திருந்த தன் தந்தையின் கழுத்தைப் பார்த்தவனுக்கு கடும் கோபம் மூண்டது. இந்தச் செயலைச் செய்தது யார் என்று சுற்று முற்றும் பார்த்தான். அரசகுமாரனே இதைச் செய்ததாக அவன் அறிந்தான்.
உடனே முனிகுமாரன், அரண்மனை நோக்கிச் சென்றான். அரசகுமாரனைக் கண்டு நடந்தது குறித்து விளக்கம் கேட்டான். பின்னர், ""செத்த பாம்பை ஒன்றுமறியாமல் இருந்த என் தந்தையின் கழுத்தில் போட்டாயல்லவா.. எனவே, நீயும் பாம்பு தீண்டி இறக்கக் கடவது'' என்று சாபம் இட்டு விறுவிறுவெனத் திரும்பிவிட்டான்.
நாட்கள் கழிந்தன. அரண்மனை ஜோதிடர்கள் அரசனின் ஜாதகத்தை ஆராய்ந்தார்கள். அவருக்கு சர்ப்ப தோஷம் கூடி வருவதை உணர்த்தினார்கள். பாம்பின் தீண்டலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள ராஜாவை மிகவும் பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள். அதன்படி, உயரமான இடத்தில் பாதுகாப்பான மண்டபம் கட்டப்பட்டது. பாம்பு உள்புக முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடம்.
முனிகுமாரனின் சாபம் பலிக்கும் நேரம் வந்தது. பாம்பு ஒன்று புழுவின் உருவை அடைந்து ஒரு பழத்தினுள் புகுந்து கொண்டது. அதை ஒருவர் எடுத்துச் சென்று மன்னனுக்குக் கொடுத்தார். அப்போது பழத்தினுள் இருந்த பாம்பு பெரிதாகி, மன்னனைத் தீண்டி மறைந்தது. விஷம் தலைக்கேறி மன்னனும் மாண்டான்.
இதுதான் ராஜா பரீட்சித்தின் சரிதம். தன் கடைசிக் காலத்தில் ஸ்ரீசுகப் பிரம்மத்தால் ஸ்ரீமத் பாகவதம் கேட்டு நற்கதி அடைந்தார் பரீட்சித்து மகாராஜா. ஸ்ரீமந் நாராயணனின் அருளால் ராஜா நற்கதி அடைந்தபோதும், விஷ்ணு பக்தரான அவரைத் தீண்டிய பாவம் பீடித்ததால், அந்தப் பாம்பு சாபத்தை அடைந்தது. இந்த சாபத்தில் இருந்து விடுபட என்ன செய்வது என்று ஸ்ரீ விஷ்ணுவை நோக்கி தவம் இருந்து கேட்டது அந்தப் பாம்பு. அதற்காக நேரில் தோன்றிய ஸ்ரீவிஷ்ணு, சாப விமோசனத்துக்கு வழியும் கூறி, தன்னை வழிபட்ட பாம்புக்கு வரமும் தந்தருளினார். அந்தப் பாம்பே கார்க்கோடகன். ஸ்ரீ நள மகாராஜாவைத் தீண்டி அவரின் சாபத்துக்கு வழி ஏற்படுத்தியதும் இந்தப் பாம்புதான். எனவே, இவ்விரு சாபங்களில் இருந்தும் விடுதலை பெற பகவானை நோக்கி கார்க்கோடகன் தவம் செய்த பூமியே இன்று கோடகநல்லூர் என்று அழைக்கப்படும் கார்க்கோடகநல்லூர் திருத்தலம். இங்கே கார்க்கோடகன் என்னும் பாம்புக்கு பகவான் சாப விமோசனம் அளித்ததுடன், சர்ப்ப தோஷத்தால் அவதிப்படுபவர்களின் தோஷங்களையும் நீக்கி அருள்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருந்து சுத்தமல்லி வழியாக சேரன்மகாதேவி செல்லும் சாலையில் கல்லூர் விலக்கு என்ற நிறுத்தம் உள்ளது. அங்கே இறங்கி சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றை நோக்கிச் செல்லும் கிராமச் சாலையில் சென்றால் இந்தக் கோவிலை அடையலாம்.
பாரம்பரிய பாண்டிய நாட்டு கட்டட அமைப்பில் கோயில் திகழ்கிறது. கோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும் மண்டபம், கொடி மரம் இவற்றைக் கடந்து பிராகார வலம் வந்தால் சிறிய சந்நிதிகளைக் காணலாம். பட்சிராஜர் கருடன் சந்நிதி. பின்னர் சந்தானகோபாலன், நவநீதகிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதிகள் உள்ளன. இங்கே நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தனியாக சந்நிதி கொண்டுள்ளனர். ஆழ்வார்களுடன் ஸ்ரீராமானுஜர், தேசிகாசார்யர் ஆகிய ஆசார்யர்களும் சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர். கருவறையில் ஸ்ரீபிருஹன் மாதவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக தரிசனம் தருகிறார். மூலவர் திருமேனி சுதை வடிவிலானது. எனவே திருமஞ்சனம் உள்ளிட்டவை கிடையாது. உபயநாச்சிமாரோடு திகழும் உற்ஸவருக்கே திருமஞ்சனம் உண்டு. அருகே ஸ்ரீசக்கரத்தாழ்வார். கார்க்கோடகனின் விஷம் நீக்கும் தன்மையராக நீல நிறத் திருமேனியில் மூலவர் ஸ்ரீபிருஹன் மாதவர் அழகுறத் திகழ்கிறார்.
சர்ப்பதோஷ நிவர்த்தி: கார்க்கோடகனுக்கு அருளிய இந்தத் தலத்தில் காளஹஸ்தியில் செய்வது போல் சர்ப்ப தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியிலோ, அல்லது அவற்றில் இருந்து இரண்டாம் இடத்திலோ இருந்து இத்தகைய தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், வாழ்வில் தடை தாமதங்களைச் சந்திப்பவர்கள், இங்கே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்துகொள்கின்றனர். மேலும், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷங்களால் திருமணம் தடைபடும் பெண்கள் இங்கே வந்து சாந்தி பரிகாரம் செய்துகொள்கிறார்கள்.
நாகர் சந்நிதி: ராகு-கேது பரிகாரம் செய்துகொள்பவர்கள், வெளியே உள்ள நாகர் சந்நிதியில் விளக்கு ஏற்றி வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். மஞ்சள் பிடித்து, சந்நிதியில் இருந்து நாகர் உருவ பிரதிமையை வஸ்திரத்தில் எடுத்து வந்து, நாகரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
நவதானியங்களை வைத்துக் கொண்டு, ராகு- கேது காயத்ரி மந்திரம் சொல்லி, பின்னர் பெருமாள் சந்நிதியை 9 முறை வலம் வர வேண்டும். பெருமாள் சந்நிதியில் பரிகாரம் மேற்கொள்பவர் பெயரில் அர்ச்சனை செய்யப்படும். பிறகு நீராஞ்சனம் செய்யப்பட்டு, பழைய வஸ்திரத்துடன் தாமிரபரணி ஆற்றில் மூன்று முறை முழுக்கிட்டு பழைய வஸ்திரத்தை ஆற்றில் விட்டுவிட்டு, கரையேறி பின்னர் பெருமாளை தரிசிக்க வேண்டும்.
சந்நிதி தரிசன நேரம்: காலை 7-11 மாலை 4-7.30
இருப்பிடம்: திருநெல்வேலி - சேரன்மகாதேவி சாலையில் கல்லூர் விலக்கு நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. ஆட்டோ வசதி உண்டு.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவ கைலாயத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்ரீகைலாசநாதர் கோயில், அருகில்தான் உள்ளது.
தகவலுக்கு: 94862 72556 94432 51906
- மனத்துக்கினியான்
படங்கள் : வி.எம்.இசக்கி